நற்றிணை 1/097
97. பூவிற்பாள் கொடியவள்!
- பாடியவர் : மாறன் வழுதி.
- திணை : முல்லை.
- துறை : பருவங்கண்டு ஆற்றாளாய தலைவி, தோழிக்கு உரைத்தது.
[(து–வி.) பிரிந்து சென்றானாகிய தலைவன், குறித்துச் சென்ற பருவத்தும் வாராதானாக அதனாற் பெரிதும் வருத்தி நலிந்த தலைவி, தனது துன்பத்தைத் தன் தோழிக்கு உணர்த்துகின்றாள்.]
அழுந்துபடு விழுப்புண் வழும்புவாய் புலரா
எவ்வ நெஞ்சத்து எஃகுஎறிந் தாங்குப்
பிரிவில புலம்பி நுவலும் குயிலினும்,
தேறுநீர் கெழீஇய யாறுநனி கொடிதே!
அதனினும் கொடியள் தானே, 'மதனின்
5
துய்த்தலை இதழ பைங்குருக் கத்தியொடு
பித்திகை விரவுமலர் கொள்ளீ ரோ?'என
வண்டுசூழ் வட்டியள் திரிதரும்
தண்டலை உழவர் தனிமட மகளே!
தோழீ! என் பக்கலிருந்து பிரிந்துபோகாதாய்ப் புலம்பிக் கூவும் குயிலினது குரலைக் காட்டினும். தெளிவான நீர் நிரம்பியபடி வருகின்ற ஆறானது, அழுந்தப்பட்ட பெரிய புண்ணினது வாயிடத்துள்ள நிணம் காயப்பெறாததனாலே துன்புற்றிருக்கும் மார்பினிடத்தே. வேற்படையினையும் எறிந்து மேலும் புண்படுத்தினாற் போலாயிற்று. அதனைக் காட்டினும், 'அழகான இனிய பஞ்சுபோன்ற புறவிதழ்களை உடையவான பசிய குருக்கத்தி மலருடனே விரவிய பித்திகையது மலரையும் விலைக்குக் கொள்ளீரோ?' எனக் கூறியவளாக, வண்டினம் சூழ்ந்து வட்டமிட்டபடியிருக்கும் வட்டப் பூக்குடலையோடு தெருவிலே திரிபவளான, நீர்ப்பாங்கான குளிர்ந்த இடத்திலே உள்ளவரான உழவரது ஒப்பற்ற இளமகள் பெரிதும் கொடுமை செய்பவள் ஆகின்றாளே!
கருத்து : 'இனி யான் எவ்வாறு உய்வேனோ?' என்பதாம்.
சொற்பொருள் : அழுந்து படல் – ஆழமாகப் படுதல். வழும்பு – புண். எஃகு – வேற்படை. 'புலம்பி நுவலும் குயில் – தன் காதலனை நினைந்து புலம்பியபடி கூவியிருக்கும் குயில்'.
விளக்கம் : இளவேனித் காலம் காமத்தை மிகுவிப்பது. ஆதலினாலே, குயிலின் கூவுதலைக் கேட்டதும்' அழுந்துபடு விழுப்புண் பட்டாரைப் போலத் தலைவி துன்புற்றனள். இவ்வாறு தலைவியர் குயிலின் குரலினைக் கேட்டுத் துன்புறுதலைக் குறுந்தொகை 182ஆவது செய்யுளானும், நற்றிணை 118, 157 செய்யுட்களானும் அறிக. 'அந்தளிர் மாஅத்து அலங்கல் மீமிசைச், செங்கண் இருங்குயில் நயவரக் கூஉம் இன்னிளவேனிலும் வாரார்; இன்னே வருதும் எனத் தெளித்தோரே' என வரும் அகநானூற்றுச் சீத்தலைச் சாத்தனாரின் சொற்களும் இதனை வலியுறுத்துவதாம்.
உள்ளுறை : "வண்டு சூழ் மலர் வட்டியளாகத் திரிகின்றவளைக் காண்பேன்; ஆயின், என்னை இன்புறுத்துதற்கான காதலரைத்தான் வரக்காணேன்" என்பதாம்.