நற்றிணை 1/123
123. நோயினைக் கூறாய்!
- பாடியவர் : காஞ்சிப் புலவனார்.
- திணை : தெங்கல்.
- துறை : தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச் சொல்லியது.
[(து–வி.) களவொழுக்கப் பிரிவினாலே கலங்கி வருந்தும் தலைவியது தன்மையைத் தலைவனுக்கு உணர்த்தி, விரைய வந்து அவளை வரைந்து கொள்ளுதற்குத் தூண்டுதலை நினைக்கின்றாள் தோழி. ஒரு சமயம் அவன் சிறைப் புறத்தானாதலை அறிந்தவள், தலைவிக்குச் சொல்லுவாள் போல அவனும் கேட்டுணருமாறு இப்படிக் கூறுகின்றாள்.]
உரையாய் வாழி, தோழி! இருங்கழி
இரைஆர் குருகின் நிரைபறைத் தொழுதி
வாங்குமடற் குடம்பை, தூங்கு இருள் துவன்றும்
பெண்ணை ஓங்கிய வெண்மணற் படப்பை
கானல் ஆயமொடு காலைக் குற்ற
5
கள்கமழ் அலரத் தண்நறுங் காவி
அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇ
வரிபுனை சிற்றில் பரிசிறந்து ஓடித்
புலவுத்திரை உதைத்த கொடுந்தாட் கண்டல்
சேர்ப்புஏர் ஈர்அளை அலவன் பார்க்கும்
10
சிறுவிளை யாடலும் அழுங்கி
நினைக்குறு பெருந்துயர் ஆகிய நோயே!
தோழீ! வாழ்வாயாக! சருங்கழியிடத்தே இரைதேடி உண்பவான கடற்புட்களின் நிரையாகிய பறவைக் கூட்டம், வளைந்த பனைமடற்கண்ணே தாம் கட்டியுள்ள கூடுகளிற் சென்று, நிறைந்த இருட்போதிலே நெருங்கி உறைந்திருக்கும். அத்தகைய பனைமரங்கள் உயரமாக வளர்ந்திருக்கும் வெண்மையான மணற்கொல்லையைச் சூழ்ந்த கானலிடத்தே நின் விளையாட்டுத் தோழியரோடுஞ் சென்று. காலையில் கொய்து கொணர்ந்த தேன் கமழும் இதழ்களையுடைய தண்ணிய நறிய காவிமலர்களை, மாறுபட்டு அழகுதரும் நெறிப்பையுடைய தழைகளுடன் அழகுபெறத் தொடுத்து உடுத்திருப்பாய், கோலமிழைத்த சிற்றிலை இழைத்துப் பின் சிறப்பாக விரைந்து ஓடியும் செல்வாய். புலவு நாற்றத்தையுடைய அலைகள் மோதிய வளைந்த கால்களையுடைய கண்டலது வேரின் கீழாக, அளையிடத்து இரண்டிரண்டாக அழகுடனே இருக்கின்ற நண்டுகளைப் பார்த்தும் மகிழ்வாய். அத்தகைய நின் சிறுவிளையாடலையும் கைவிட்டு விடும்படியாக, நீ நினைவிற்கொண்டு அடையும் பெருந்துயரத்திற்குக் காரணமாகிய நோய்தான் யாதென எனக்குக் கூறாயோ?
கருத்து : 'நின் களவுறவால் நின் செயலிடத்துப் பல மாற்றங்கள் தோன்றுவதனைப் பிறர் அறியின் அலராகுமே?' என்பதாம். விளையாடலையும் மறந்து பிரிவுப் பெருநோயால் நலிகின்றனள் என்பதுமாம்.
சொற்பொருள் : குருகு – கடற்புள்: நாரையும் ஆம். பறைத் தொழுதி – பறவைக் கூட்டம், துவன்றும் – நெருங்கி உறையும். குறுதல் – பறித்தல். காவி – செங்கழுநீர் மலர்; நெய்தல் மலரும் ஆம். நெறித்தழை –நெறிப்பையுடைய தழை; நெறிப்பு – புத்திகமது சுருண்டு விளங்கும் மெருகு. பரிதிறந்து ஓடி – ஓடுதலிற் சிறப்பாக ஓடிச்சென்று.
விளக்கம் : நெய்தனிலத்து இளமகளிர் அலவனாட்டி மகிழ்தலை உடையராவர் என்பதனை, 'பொன்வரி அலவன் ஆட்டியஞான்றே' (குறு 303:7) என்பதனாலும், மற்றும் வருவன பிறவற்றானும் அறிக (குறுந். 316 5-6, பட். 101, நற் 363:10; ஐங் 197:1), பரி – நடக்கும் கதியுள் ஒன்று. 'சிற்றிலாடிய பருவத்தேயே காதலித்து உளநிறைந்த தலைவன் உடனுறையும் இல்லற வாழ்வில் நின்னைப் பிரியாதிருந்து இன்பந்தருதலை நாடினன் அல்லனென வருந்தினையோ' என்பதாம். இவற்றைக் கேட்கலுறும் தலைவன், தலைவியின் துயரத்தை மாற்றக் கருதுவானாகப் பிற்றை நாளிலேயே வரைந்து வருவான் என்பதும் ஆம்.