86. அறவர் வாழ்க!

பாடியவர் : நக்கீரர்.
திணை : பாலை.
துறை : குறித்த பருவத்தின் வினை முடித்து வந்தமை கேட்ட தோழி, தலைவிக்கு உரைத்தது.

[(து–வி) 'இளவேனிற் பருவத்தே வருவேன்' எனக்கூறிப் பிரிந்து சென்ற தலைவன், சொன்னபடியே வந்ததறிந்த தோழி, தலைவிபாற் சென்று இவ்வாறு அவனைப் போற்றுகின்றாள்.]

அறவர், வாழி தோழி! மறவர்
வேல்என விரிந்த கதுப்பின் தோல
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்
கடும்பனி அற்சிரம், நடுங்கக் காண்தகக்
கைவில் வினைவன் தையுபு சொரிந்த 5

சுரிதக உருவின ஆகிப் பெரிய
கோங்கம் குவிமுகை அவிழ ஈங்கை
நல்தளிர் நயவர நுடங்கும்
முற்றா வேனில் முன்னிவந் தோரே!

தோழி! வீரமறவரது கையிடத்துள்ள வேற்படையினைப்போல, விரிந்த மேற்கதுப்பாகிய தோலையுடைய வெள்ளி வட்டிலைப் போன்ற வெள்ளிய மலர்களைப் பகன்றையானது மலர்ந்திருக்கும், கடிய முன்பனியை உடையது அற்சிரக்காலம். அக்காலத்தே, நாம் நடுக்கங் கொள்ளுமாறு நம்மைப் பிரிந்து போயினவர் நம் தலைவர். கண்டினபுறத்தக்கபடி சமைக்கும் கைவினைத் தொழிலிலே வல்லானாகிய தொழில் வல்லான் ஒருவன். கற்களையிட்டு இழைத்துச் செய்த பொன்னாலாகிய சுரிதகத்தின் வடிவத்தை உடையவாகிப் பெரிய கோங்கினது குவிந்திருந்த முகைகள் மலர்ச்சி கொள்ளும். ஈங்கையது நல்ல தளிர்கள், கண்டார் விருப்புறும் வண்ணம் நுடக்கம் பெற்று விளங்கும். இத்தகைய முதிராத இளவேனிற் காலத்தினைக் கருதினராக, நம் தலைவரும் நம்பால் வந்து சேர்ந்தனர். அவர்தாம் அறநெறியாளர்! அவர் நெடிது வாழ்வாராக.

கருத்து : 'சொன்ன சொற் பிழையாராய் அவரும் குறித்த காலத்தே வந்தனர்; இனி நீயும் நின் வாட்டத்தைக் கைவிட்டுக் கூடி மகிழ்ந்திருப்பாயாக' என்பதாகும்.

சொற்பொருள் : அறவர் – அறநெறியாளர்; வாய்ம்மை தவறாதவர். கதுப்பு – பூவின் புறவிதழாகிய மேல் தோடு. பாண்டில் – வட்டில்; பகன்றைப்பூ வட்டிலைப் போல்வதென்பது, 'பகன்றை, நீலுண் பச்சை நிறமறைத் தடைச்சிய, தோலெறி பாண்டிலின், வாலிய மலர' (அகம். 217:6–8) என்பதனாலும் விளங்கும். அற்சிரம் – முன்பனி; மார்கழி தை மாதங்கள். தையுபு சொரிந்த – இட்டு இழைத்துச் செய்த. சுரிதகம் – தலையணி; முறுக்கிட்டுச் செய்யப்படும் கற்பதித்த ஒரு நகை. நுடக்கம் – தள்ளாட்டம்; மெல்லென அசைந்தாடுதல். முன்னி – கருதி.

விளக்கம் : மார்கழி தையாகிய முன்பனிக் காலத்தே வினைமேற் பிரிந்து சென்றானாகிய தலைவன் இளவேனிற் பருவத்தே மீண்டு வந்ததனால், குறித்தபடி வந்த மகிழ்வைத் தோழி கூறிப் பாராட்டுகின்றாள். கோடையிற் பிரிந்து கார்த் தொடக்கத்தில் மீள்வதே பொதுமரபாக, இது காலமல்லாக் காலத்துப் பிரிதலாக இருத்தலின், இதனை அரசவினை கருதிப் பிரித்த பிரிவாகக் கொள்க. இது குறித்தே, 'மறவர் வேலென விரிந்த கதுப்பின் தோல் பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் கடும்பனி அற்சிரம்' என்று, அது காலைப் பிரிவாற்றாமையால் தலைவி துயருற்ற தன்மையினைக் கூறினளாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/086&oldid=1731517" இலிருந்து மீள்விக்கப்பட்டது