101. தங்குதற்கு இனிது!

பாடியவர் : வெள்ளியந் தின்னனார்.
திணை : நெய்தல்
துறை : பின்னின்ற தலைமகன், தோழி கேட்பச் சொல்லியது.

[(து–வி.) நங்கை நல்லான் ஒருத்தியைக் கண்டு காமுற்று நலிந்தானாகிய ஒரு தலைவன், அவளைத் தனக்குக் கூட்டுவித்து உதவுதற்கு வேண்டியவனாக, அவளுடைய தோழிபாற் சென்று தன் குறையைத் தெரிவித்து இரந்து நிற்கின்றான். அவன் அதற்கிசைய மறுக்கவே, அவன், அவள் கேட்குமாறு தன் நெஞ்சுக்குக் கூறுவான்போல இப்படிக் கூறிக்கொள்ளுகின்றான்.]

முற்றா மஞ்சட் பசும்புறம் கடுப்பச்
சுற்றிய பிணர சூழ்கழி இறவின்
கணங்கொள் குப்பை உணங்குதிறன் நோக்கிப்
புன்னைஅம் கொழுநிழல் முன்உய்த்துப் பரப்பும்
துறைநணி இருந்த பாக்கமும் உறைநனி 5
இனிதுமன்; அளிதோ தானே—துனிதீர்ந்து
அகன்ற அல்குல் ஐதுஅமை நுசுப்பின்
மீன்எறி பரதவர் மடமகள்
மான்அமர் நோக்கம் காணா ஊங்கே!

அவள் தான் முற்றவும் வருத்தம் தீர்ந்ததாய் அகன்று பரந்திருக்கின்ற அல்குல் தடத்தினள்; மெல்லிதாக அமைந்திருக்கும் இடையினள்; மீன் வேட்டமாடி வாழ்வோரான பரதவரது மகள்; இளமைச் செவ்வியினையும் உடையவள்; மானின் நோக்கோடும் மாறுபாடுடையதான அமர்ந்த கண்களின் நோக்கில் யானும் படுவதற்கு முன்பாக, முற்றாத இளமஞ்சளது பசிய மேற்புறத்தைப்போல தோன்றும் சருச்சரையினைக் கொண்ட இறாமீனினது கூட்டங்கொண்ட தொகுதிகள் சூழ்ந்த கழியிடத்தே மிகுதியாகக் காணப்படும்; அவற்றை வேட்டம்கொண்டு, புன்னைக் கொழுநிழல் அழகிதாக விளங்கும் இடத்திற்கு எதிர்ப்படவிருக்கும் வெயிற்புறத்தே காயவிட்டிருப்பர். இறாமீனின் குவியல் காய்வதை ஆராய்ந்தபடியே நிழலிடத்தே காவலுமிருப்பர் இப்பாக்கத்துப் பெண்கள். இத் தன்மைகொண்ட துறைக்கு அண்மையிடத்ததான இப்பக்கமும் இனிதாயிருந்தது. அவளாற் பெற்ற காமநோயினாலே, அதுவும் இப்போது இரங்கத்தக்க தாயிற்றே! இனி எங்ஙனம் யானும் உய்வேனோ?

கருத்து : 'இயற்கையின் இன்பத்தையும் என்னுள்ளம் இதுகாலை வெறுப்பதாகின்றது' என்பதாகும்.

சொற்பொருள் : முற்றா மஞ்சள் – இள மஞ்சள்! பசு மஞ்சள் எனவும் உரைப்பர். பிணர் – சருச்சரை. ஐது, மெல்லிது; நுண்ணிதுமாம்.

விளக்கம் : இறாமீன் குவியலைக் காயவைத்திருக்கின்றதனாலே எழுகின்ற புலால்நாற்றம் புன்னைப் புதுமலரது நறுநாற்றத்தாலே அகன்று போகின்றாற்போல, என் காம நோய்மிகுதியினாலே வந்துற்ற நலிவும், அவளோடு கூடி மணம் பெறுவதனாலே நீங்கிப் போம்' என்கின்றான்.'தாம் நிழலிடத்திருந்தபடி, இறாலின் குவியல் வெயிலிற் கிடந்து காய்வதை ஆய்ந்தபடி, அவற்றது உயிர்நீக்கத்தைப் பற்றிச் சற்றேனும் கவலையுறாது வாழ்கின்ற கொடிய இயல்பினரான பரதவரது மகளிராதலின், தன் துயரத்தைப்பற்றியும் கவலைகொள்ளாராய்த் தனக்கு அருள்செய்யாராய்த் தன்னையும் வெறுத்துப் போக்குகின்றனர்' எனக் கூறினனுமாம். வளைந்து வளைந்து நெடுகக் கிடக்கும் கழியாதலின் 'சூழ்கழி' என்றனர். கழியில் இறாமீன் உளவென்பது. 'அருங்கழிக் கொண்ட இறவின் வாடலொடு' (குறு. 320:2) என்பதனாலும், தெண்கழி சேயிறாப் படூஉம் (ஐங்.196:2) என்பதனாலும் உறுதிப்படும். தலைவியைத் தலைவன் கண்டு காமுற்ற இடம் அதுவெனக் குறியிடத்தை உணர்த்தியதும் ஆம்.

இதனால், தலைவி அவனோடு பண்டே களவுறவினைப் பெற்றவள் என்றறியும் தோழியும், தலைவனது வேண்டுகோளுக்கு இசைவாள் என்பதாம்.

மேற்கோள் : 'வரைதற் பொருட்டுத் தலைவர் வேறுபாட்டிற்கு ஆற்றாத தோழி, சிறைப்புறமாகக் கூறியது' எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். அகத் 22 உரை. மேற்கோள்.) இங்ஙனமாயின், இச் செய்யுள் தோழி கூற்றாக அமையும். அதற்கேற்பப் பொருளுரைத்துக் கோடலும் பொருந்துவதாகும். தலைவியை விரைய வரைந்து வந்து மணந்துகொண்டு, ஊரிடத்து எழுந்துள்ள அவருரையினைப் போக்குக என அவள் அறிவுறுத்தியதாகக் கொள்க.

பிற பாடம் : 'மாணமர் நோக்கம்'

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/101&oldid=1731563" இலிருந்து மீள்விக்கப்பட்டது