132. இன்றே போலும்!

பாடியவர் : ......
திணை : நெய்தல்,
துறை : காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது.

[(து–வி) இற்செறிக்கப்பட்டுக் காவலும் மிகுதியாயிற்று. அதனாலே தலைவனைச் சந்திக்க இயலாமற் போயின தலைவியது ஆற்றாமையும் மிகுதியாகின்றது. அவள் துயரத்தை மாற்றக் கருதிய தோழி, இவ்வாறு அவளுக்குக் கூறுகின்றன.]

பேர்ஊர் துஞ்சும் யாரும் இல்லை
திருந்துவாய்ச் சுறவம் நீர்கான்று ஓய்யெனப்
பெருந்தெரு உதிர்தரு பெயலுறு தண்வளி
போர்அமை கதவப் புரைதொறும் தூவக்
கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல்நகர்ப் 5
பயில்படை நிவந்த பல்பூஞ் சேக்கை
அயலும் மாண்சிறை யதுவே; அதன்தலை
'காப்புடை வாயில் போற்று, ஓ' என்னும்
யாமம் கொள்பவர் நெடுநா ஒண்மணி
ஒன்றுஎறி பாணியின் இரட்டும் 5
இன்றுகொல், அளியேன் பொன்றும் நாளே?

இப் பேரூரின்கண் உள்ளார் யாவருமே துயில்கின்றனர். எமக்கு உசாத்துணை யாவாரும் எவரும் இலர். திருந்திய வாயை உடையதான் சுறாமீனானது நீரைச் கக்குதலால் முழக்கம் எழுகின்றது. 'பெருந்தெருவின்கண் பெயலும் மழைத்துளிகளை உதிர்க்கின்றது. குளிர்ந்த காற்றானது அந்த நீர்ப்பெயலைத் தன்னோடும் சேர்த்துக்கொண்டு, பொருந்துதல் அமைந்த வாயிற் கதவிடத்துள்ள துளைதோறும் கொண்டு தூவுகின்றது. அத்தூவல் நீர் படவும், கூரிய எயிற்றவான காவல் நாய்கள் நடுங்குகின்றன. இத் தன்மைப்பட்ட பொழுதிலே, நம் நல்ல மாளிகையிடத்தே துயிலுதற்காகப் பலவடுக்கு மலர்மெத்தைகளால் அமைக்கப் பெற்றுள்ள உயர்த்த படுக்கையிடத்தின் அயலிடத்தும், மாட்சிப்பட்ட சிறைக்காவலாக உள்ளது. அதற்கும் மேலாகக், 'காவலையுடைய முன்புற வாயில்களைப் பாதுகாத்திருங்கள்' என்று கூவாநின்ற, யாமந் தோறும் காவல் மேற்கொள்ளும் காவலரது நெடிய நாவினையுடைய ஒள்ளிய மணியினை ஒன்றி எறிதலால் தாளத்தோடு ஒலிக்கும் ஓசையும் கேட்கின்றது. இரங்கத் தக்காளான யான்தான் இறந்தொழிதற்குரிய இறுதிநாளும் இன்றுதானோ?

கருத்து : 'இன்று தலைவரைக் காணமாட்டோம்' என்பதாம்.

சொற்பொருள் : பேரூர் – பெரிய ஊர்: பெருமை கொண்ட ஊரும் ஆம். யாரும் இல்லை – தெருவில் எவரது நடமாட்டமும் இல்லை. நீர் கான்று – நீரைக்கக்கி. எகினம் – நாய். நகர் – அரண்மனை. சிவந்த – உயர்ந்த, மாண்சிறை – மாட்சிப்பட்ட சிறை காவல். யாமங்கொள்பவர் – இராக் காவலர். இவர்கள் யாமத்தை அறிவிக்கக் கோட்டைவாயிற் காவலர்கட்கு மணியொலிமூலம் நாளிகை தோறும் எச்சரிக்கை செய்வர் என்பதாம். பாணி – தாள அமைதி; இரட்டும் – ஒலிக்கும். பொன்றுதல் – இறந்து ஒழிதல்

விளக்கம் : 'ஊர் உறங்கியிருக்கும் நேரத்தினும், சுறாவின் ஆரவாரம் அவரது வருகையைத் தெரிவிக்கின்றது. நாய்கள் நடுங்கிப் பதுங்கினவாதலால் அவற்றாலும் தொல்லையில்லை. நாம் அவரிடத்தே செல்வேமென்றால் படுக்கைக்கு அயலிலேயே சிறைகாவல் மிகுதியாயிருக்கிறது. அவர்தாம் நம் மாளிகைக்குள் வருவதும் காவலரது விழிப்புக் குரலாலும் பிறவற்றாலும் இயலுமாறில்லை ஆதலின், இரங்கத்தகுந்த யான் இன்று அவரை அடையப் பெறாதேயே இறந்தே போவேன் போலும்' என்கின்றாள். தோழிதான் இப்படிக் கூறத், தலைவி அவளது துயரினை ஆற்றுவதற்கு முயல்வாளாகத், தன் துயரை மறந்திருப்பாள் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/132&oldid=1731712" இலிருந்து மீள்விக்கப்பட்டது