91. நீ உணர்ந்தாயோ!

பாடியவர் : பிசிராந்தையார்.
திணை : நெய்தல்.
துறை : தோழி தலைமகட்கு வரைவு மலிந்து உரைத்தது.

[(து–வி.) வரைபொருட்குப் பிரிந்து சென்றான் தலைவன், அத் தலைவனின் பிரிவாலே, தலைவி மிகவும் வருத்தமுற்று நலிந்திருந்தனள். ஒரு நாட் பகல் வேளையிலே பலருங்காண அவனை இல்லிடத்து வரக்கண்டாள் தோழி. அவன் வரைந்து வருதலான செய்தியை யூகித்தாளாகத் தலைவிபாற் சென்று இவ்வாறு கூறுகின்றாள்.]

நீ உணர்ந் தனையே தோழி! வீஉகப்
புன்னை பூத்த இன்நிழல் உயர்கரைப்
பாடு இமிழ் பனிக்கடல் துழைஇப் பெடையொடு
உடங்கிரை தேரும் தடந்தாள் நாரை
ஐய சிறுகண் செங்கடைச் சிறுமீன் 5
மேக்குஉயர் சினையின் மீமிசைக் குடம்பைத்
தாய்ப்பயிர் பிள்ளை வாய்ப்படச் சொரியும்
கானலம் படப்பை ஆனா வண்மகிழ்ப்
பெருநல் ஈகைநம் சிறுகுடிப் பொலியப்
புள்ளுயிர்க் கொட்பின் வள்ளுயிர் மணித்தார்க் 10
கடுமாப் பூண்ட நெடுந்தேர்
நெடுநீர்ச் சேர்ப்பன் பகல்இவண் வரவே?

தோழி! ஒலி முழக்கினையுடையதும் குளிர்ச்சியானதுமான கடலிடத்தே சென்று துழாவித், தன் பெடையோடுங் கூடியதாக ஒருங்கே இரை தேடி வருகின்ற நெடுங்கால்களையுடைய நாரையானது. மெல்வியதாய்ச் சிவந்த சிறிய கண்களைக் கொண்ட சிறுமீனைப் பற்றியதும், இனிதான நிழற்பரப்பைக் கொண்ட உயரமான கரையிடத்தேயுள்ள மலருதிரப் பூத்திருக்கும் புன்னை மரத்திடத்து, மேலோங்கி உயர்ந்துள்ள கிளையின் மேலுள்ள கூட்டிலேயிருந்தவாறு, பசியினாலே தாயை அழைத்தபடி கூவியிருக்கும் குஞ்சினது வாயுள் வீழுமாறு கொண்டு சொரிதலைச் செய்யும். அத்தன்மையதான கடற்கரைச் சோலையினையும், அழகிதான கொல்லையினையும். கெடாத வளமிக்க உணவினையும், பெரிதான நல்ல ஈகைப் பண்பினையும் உடையதான நம் சிறு குடியிருப்பும் அழகு பெற்றது. அங்ஙனம் அழகு பெறுமாறு, புள்ளினம் ஒலித்தாற்போலச் சுழன்று முழக்கும் வளவிய ஒலியையுடைய மணிமாலையினை அணிந்த, கடிதாகச் செல்லும் குதிரை பூட்டிய நெடுந்தேரிணை ஊர்ந்தானாக, நெடிதான கடற்கரைக்குரிய தலைவனான நம் சேர்ப்பனும், பசுற்போதிலேயே இவ்விடத்து விரைந்து வருகின்றனன். இதனை நீயும் உணர்ந்தனையோ?

கருத்து : 'ஊரறிய நின்னை வரைந்து கொள்ளற் பொருட்டுத் தலைவன் இங்கே வருகின்றனன்' என்பதாம்.

சொற்பொருள் : உடங்குஇரை தேரும் – ஒருசேரச்சென்று இரைதேடும். பிள்ளை – நாரைக் குஞ்சு. கொட்பு சுழற்சி. கடுமா – கடிதாக ஓடும் குதிரை.

விளக்கம் : 'புன்னை பூத்து மலர் சொரியும்' என்றது, மணத்துக்கு உரியதான காலத்து வரவைக் கூறியதாம்; நெய்தல் நிலத்திற் புன்னை பூப்பதைக் கூறுவது போலக் குறிஞ்சி நிலத்தில் வேங்கை பூப்பதைக் கூறுவது மரபு. 'வண் மகிழ்' என்றது, தலைவியது வீட்டுப் பெருவளனைச் சுட்டியது. அவர் தாம் தலைவன் அளிக்கும் பெரும் பொருளினைப் பாராட்டுவதினும், அவனது தகுதியையும் உழுவலன்பையுமே பெரிதும் கருதுவர் என்றதாம். அவரும் மறாதாராய்க் கொடை நெர்வர் என் குறிப்பாகக் கூறுவாள், 'பெருநல் ஈகை' உடையாரென, அவரது ஈத்துவக்கும் இயல்பினைக் கூறினாள். 'பகல் வரவு' என்றது, களவை ஒதுக்கி வரைதற்குரிய தகைமையோடு பலரும் காணுமாறு வருகின்ற தன்மையைக் கண்டு கூறியதாம்.

உள்ளுறை : 'கூட்டிலிருந்தபடி தாயைக் கூவியழைக்கும் குஞ்சுக்குத், தாயோடு கடலிடத்து இரைதேடச் சென்ற நாரையானது, சிறுமீனைக் கொணந்து வாயிடத்தே சொரியும் கானல்' என்றது, தாயாற் காக்கப்படும் தலைவியது காதலைத் தந்தை நிறைவேற்ற முற்பட்டனனாய்த் தலைவனை அவளோடும் மணங்கூட்டி மகிழ்விப்பான் என்பதாம். வரைபொருட்குச் சென்ற தலைவன், தலைவியின் வீட்டார் விரும்பிய பொருளைத் தந்து தலைவியைப் பெறுவானாகி, அவள் நலிவைத் தீர்ப்பான் என்பதும் ஆம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/091&oldid=1731532" இலிருந்து மீள்விக்கப்பட்டது