96. பைஇப் பையப் பசந்தனை!

பாடியவர் : கோக்குளமுற்றனார். திணை : நெய்தல். துறை : சிறைப்புறமாகத் தோழி தலைவிக்கு உரைப்பாளாய் வரைவு கடாயது.

[(து–வி ) சிறைப்புறத்தானாகிய தலைவன் கேட்டு வரைந்து கோடலிலே தன்னுள்ளத்தைச் செலுத்துமாறு, தலைவிக்குச் சொல்லுவாள் போல, அவனும் கேட்குமாறு தோழி சொல்லுகின்றாள்.]

'இதுவே, நறுவீ ஞாழல் மாமலர் தாஅய்ப்
புன்னை ததைந்த வெண்மணல் ஒருசிறைப்
புதுவது புணர்ந்த பொழிலே; உதுவே;
பொம்மற் படுதிரை நம்மோடு ஆடிப்
புறந்தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால் 5
துவரினர் அருளிய துறையே; அதுவே,
கொடுங்கழி நிவந்த நெடுங்கால் நெய்தல்
அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇத்
தமியர் சென்ற கானல்' என்று ஆங்கு 10
உள்ளுதோறு உள்ளுதோறு உருகி,
பைஇப் பையப் பசந்தனை பசப்பே!

தோழீ! நறுமணங்கொண்ட ஞாழலது சிறந்த மலரும். புன்னையது சிறந்த மலரும் ஒருங்கே உதிர்ந்து பரவிக் கிடக்கின்ற வெண்மணற் பாங்கின் ஒருபக்கத்தே. புதிதாகத் தலைவனோடு கூடிப்பெற்ற இன்பத்திற்கு இடமாயிருந்த பொழிலும் இதுவேயாகும் என்றும்,

பொலிவுடைய கடற்றுறையிடத்தே என்னோடும் சேர்ந்து கடல்விளையாட்டினை அயர்ந்தபின், என் முதுகுப்புறத்தே தாழ்ந்து இருண்டு விளங்கிய ஐம்பகுதியாகப் பகுத்து முடித்தற்குரிய கூந்தலை ஈரம்போகத் துவர்த்தினராக, எனக்கு அவர் அருளிச்செய்த கடற்றுறையும் உதுவே ]யாகும் என்றும்,

வளைந்த கழியிடத்தே உயர்ந்து தோன்றும் நெடிய தண்டையுடைய நெய்தலின், அழகாக மாறுபட்ட நெறிப்பையுடைய தழையினைக் கொய்து தொடுத்து எனக்கு அணி பெறுமாறு உடுப்பித்துவிட்டு, அவர் என்னை நீங்கித் தனியராகச் சென்ற கடற்கானலும் அதுவேயாகும் என்றும்,

அவ்வண்ணம் நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் உள்ளம் உருகினாயாய், மெல்ல மெல்லப் பசப்பினையும் அடையப்பெற்று, இவ்வேளை முற்றவும் பசலையால் மூடப் பெற்றனையே!

கருத்து : 'இனி நீ உய்யும் வழிதான் யாதோ?" என்பதாம்.

சொற்பொருள் : மாமலர் – சிறந்த மலர். 'புதுவது புணர்ந்த' – இயற்கைப் புணர்ச்சியிற் கலந்த, பொம்மல் – பொலிவு. திரையாடல் – திரையிடத்து மூழ்கியும் மேலெழுந்தும் கடல்விளையாட்டு அயர்தல். கொடுங்கழி – வளைந்த கழியிடம். பகைத்தழை – மாற்று நிறம் பெறத் தழைகளை இட்டுத் தொடுத்த தழையாடை.

விளக்கம் : 'புணர்ந்த பொழில் இது; அருளிய துறை உது; சென்ற கானல் அது' என நினைந்து நினைந்து தளர்தலால், மேனி பசந்தனள், எனக் கூறினாளாய்க், 'களவிடைச் சிறு பிரிவுக்கே இத்தன்மை நலியும் இவள்தான் இனியும் என்னாவளோ?' என இரங்கினான் தோழி. இதனைக் கேட்கும் தலைவன் தலைவியின் நலிவுக்குத் தன் பிரிவே காரணமாதலை அறிந்து வருந்துவானாய், அவளைப் பிரியாதேயிருந்து வாழ்கின்ற இல்லறவாழ்வினைத் தரும் வரைந்து கோடலிலே மனஞ்செலுத்துவான் என்று கொள்க. தலைவியர் தலைவருடன் கடலாட்டயர்வது. 'கடலுடன் ஆடியும், கானல் அல்கியும்' என வரும் குறுந்தொகை (294) யடிகளாலும் விளங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/096&oldid=1731546" இலிருந்து மீள்விக்கப்பட்டது