136. அறவோன் என்னை!

பாடியவர் : நற்றங் கொற்றனார்.
திணை : குறிஞ்சி.
துறை : சிறைப்புறமாகத் தலைவி தோழிக்கு உரைத்தது.

[(து–வி.) களவுக்காலத்து இடையிடையே சேர்கின்ற பிரிவுக்கு ஆற்றாது நலிந்தாள் தலைவி. அவள் தலைவனிடம் அவளை விரைய மணந்து வாழும் வாழ்வினைப் பற்றிய எண்ணத்தை ஏற்படுத்தக் கருதுகின்றாள். குறியிடத்து, அவன் வந்து சிறைப்புறமாக நிற்பதறிந்தவள், தன் தோழியிடத்துக் கூறுவாள்போல, அவனும் கேட்டு உணருமாறு இப்படிக் கூறுகின்றாள்.]

திருந்துகோல் எல்வளை வேண்டியான் அழவும்
அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது
மருந்தாய்ந்து கொடுத்த அறவோன் போல
என்னை வாழிய, பலவே; பன்னிய
மலைகெழு நாடனொடு நம்மிடைச் சிறிய 5
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல
நீப்ப நீங்காது வரின்வரை அமைந்து
தோள்பழி மறைக்கும் உதவிப்
போக்கில் பொலந்தொடி செறீஇ யோனே

திருத்தமான கோற்றொழில் அமைந்த ஒளிபொருந்திய கோள்வளைகளை அணிந்திருந்தவை விரும்பித், தலைவனைப் பார்த்தவால் மெலிவுற்ற தோள்களினின்றும் கழன்று வீழ்ந்த வளைகளை நினைந்து யானும் அழதேன். தீர்த்தற்கு அரிதான நோயினை அடைந்தவர்க்கு, அவர் விரும்பியதனைத் தின்னக்கொடாது, அந்நோய் தீர்தற்குரிய மருந்தினையே ஆராய்ந்து கொடுத்து நோயினைப் போக்குகின்ற அறிவாளனைப்போல, என் தந்தையும் ஒரு செயலைச் செய்தனன். அவன் வாழ்வானாக! அனைவராலும் போற்றிப் பேசப்படுகின்ற மலையினைச் சேர்ந்த நாட்டினனான நம் காதலனுக்கும் நமக்கும் இடையே சிற்றளவான பிரிவு ஏற்பட்டு வருதலாகிய உண்மையினைத் தானும் அறிந்தவனைப்போல, அவன் நடந்தனன். தலைவன் பிரியுங்காலத்து உண்டாகும் மெலிவாலும் கழன்றுபோகாது, அவன் வருங்காலத்து அமையுஞ் செறிவுக்கும் ஏற்றபடியாக அமைந்து, தோள்களால் நமக்கு வந்தடையும் பழியினை மறைக்கின்ற தன்மை கொண்ட, எக்காலத்தும் கழன்று போகாத நுட்பமுடைய பொற்றொடிகளைச் செய்யச்செய்து என் தோள்கட்குச் செறித்து, என் துயரையும் மாற்றினன். அதனால், அவன்தான் பலகாலம் வாழ்வானாக!

கருத்து : 'களவுறவு தந்தையால் அறியப்பட்டது; தலைவன் வரைந்துவரின் அவனும் மணவினைக்கு இசைவான்' என்பதாம்.

சொற்பொருள் : எல்வளை – ஒளியெறிக்கும் தோள் வளை. அறவோன் – அறவாளன்; நீங்காத நோயையும் நீக்கும் மருத்துவன். சிறிய தவைப்பிரிவு – நெடுநாட் பிரிவின்றிக் களவுக்காலத்து நிகழும் சிறு பிரிவு.

விளக்கம் : சிறு பிரிவுக்கும் மெலிவுறும் தன் தோள்களது தன்மையைக் கூறுவதன்மூலம், அப்பிரிவும் நேராதிருக்கும் வகையால் அமையும் மணவினை நாட்டத்தைப் புலப்படுத்துகின்றாள். வரைவுக்குத் தன் தந்தையும் உடன்படுவான் என்பதைக் குறிப்பாக உணர்த்துவாள், தந்தை புதுவளை செய்து தந்த சிறப்பினைக் கூறினாள். 'பழி மறைக்கும்' என்றது. மெலிவு பிறருக்குத் தோற்றாதே மறைக்கும் தன்மைகொண்ட வளைகள் என்றனன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/136&oldid=1731721" இலிருந்து மீள்விக்கப்பட்டது