நற்றிணை 1/124
124. நீங்கல் ஐய!
- பாடியவர் : மோசி கண்ணத்தனார்.
- திணை : நெய்தல்.
- துறை : பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவற்கு உரைத்தது.
[(து–வி) தலைவனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, அவனது எண்ணத்தை மாற்றக் கருதினளாக, 'அவன் பிரியின் தலைவி பெரிதும் துயருறுவாள்' என, இவ்வாறு கூறுகின்றனள்.]
ஒன்றில் காலை அன்றில் போலப்
புலம்புகொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை
யானும் ஆற்றேன்; அது தானும்வந் தன்று
நீங்கல்; வாழியர்; ஐய!—ஈங்கை
முகைவீ அதிரல் மோட்டுமணல் எக்கர்
நவ்பி நோன்குளம்பு அழுந்தென வெள்ளி
5
உருக்குறு கொள்கலம் கடுப்ப, விருப்புறத்
தெண்ணீர்க் குமிழி இழிதரும்
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே.
துணைசேர்ந்த இரண்டனுள் ஒன்று அருகாமையிலே இல்லாத காலத்து, மற்றொன்றாகிய அன்றிலானது தனிமை தாளாதாய்ப் பெரிதும் வருந்தி இறந்து போய்விடும். அதனைப் போலத் தனிமையுற்று வாழ்ந்திருக்கும் சிறுமை கொண்ட வாழ்க்கையினை யானும் ஆற்றியிருந்து வாழ மாட்டேன். ஈங்கையின் முகையும் புனமல்லிகையின் மலரும் மணல் மேட்டினிடத்தே உதிர்ந்து கிடப்பனவாம். மானினத்தின் வலிய குளம்புகள் மிதித்து அழுத்துமையினாலே அவை சிதையும் வெள்ளியைக் குறையிலிட்டு உருக்குதற்கமைந்த கொள்கலத்தைப்போலக், காண்பார்க்கு விருப்பஞ் செய்யும்படியாக அவற்றினின்றும் தெளிவான நீர் குமிழியிட்டு வடியும். அவை தண்ணீரைப் பெற்றுநின்ற பொழுதாகிய கூதிர்ப்பருவமாகிய அதுவும் வந்துவிட்டது. ஐயனை! இது காலை எம்மைத் தனித்து உறையவிட்டு நீதான் நீங்காதிருப்பாயாக!
கருத்து : 'நீ பிரியின் நின் காதலியும் இறந்துபடுவாள்' என்பதாம்.
சொற்பொருள் : புலம்பு – தனிமைத் துயரம். புன்கண் – சிறுமை. ஈங்கை – ஈங்கைச் செடி. அதிரல் – புனமல்லிகை. நெளவி – மான். ததைஇ – பெற்று.
விளக்கம் : அன்றிலானது இணையுள் ஒன்றை ஒன்று பிரிந்த காலத்துப் பெரும் புலம்புகொண்டு கூவிக் கூவி இறந்துபடும். அவ்வாறே பிரிவைத் தாங்காத தலைவியும் நைந்துபுலம்பி இறந்துபடுவாள் என்பதாம். தலைவிகூற்றைத் தன் கூற்றாகக் கொண்டு தோழி கூறுவது இது. உதிர்ந்த மலர்கள் மான்குளம்பால் மிதிபட்டு அழிதலுறுதலைப் போலப் பிரிந்துறையும் தலைவியும் வாடைக்கு ஆற்றாளாய் நலிந்து அழிவள் என்பதுமாம். மயங்கி இன்புற்று வாழுங்காலத்துத் துயர்செய்யாத கூதிர் பிரிவின் வாட்டத்தால் நலிவுற்றிருக்கும் காலத்துக் கொடிதாக வருத்திச் சாகடித்துவிடும் என்று கூறுவாள்; அதன் வரவைக் கூறி, அவன் பிரிவைக் கைவிடுதற்கு வேண்டுகின்றாள்.