133. சிறிது பாதுகாவல்!

பாடியவர் : நற்றமனார்.
திணை : குறிஞ்சி.
துறை : வரைவிடை வைத்துப் பிரிவாற்றாளாய் தலைவி வற்புறுத்துந் தோழிக்குச் சொல்லியது.

[(து–வி) வரைவிடை வைத்து வரைதற்குரிய பொருளை ஈட்டிவருதற் பொருட்டாகத் தலைவன் பிரிந்து சென்றிருக்கின்றான். அந்தப் பிரிவினுக்கு ஆற்றாளாய்த் தலைவி வருந்த, "அவன் சொற்பிழையானாய் வருவன்" என்று வற்புறுத்துகின்றாள் தோழி. அவளுக்குத் தலைவி சொல்வது இது.]

'தோளே தொடிகொட்பு ஆனா; கண்ணே
வாள்ஈர் வடியின் வடிவுஇழந் தனவே
நுதலும் பசலை பாயின்று திதலைச்
சில்பொறி அணிந்த பல்காழ் அல்குல்
மணிஏர் ஐம்பால் மாயோட்கு' என்று 5
வெவ்வாய்ப் பெண்டிர் கவ்வை தூற்ற
நாம்உறு துயரம் செய்யலர் என்னும்—
காமுறு தொழி! காதல்அம் கிளவி,
இரும்புசெய் கொல்லன் வெவ்வுலைத் தெளித்த
தோய்மடற் சில்நீர் போல 10
நோய்மலி நெஞ்சிற்கு ஏமம்ஆம் சிறிதே.

என்பால் விருப்பமிகுந்தாளான தோழியே! "தேமலின் சிலவாய புள்ளிகளை அழகாகப் பெற்றிருக்கின்ற பலவாகிய வடங்களையுடைய காஞ்சியை அணிந்த அல்குல் தடத்தையும் நீலமணி போன்ற கூந்தலையும், மாமை நிறத்தையும் உடையவளான இவளுக்குத் தோள்கள்தாம் சுழன்று கழலப் பெற்ற வளைகளை உடையவாயின; கண்களும் வாளாற் பிளந்த மாவடுவைப் போன்ற தம்முடைய வடிவை இழந்தன; தெற்றியும் பசலை படர்ந்ததாயுள்ளது" என்று, இவ்வண்ணமாகக் கொடியன பேசும் வாயினரான அலவற் பெண்டிர்கள் பழிச்சொல் எடுத்துத் தூற்றுகின்றனர். அங்ஙனமாகவும், நாம் 'அடையும் துயரத்தை நம் தலைவர் செய்வார் அல்லர்'. என்று காதற்கியைந்த அழகிய பேச்சினை நீயும் கூறுகின்றனை. இதுதான், இரும்புத் தொழிலைச் செய்கின்ற கொல்லனது வெம்மைமிக்க உலையிடத்தே பனைமடலிலே தோய்த்துத் தெளித்த சிலவாகிய நீர்த்துளிகளைப் போலக், காமநோய் மிகுந்த என் தெஞ்சிற்குச் சிறிதளவு பாதுகாவலாய் இராநின்றது காண்!'

கருத்து :'நின் பேச்சுச் சிறிது ஆறுதல் தருகின்றது; அவரை அடைந்தாலன்றி என்னுறு நோய்தான் நீங்காது' என்பதாம்.

சொற்பொருள் : 'தொடி – தோள் வளை. கொட்பு ஆனா – சுழன்று சுழலுதலின் நீங்கிற்றில. வடி – மாவடுவின் பிளப்பு, பசலை – பசலைநோய். திதலை – தித்தி; தேமற் புள்ளிகள். ஐம்பால் – ஐவகையாகப் பகுத்து முடிக்கப்பெறும் கூந்தல். மாயோள் – மாமை நிறத்தை உடையாள்; கரு – நிறத்தை உடையாளும் ஆம். கெளவை – பழிச்சொற்கள்

விளக்கம் : 'கொல்லனது உலைச்சூடானது, பனைமடலில் தோய்த்துத் தெளிக்கும் சிலநீராற் சிறிததளவேனும் தணிவது போலத், தலைவரின் பிரிவினாலே உற்ற காமநோயானும் ஊர்ப்பெண்டிரது பழிச்சொற்களானும் கொதிப்படைந்த என் நெஞ்சிற்கு நின் ஆறுதலுரைகள் சிறிது ஆறுதலைத்தருகின்றன' என்கின்றாள் தலைவி. தோழியின் அன்புறு கிளவியைப் பாராட்டினாலும், தலைவர் வந்தடைந்து ஊரவரது பழிச்சொற்களும் நிற்குங் காலத்தேதான் தன்மனம் முற்றவும் அமைதியடையும் எனவும் குறிப்பாகத் தன் நிலையினைப் புலப்படுத்துகின்றாள்

மேற்கோள் : 'தோழி கூற்றினை நன்கு மதியாது கூறினள்' எனத் தொல்காப்பியக் களவியல் இருபதாம் சூத்திர உரையுள் நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டுவர். 'நன்கு மதியாமை', சொல்லிய உவமானத்தால் புலப்படுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/133&oldid=1731714" இலிருந்து மீள்விக்கப்பட்டது