நற்றிணை 1/135
135. சீறூர் இனிது!
- பாடியவர் : கதப்பிள்ளையார்.
- திணை : நெய்தல்.
- துறை : 'வரைவு நீட்டிப்ப அவர் ஆம்' எனக் கவன்ற தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.
[(து–வி.) 'வரைந்து வருவதாகத் தலைவன் குறித்துச் சென்ற காலம் நீட்டிப்பதாயிற்று. ஊரார் பழிதூற்று வரோ?' என்று அஞ்சுகின்றாள் தோழி. தலைவன் குறியிடத்து ஒருசார்வந்து செவ்விநோக்கி ஒதுங்கி நிற்கின்றான். தம் நிலையை அவன் அறியுமாறு உணர்த்தக் கருதியவளாக அவள் இப்படிச் சொல்லுகின்றாள்.]
தூங்கல் ஓலை ஓங்குமடற் பெண்ணை
மாஅரை புதைத்த மணல்வலி முன்றில்,
வரையாத் தாரம் வருவிருந்து அயரும்
தண்குடி தாழ்நர் அம்குடிச் சீறூர்
இனிதுமன் றம்ம தானே; பனிபடு
5
பல்சுரம் உழந்த நல்கூர் பரிய
முழங்குதிரைப் புதுமணல் அழுந்தக் கொட்கும்
வால்உளைப் பொலிந்த புரவித்
தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே.
தொங்குகின்ற ஓலைகளையும் நீண்ட மடல்களையும் உடையது பனை. அதன் கரிய அடிமரம் புதையுமாறு மூடிக்கிடக்கும் மணல்மிகுந்தது வீட்டின் முற்றம். அளவுபடாத உணவுப் பொருள்களை இல்லிடத்தே வரும் விருந்தினர்கட்குப் பகுத்தளித்து வாழும் தண்ணிய குடிவாழ்க்கை உடையவர் நம் ஊரவர். அழகிய குடிகளையுடைய அச்சீறூரது வாழ்வும், முன்னர் நமக்கு இனிதாகவே இருந்தது.
குளிர்ச்சி பொருந்திய பலவாய கடத்தற்கரிய சுரநெறிகளில், வருத்தத்தோடு வருதலாலுண்டாகிய குறைந்த செலவினை உடையவாய் முழங்கும் அலைகள் கொணர்ந்து கொழிக்கும் புதுமணலிற் சக்கரங்கள் அழுந்துதலினாலே மேலும் மனஞ்சுழலும் வெள்ளிய பிடரிமயிரால் அழகுற்ற குதிரைகளை பூட்டிய தேரினரான நம் காதலர், நம்மோடு நகையாடி மகிழாததன் முன்பாக, நம் சீறூரும் நமக்கு இனிதாயிருந்தது காண்!
கருத்து : 'அவர் அருகே இன்மையினால்' இனிதாயிருந்த அதுவும் இன்னாதாகத் தோன்றுகிறது' என்பதாம்.
சொற்பொருள் : தூங்கல் – தொங்குதல். ஓங்கு – உயர்ந்த; நெடிய. பெண்ணை – பனை, மாஅரை – கரிதான அடிமரம். தாரம் – உணவுப் பொருட்கள். தண்குடி – தண்மைமிக்க குடிவாழ்க்கை: தண்மை – வறியவர்க்கு உதவும் தண்ணளி உடைமை. கொட்கும் – சுழலும். உளை – பிடரி மயிர்.
விளக்கம் : 'நகாததன் முன்பு இனிதாயிருந்த சீறூகும். அவரைப் பிரிந்த காரணத்தால் இன்னாதாயிருக்கின்றது' என்பதாம். ஊரும் இன்னாதாயிரா நின்றது, அவளது உள்ளத்துப் பெருநோயினாலே என்று கொள்க. ஊரவர் அலர்கூறிப் பழித்தலால் ஊர் இன்னாதாயிற்று என்றனளும் ஆம்.