100. நகுவேன்!

பாடியவர் : பரணர்.
திணை : மருதம்.
துறை : பரத்தை தலைவிக்குப் பாங்காயினார் கேட்ப விறலிக்கு உடம்படச் சொல்லியது.

[(து–வி) தன்னைவிட்டுத் தலைவன் தலைவிபாற் சென்றதனால், அவனுறவு பெற்றிருந்த பரத்தையின் ஆத்திரம் மிகுதியாகின்றது. தன் தோழியாகிய விறலியிடம் கூறுவாள் போலத், தலைவியின் தோழியரும் கேட்குமாறு, இப்படித் தலைவனைப் பழித்து உரைக்கின்றாள்.]

உள்ளுதொறும் நகுவேன்—தோழி!—வள்ளுகிர்
மாரிக் கொக்கின் கூரல் அன்ன
குண்டுநீர் ஆம்பற் றண்துறை ஊரன்
தேன்கமழ் ஐம்பால் பற்றி, என்வயின்
வான்கோல் எல்வளை வௌவிய பூசல் 5
சினவிய முகத்துச் சினவாது சென்று,நின்
மனையோட்கு உரைப்பல்' என்றலின்,
பல்ஆ நெடுநிறை வில்லின் ஒய்யும்
தேர்வண் மலையன் முந்தை, பேர்இசைப்
புலம்புரி வயிரியர் நலம்புரி முழவின் 10
மண்ஆர் கண்ணின் அதிரும்,
நன்ன ராளன் நடுங்கஞர் நிலையே!

தோழி! மாரிக்காலத்திலே நீரிடத்தே உலாவும் நெடிதான நகங்களை உடைய கொக்கினது கூர்மையான மூக்கையொத்தபடி விளங்குவது, ஆழ்ந்த நீரிடத்தே காணப்படும் ஆம்பற்பூக்களது தோற்றம். அத்தகைய தன்மையுடைய நீர்த்துறைகளைத் கொண்ட ஊரினைச் சார்ந்தவன் நம் தலைவன். ஒருநாள், அவன்தான் நெய்ம்மணம் கமழுகின்ற என்னுடைய கூந்தலைப்பற்றி என்னை இழுத்தான். என் கையிடத்தே உள்ளவான கோற்றொழில் அமைந்த வெளிய ஒளியுடைய வளைகளைக் சுழற்றிக் கொள்ளலையும் தொடங்கினான். அதனாற் சினங்கொண்ட நான், என் முகத்திடத்தே சினக்குறிப்பினைக் காட்டாது, 'இச் செயலை நின் மனைவியிடத்தே சென்று யான் உரைப்பேன்' என்றேன். அதனைக் கேட்டதும்—

பகைவரது செருமுனையிடத்து, ஊர்க்கண்ணே உள்ள பலவான நெடிதான ஆனிரைகளையும், தன் வில்லின் ஆற்றலினாலே வென்று தன் நாட்டிற்கு ஓட்டிவருபவன் இரவலர்க்குத் தேரீந்து மகிழும் வண்மையாளனாகிய மலையமான். அவனுடைய திருவோலக்கத்தின் முன்பாக, வேற்று நாட்டிலிருந்து வந்தாரான பேரிசைவன்மை கொண்ட கூத்தர்கள், தமக்கு நன்மையைப்பெரு விரும்பினராய் முழக்குகின்ற முழவின் மார்ச்சனை வைத்த கண்ணிடம் அதிர்வதனைப்போல அதிர்ச்சி அடைந்தான். நன்மையை விரும்புவோனாகிய அவன், அவ்வாறு நடுங்கிநின்ற அந்த நிலையினை நினைக்குந்தோறும், யானும் என்னுள்ளேயே நகை கொள்வேனடீ!

கருத்து : 'அவன் என்னை மறந்திருக்க மாட்டாதான்' என்பதாம்.

சொற்பொருள் : வள் உகிர் – நெடிய நகம். மாரிக்கொக்கு – மாரிக் காலத்தே காலத்தே காணப்படும் கொக்கு; ஆம்பலின் முகைகட்குக் கொக்கின் மூக்கு உவமையாயிற்று. கூரல் – கூரிய அலகு, குண்டு நீர் – ஆழமான நீர், வான் – வெண்மை. எல் வளை – ஒளி கொண்ட வளை. தேம் – நெய்; தேன்மணமும் ஆம். ஐம்பால் – கூந்தல். மலையன் – மலையமான் திருமுடிக்காரி. முந்தை – முன்னிடத்தாக. வயிரியர் – கூத்தர்.

விளக்கம் : 'குண்டு நீர்' ஆழமான நீர் நிலை என்பதனைத் 'தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளை' என வரும் கபிலர் வாக்கால் அறியலாம் (புறம் 116 : 1.). இரவலர்க்குத் தேரீந்து சிறப்பிக்கும் வள்ளல்களுள் ஒருவனாதலின், 'தேர்வண் மலையன்' என்றனர். இவ்வாறே, 'தேர் வண் பாரி' (புறம் 118) எனப் பிறர் உரைப்பதனையும் ஒப்பிட்டுக் காண்க. 'ஐம்பால் பற்றி வவளவௌவிய பூசலை மனையோட்கு உரைப்பல்' என்றதும், அவன் நடுங்கியது, அவள் தன்னை அத்துணைக் கொடியவன் என்று கருதக்கூடுமே என்பதனால். இதனால் அவனுக்குத் தன் மனைவிபால் இருந்த மதிப்பும் அறியப்படும். இச்செய்தியைத் தோழியர்வழிக் கேட்கும் தலைவி, தலைவன்பால் ஊடினவளாக ஒதுக்குதலைச் செய்வாள் எனவும், அதன்பின் அவன் தன்பால் வருவான் எனவும், பரத்தை கனவு காண்கின்றாள்.

மேற்கோள் : 'இது மனையோட்கு உரைப்பல் என்றலின் நடுங்கினான் என்றது' என்னும் குறிப்புடன், கற்பியல் 151ஆம் சூத்திர உரையிடத்து மேற்கோளாகக் காட்டினர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். 'ஒருபாற் கிளவி' என்னும் பொருளியல் சூத்திர உரைக்கண் ஊடல் குறித்து வந்ததற்கு இச்செய்யுளை இளம்பூரணவடிகள் காட்டுவர்.

பிற பாடங்கள் : கூரலகன்ன, எம்வயின் சினவிய முகத்தம், புலம்பிரி வயிரியர், நெடுநெறி.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/100&oldid=1731560" இலிருந்து மீள்விக்கப்பட்டது