90. அவை பயனற்றது!

பாடியவர் : அஞ்சில் அஞ்சியார்.
திணை : மருதம்.
துறை : தோழி தலைமகளுக்கு உரைப்பாளாய்ப் பாணனை நெருங்கி வாயில் மறுத்தது.
[(து–வி.) பரத்தையிற் பிரிந்தானாகிய ஒரு தலைவனுக்கு வாயிலாக வந்து, தலைவியின் உறவினைத் தலைவன் விரும்பினமை கூறி நின்றனன் பாணன் ஒருவன். அவன் பேச்சைக் கேட்ட தோழி, தலைவிக்கு உரைப்பாள் போல அவனை மறுத்துக் கூறுகின்றாள்.]

ஆடுகியல் விழவின் அழுங்கல் மூதூர்,
உடையோர் பன்மையின் பெருங்கை தூவா.
வறன்இல் புலைத்தி எல்லித் தோய்த்த
புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர ஓடிப் 5
பெருங்களிறு நாலும் இரும்பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க ஊங்காள்
அழுதனள் பெயரும் அம்சில் ஓதி
நல்கூர் பெண்டின் சில்வளைக் குறுமகள்
ஊசல் உறுதொழில் பூசல் கூட்டா
நயன்இல் மாக்களொடு கெழீஇப் 10
பயன்இன்று அம்ம இவ் வேநதுடை அவையே!

கூத்தாட்டு நிகழ்கின்ற விழாக்களின் ஒலியைக் கொண்டிருப்பது இம் மூதூர். இதனிடத்தே ஒலிப்பதற்குரிய உடைகளையிடுவோர் பலராதலினாலே, பெரிதும் கை ஓயாதாளாகத் தொழில் செய்திருப்பாள் ஆடையொலிப்பவள். அவள்தான், இரவிலே தோய்த்துக் கஞ்சியிட்டுப் புலர்த்தித் தந்த சிறு பூத்தொழிலையுடைய மல்லாடையுடனே, பொன்னரிமாலையும் தன்பாற் கிடந்து அசைந்தாடுமாறு ஓடிச்சென்று, கரிய பனையினது பெரிதான கயிற்றுப் பிணையலிலே பிணைக்கப்பட்டுத் தொங்கும் ஊசலிலே ஏறினாள். ஏறியிருந்தவள், பூப்போலும் கண்களை உடையவரான தன் ஆயமகளிர் தன்னை ஊக்கிச் செலுத்தவும் தான் ஊசலமர்ந்து ஆடாளாயினள். அழகிய சிலவாகிய கூந்தலையுடைய மனைமாண்பிற் குறைபாடுடைய பரத்தையொருத்தியின், சிலவாகிய வளைகளை அணிந்த ஓர் இளமகள் அவள். அவள் அதன்பின் அழுதபடியே அவ்விடம் விட்டு அகன்று போதலையும் செய்தாள். அதுகண்டும். இவ்வேந்தனைத் தலைவனாக உடைய அவையானது. அவளை மீண்டும் ஊசலயரும் தொழிலிடத்தே செலுத்தி. ஆரவாரத்தை உண்டாகுமாறு செய்யாத அன்பற்ற மக்களோடும் கூடி நிறைந்ததாயிருந்ததே! அதனால், அது நமக்குப் பயனுடைத்தாகாது காண்பாயாக!

கருத்து : 'குறுமகள் மீதே அன்பற்று வாளாவிருந்தவன் அவள் ஊடிய அதனாற்றான் இவ்விடத்து நம்பாலே வந்தனன் போலும்' என்பதாம்.

சொற்பொருள் : அழுங்கல் – ஆரவாரம். கைதூவா – கை ஓயாத, புகாப்புகர் – கஞ்சிப் பசை, வாடாமாலை – பொன்னரி மாலை. நல்கூர் பெண்டு – வறுமையுற்ற பெண்: பரத்தையின் தாயைக் குறித்தது.

விளக்கம் : உடையோர் – உடையினை ஒலித்தற்குப் போடுவோர். இவர் மிகுதிப்படுதலால், புலைத்தி இரவினும் கைஒயாளாய் ஒலிக்கவாயினாள். அப் பரத்தைபால் தொடர்புடையவன் தலைவன்: 'அன்று அவள் ஊடி அகன்று போதலினாலே, இன்று மனைநாட்டம் பெற்றோனாக வந்து தலைவியைக் கருதினான் போலும்?' என்கின்றாள். 'ஆடியல் விழாவின் அழுங்கல் மூதூர்' என்றது, மருத நிலத்தின் வளமைச் சிறப்பினையும், அதன்கண் வாழ்வோரது இன்ப நாட்டங்களையும் காட்டுவதாம். 'ஆயம் ஊக்க ஊங்காள்' என்றது, அவள் தான் தலைவன் வந்து தன்னை ஊக்குவதனை எதிர்பார்த்தமையும், அவன் வராதுபோயினனாகவே, தான் ஊசலாட விருப்பம் இல்லாதாளாய் வெறுப்புற்று அழுதுகொண்டே அகன்றமையும் கூறியதாம்.

'சில்வளைக் குறுமகளாகிய அவளையே, அவள்பால் அருளின்றிக் கலங்கியழச் செய்த கன்னெஞ்சினன், புதல்வனைப் பெற்றுத் தளர்ந்திருக்கும் தலைவிபாற் காதலுற்று வருதல் என்பது பொருத்தமற்றது' என்றனள். அன்றி, 'அவளையும் வெறுத்து மனந்திரும்பி வருகின்ற சிறப்பினன்' என, வாயில் மறுப்பாள்போலத் தலைவனை ஏற்குமாறு தலைவிபால் வற்புறுத்தியதாகவும் கொள்க.

மேற்கோள் : 'தலைவனோடு ஊடியிருக்கும் தலைவி, வாயில் வந்த பாணனைக் குறித்துக் கூறியது இது' எனக்கொள்வர் நச்சினார்க்கினியர்—(தொல். பொருள்.சூ.147 உரை .) ஆசிரியர் இளம்பூரணனாரும் 'இது பாங்கனைக் குறித்துத் தலைவி கூறியது' என்பர் (தொல். பொருள். 145. உரை).

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/090&oldid=1731529" இலிருந்து மீள்விக்கப்பட்டது