நற்றிணை 1/126
126. வாய்க்க நின் வினை!
- பாடியவர் : ......
- திணை : பாலை.
- துறை : பொருள் வலித்த நெஞ்சினைத் தலைவன் நெருங்கிச் செலவு அழுங்கியது.
பைங்காய் நல்லிடம் ஓரீஇய செங்காய்க்
கருங்கனி ஈந்தின் வெண்புறக் களரி
இடுநீறு ஆடிய கடுநடை ஒருத்தல்
ஆள்பெறல நசைஇ நாள்சுரம் விலங்கித்
துனைதரும் வம்பலர்க் காணாது அச்சினம்
5
பனைக்கான்று ஆறும் பாழ்நாட்டு அத்தம்–
இறந்துசெய் பொருளும் இன்பம் தரும்எனின்,
இளமையின் சிறந்த வளமையும் இல்லை;
இளமை கழிந்த பின்றை, வளமை
காமம் தருதலும் இன்றே, அதனால்
10
நில்லாப் பொருட்பிணிச் சேறி
வல்லே நெஞ்சம் வாய்க்கநின் வினையே!
நெஞ்சமே! ஈந்தின் நல்ல மேற்புறத்து எம்மருங்கும் விளங்கிய பசுங்காய்கள் காலத்தால் முதிர்ந்து செங்காய்களாகிப், பின் கருங்கனியாய் முதிர்ந்து உதிர்தலையும் செய்யும். அத்தகைய ஈந்த மரங்களை உடையது வெளிய புறத்தினை உடையதான களர் நிலம். கடிய நடையை உடைய களிறொன்று, அக் களரிடத்தே நடந்து வருதலாற் படிந்த வெண்புழுதியை உடையதாயிற்று. அஃது அதன்பின் வழிவருவாரைக் கொல்லுதலை விரும்பியதாய், விடியற் காலத்தே அச்சுரத்தின் கண்ணே குறுக்கிட்டுச் சென்றது. விரைய வந்தபடியிருக்கும் புதியவர் எவரையும் காணாதாய்ச் சினமிகுந்ததாயிற்று. அங்குக் கண்ட பனைமரத்தை மோதிச் சாய்த்துச் சினம் தணிந்தது. பாழ்த்த நாட்டிடத்தான வழியின் தகைமை அத்தகையது! அதனைக் கடந்து சென்று நாம் ஈட்டிவரும் பொருளும் நமக்கு ஓரளவிற்கு இன்பந் தருவதுதான். எனினும், இளமைப் பருவத்தினைக் காட்டினும் காமநுகர்ச்சிக்குரிய வளமான பருவம் யாதுமில்லை. இளமை கழிந்ததன் பின்னர்ப் பொருளினது வளமையானது காமலின்பத்தைத் தருதல் கூடும் என்பதோ கிடையாது. அதனாலே, நிலையற்றதான பொருளாசையென்னும் பிணியின்பாற் கடிதாகச் செல்லுகின்றனையாகிய நீயும், அங்ஙனமே, அதன்பாலேயே செவ்வாயாக! நின் செயல் நினக்கு வந்து வாய்ப்பதும் ஆகுமாக!
கருத்து : 'நிலைநில்லாப் பொருளின்பாற் பற்றோடு செல்லுதலைக் கைவிட்டு விடுவாயாக' என்பதாம்.சொற்பொருள் : பைங்காய் – பசுங்காய். நல்ல இடம் – நல்ல மேலிடம். கருங்கனி – ஈந்தின் பழம் சுனிந்து திரைந்து தோன்றும் தன்மை. ஒருத்தல் – களிற்றுத் தலைவன், பனைக்கான்று – பனையை மோதிச் சாய்த்து. களரி – உப்புப் பூத்த பாழிடம்.
விளக்கம் : 'ஈந்தின் பசுங்காய் முதிர்ந்து செங்காயாகிப் பின் கனிந்து களிப்பட்டு உதிர்தலைப் போன்றே உடலது தன்மையும் முதிர்ந்து தளர்ந்து அழியும்' என, யாக்கையது நிலையாமை கூறினன். பொருள் வளமை சேர்ப்பதாயினும் காட்டது கடுமையும், காட்டிடை வந்துறும் கொடுமையும் இடைக்கண்ணும் யாக்கையை இழக்குமாறு செய்து, பொருளினைத் தேடவியலாதும், அதனாலே வந்தடையும் இன்பத்தை நுகரவிடாதும் இரண்டனையுமே அழிவுறச் செய்தலும் கூடும் என்பான், 'பொருள் தானும்தேடிப் பெறுவதற்கு அரிதாகும்' என உரைத்தனன் தனால் இளமையில் இன்புற்றுப் பருவநலத்தை நுகர்தலே தக்கதென்பானாய், பொருள் தேடிவரலிற் சென்ற தன் நெஞ்சத்து நினைவையும் நோகின்றான் என்று கொள்க.
ஒப்பு : 'வளமையான் ஆகும் பொருளிது என்பாய் இளமையும் காமமும் நின் பாணி நில்லா, என வரும் கலித்தொகை யடிகளும் (கலி: 12:11-2) இளமை நிலையாமையினை வலியுறுத்தும். ஆனால், 'இளமை பாரார் வளம் நசைஇச் சென்றோர்' எனக் குறுந்தொகை (குறு- 126:1) கூறுவது, சிலர், இவ்வாறு மனவுறுதியினராய்ச் செல்லுதற்குத் துணிவர் என்பதையும் காட்டும்.