நற்றிணை 1/127
127. வந்தால் பயனென்ன?
- பாடியவர் : சீத்தலைச் சாத்தனார்.
- திணை : நெய்தல்.
- துறை : பாணற்குத் தோழி வாயின் மறுத்தது.
[(து–வி.) பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்குத் தூதாக வருகின்றான் அவனது பாணன். அவனிடத்தே, தலைவி தலைவனை ஏற்பதற்கு விரும்புகின்றனள் என்பதனை இப்படித் தோழி உரைக்கின்றாள்]
இருங்கழி துழைஇய ஈர்ம்புற நாரை
இறஎறி திவலையின் பனிக்கும் பாக்கத்து
உவன்வரின் எவனோ? பாண! பேதைக்
கொழுமீன் ஆர்கைச் செழுநகர் நிறைந்த
கல்லாக் கதவர்தன் ஐயர் ஆகவும்
5
ஈனாப் பாவை தலையிட்டு ஓரும்
'மெல்லம் புலம்பன் அன்றியும்
செல்வாம்' என்னும், 'கான லானே'
பாணனே! கொழுமையான மீன்களை உண்ணுதலையுடைய பெரிதான மாளிகையிடத்தே நிறைந்திருப்போர் இப்பேதையது தமையன்மார்கள். அவர்கள் கல்வியினாலே தெளிவுபெறாத சினத்தைக் கொண்டிருப்போரும் ஆவர். அங்ஙனமாகவும். முற்காலத்தே வண்டலிழைத்து விளையாடிய தன் ஆய மகளிரோடுஞ் சேர்ந்து, தான் பாவை விளையாட்டு அயர்ந்த ஈனாப்பாவையினைத் தலைக்கீடாகக் கொண்டாளாக, 'மெல்லிய கடற்கரைச் சேர்ப்பனான நம் தலைவனை அல்லாதேயும், யாம் கானற்சோலையிடத்திற்குச் செல்வோம்' என்பாள் அவள். அதனாலே, கரிய கழியினைத் துழாவிய ஈரிய புறத்தையுடைய நாரையானது, இறாமீனைப் பற்றுங்காலத்தே எறிகின்ற திவலையினாலே நடுக்கங்கொள்ளும் நமது பாக்கத்திலே, அத் தலைவன் வருதலினாலேதான் யாது பயனோ? அவன், இனி இவ்விடத்து வாராதேயே இருப்பானாக!
கருத்து : 'தலைவனைத் தலைவி அறவே வெறுத்துவிட்டாள்' என்பதாம்.
சொற்பொருள் : துழைஇய – துழாவி மீன் தேடிய. ஈர்ம் புறம் – ஈரமாகிய புறத்தையுடைய நாரை. இற – இறாமீன். செழுநகர் – வளமான மாளிகை. கதம் – சினம்; கதவர் – சினத்தை உடையோர். ஈனாப் பாவை – பஞ்சாய்க் கோரையினாலே புனைந்த பாவை. புலம்பன் – நெய்தனிலத் தலைவன்.
விளக்கம் : "தலைவன் பண்டு பாவை விளையாட்டு ஆடிய காலத்தேயே தலைவியால் காதலிக்கப் பெற்றவன்; அவள் கல்லாக் கதவரான தன் ஐயன்மார் வீட்டிலிருப்பவும், தலைவனை நாடிக் கானற்சோலையிடத்துத் துணிந்துவந்த களவினை உடையவள்; அந்த நன்றிதானும் மறந்த அவனை அவளும் மறந்தாள்; இல்லிலிருந்து கூடி இன்புறுதற்குரிய இக்காலத்தேயும், முன்போற் சிறுமியான பருவத்து விளையாட்டு நினைவால், கானற்சோலைக்குச் செல்வாளும் ஆயினாள்" என்கின்றாள் தோழி.உள்ளுறை : கழியைத் துழாவி இரைதேடும் நாரை, தன் மேனிப்புறமெல்லாம் நனைந்திருப்பவும், இறவெறிதிவலையாற் பனிக்கும் தன்மைத்தாகும் பாக்கம் என்றாள்; பரத்தையின் இன்பத்தை நாடித்திரியும் தலைவனது புதிய உறவைக் குறித்தெழுந்த பழிச்சொற்கள் பாக்கமெல்லாம் நிறைந்ததாக, அதனைக் கேட்ட யாமும் நடுங்கினேம் என்கின்றாள்.