131. ஊடல் உடையமோ?

பாடியவர் : உலோச்சனார்.
திணை : நெய்தல்.
துறை : மணமனையிற் பிற்றைஞான்று புக்க தோழியைத் தலைவன், 'வேறுபடாமை ஆற்றுவித்தாய்; பெரியை காண்' என்றாற்குத் தோழி சொல்லியது சிறப்பு. பெரியனுக்குரிய பொறையாற்றுப் பட்டினத்தின் சிறப்பு.

[(து–வி) மணம் பெற்றதன் பிற்றை நாளில், 'இதுகாறும் தலைவியை நீதான் நங்கு ஆற்றுவித்துக் காத்து தந்தாய்; நீ மிகவும் பெருந்தகைமை உடையை' எனத் தலைவன் தோழியைப் பாராட்டுகின்றான். அவனுக்குத் தலைவியின் அளப்பரிய காதன்மையை உரைத்து, அதுதான் அதனாலேயே இயல்வதாயிற்று என்கின்றாள் தோழி]

ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும்
உள்ளல் ஆகா உயவுநெஞ்சமொடு
ஊடலும் உடையமோ உயர்மணற் சேர்ப்பர்!
திரைமுதிர் அரைய தடந்தாட் தாழைச்
சுறவுமருப்பு அன்ன முட்தோடு ஒசிய 5

இரவுஆர் இனக்குருகு இறைகொள இருக்கும்
நறவுமகிழ் இருக்கை நல்தேர்ப் பெரியன்
கள்கமழ் பொறையாறு அன்னஎன்
நல்தோள் நெகிழ மறத்தல் நுமக்கே?

உயரமான மணல் மேடுகளைக் கொண்ட கடற்கரை நாட்டிற்குரிய தலைவனே! வளைந்த அடிமரத்தையுடைய தாழையானது திரைத்தல் பொருந்திய அடிமரத்தைக் கொண்டதாகவும் விளங்கும். சுறாமீனின் கொம்பினைப் போல இருபுறமும் முட்களையுடைய அதன் இலைகள் முறிந்து சாயும்படியாக, இறாமீனைத் தம் இரையாகக் கொள்ளும் நாரைக்கூட்டம், தங்குதல்கொள்ள அதன்மேல் வீற்றிருக்கும். அத்தகையதும், கள்ளை உண்ணுதலானே களிப்பு மிகுந்திருப்பதுமான ஊரிடத்தே இருக்கை கொண்டிருப்பவன். நல்ல தேரினைக் கொண்டவனான 'பெரியன்' என்பவன். கள்மணம் மணந்தபடியிருக்கும் அவனுடைய 'பொறையாறு' என்னும் ஊரைப்போன்ற, நலம்வாய்ந்தன எம் தோள்கள். அவற்றை மறுத்தல் நுமக்குத்தான் பொருந்துமோ? விளையாட்டயர்ந்து களித்த தொழிற்பாட்டினையும், தங்கியிருந்து இன்புறுதற்குரிய பொழிலினையும் நினைத்தற்கு இயலாதபடி பெருகிய வருத்தமிகுந்த நெஞ்சத்துடனே நும்பால் ஊடுதலையும் யாம் உடையேமோ?

கருத்து : 'நின்பாற் கொண்ட எமது காதன்மையும், அதனை மறவாது பேணிய நின் பெருந்தன்மையுமே தலைவியை இதுகாறும் ஆற்றியிருக்கச் செய்தது' என்பதாம்.

சொற்பொருள் : ஆடியதொழில் – விளையாட்டயர்ந்த தொழிற்பாடு. உயவு – வருத்தம். திரை – திரைத்தல். தடந்தாள் – வளைந்த அடி; பெருத்த அடியுமாம். சுறவு – சுறா மீன். முள்தோடு – முட்களையுடைய இலை; தாழையின் இருபுறமும் விளங்கும் முட்கள் கொண்ட இலை சுறவின்கோட்டை ஒப்பாகக் காட்டுவதாம்

விளக்கம் : 'நீரும் எம்மை மறந்திலீர், யாமும் நும்பால் ஊடினமாய்ப் பிறவற்றால் எம் பிரிவுத்துயரை மாற்றுதற்கு முயலாது, நும் வாய்மையே துணையாகக் கொண்டு ஆற்றியிருந்தேம்' என்பதாம் ஆடிய தொழிலையும் அல்கிய பொழிலையும் இயற்கைப் புணர்ச்சியும் பின்னர் வாய்த்த களவுப்புணர்ச்சியும் பெற்ற குறியிடத்து நினைவினாற் கூறினளாகலாம். 'ஊடலும் உடையமோ?' என்றது. சொற்பிழையானாய் வருவன் என்ற உறுதியினால் ஆற்றியிருந்தமை கூறியது. இதனால், 'ஆற்றியிருந்த அவர்களினுங் காட்டிற் சொற்பிழையானாய் வரைவொடு வந்து மணந்து கொண்ட அவனே பெரியவன்' என்றனளுமாம்.

உள்ளுறை : 'தாழைத் கோட்டின்மீது இறவார் குறுகினம் இறைகொள இருக்கும்' என்றது, அவளுடைய பிரிவுத்துயர் நிரம்பிய உள்ளத்திலே நீயிர் கணப்பொழுதும் பிரியாது வீற்றிருந்திர்' என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/131&oldid=1731708" இலிருந்து மீள்விக்கப்பட்டது