99. மடவ, மலர்ந்தன!

பாடியவர் : இளந்திரையனார்.
திணை : முல்லை.
துறை : பருவங்கண்டு ஆற்றாளாய தலைவியைத் தோழி 'பருவம் அன்று' என்று வற்புறுத்தியது.

[(து–வி) தலைவன் சொன்னபடி வாராது காலந்தாழ்த்த நினைவால், தலைவியது காமநோய் பெருகத் தொடங்குகின்றது. அதனைக் கண்ட தோழி அவளது துயரத்தை மாற்றுதற்கு முயலுகின்றாள்.]

"நீர்அற வறந்த நிரம்பா நீள் இடைத்
துகில்விரித் தன்ன வெயிலவிர் உருப்பின்
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ்சுரம் இறந்தோர்
தாம்வரத் தெளித்த பருவம் காண்வர
இதுவோ?' என்றிசின் மடந்தை–மதிஇன்று, 5
மறந்துகடல் முகந்த கமஞ்சூழ் மாமழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்
'கார்' என்று அபர்ந்த உள்ளமொடு, தேர்வில
பிடவமும், கொன்றையும், கோடலும்
மடவ ஆகலின், மலர்ந்தன பலவே! 10

மடந்தையே! நெறியானது முற்றவும் நீரற்றுப்போனதாகவும், வறட்சியுற்றதாகவும், கடக்க இயலாததாகவும் காணப்படுவதாம். வெண்ணிற ஆடையினை விரித்துப் போட்டிருந்தால் ஒப்ப, அதனிடத்து வெயிலானது மிக்குப்படர்ந்து பரவியும் நிற்கும். காண்பாரை அச்சமடையச் செய்து நடுக்கத்தை உண்டாக்கும் அத்தகைய வெம்மை மிகுந்த சுரத்தினைத் தலைவரும் கடந்து சென்றுள்ளனர். அழகு பொருந்தும்படியாக நம்மைத் தெளிவித்து மீண்டும் வருவதாக அவர் குறித்துச் சென்ற பருவமும் இதுதானோ என்று நீயும் வினவுகின்றனை. முகத்தற்குரிய பருவத்தை மறந்ததால் அறிவுணர்ச்சி இல்லாது போயின மேகமானது, கடனீரைச் சென்று முகந்துகொண்டதாய் நிறைசூலுற்றுக் கார்மேகமாகவும் ஆயிற்று. மேலும், நீர்ச்சுமையினைத் தாங்கமாட்டாமையினாலே வளமான மழையாகப் பெய்தும் அதனைக் கழித்தது. அதனையே நீயும் நோக்கினை இதுவே 'கார்ப்பருவம்' என்று கருதித் தாமும் மறதிகொண்ட உள்ளத்தவாய்ப் பிடவும் கொன்றையும் காந்தளும் இன்ன பிறமலர்களும், தாமும் அறிவற்றன ஆதலினாலே, பலவாக மலர்களைத் தோற்றுவித்துள்ளன! அதனையும் காண்க!

கருத்து : 'தலைவர் குறித்துச் சென்ற கார்ப்பருவம் இஃதன்று, இஃது ஒரு வம்ப மாரிகாண்' என்பதாம்.

சொற்பொருள் : வறந்த – வறட்சியுற்ற. உருப்பு – வெப்பம். பனிக்கும் – நடுக்கஞ் செய்விக்கும். கமஞ்சூல் – நிறைசூல், மாமழை – கார்மேகம். அயர்தல் – மறத்தல். கோடல் – காந்தள். மடவ – அறிவற்றன.

விளக்கம் : வந்தது காரெனினும், தலைவியது வருத்த மிகுதியைப் போக்கக் கருதின தோழி, இவ்வாறு மறுத்து உரைக்கின்றாள். 'மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை; கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய பருவம் வாரா அளவை நெரிதரக் கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த வம்பமாரியைக் காரென மதித்தே' என வரும் குறுந்தொகைச் செய்யுளும் (66); 'பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்து அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே (குறுந். 94) என்பதும், இவ்வாறு வழங்கும் தோழி கூற்றைக் காட்டுவனவாகும். பருவம் அன்றென வற்புறுத்தலின், இதனை இருத்தல் நிமித்தமான முல்லைத்திணைச் செய்யுளாகக் கொண்டனர். கொன்றை கார்காலத்து மலரும் என்பதைக் 'கார் விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்" எனவரும் அகநானூற்றுக் கடவுள் வாழ்த்தால் உணர்க. 'கொன்றை ஒள் வீ தா அய். செல்வர் பொன்பெய் பேழை மூய்திறந்தன்ன கார் எதிர் புறவு' (குறு. 233:2.4) என்பதும் இதனைக் காட்டும். 'தலைவர் வாய்மை தவறார்; குறித்தபடி வருவார்' எனக் கூறித் தேற்றுபவள், இவ்வாறு காரின் தோற்றத்தையே மறுத்தாள்போலக் கூறுகின்றாள் என்றும் கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/099&oldid=1731556" இலிருந்து மீள்விக்கப்பட்டது