145. என் செய்வேன்?

பாடியவர் : நம்பி குட்டுவன்.
திணை : நெய்தல்.
துறை : இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி வரைவு கடாயது.

[(து–வி.) தலைவன் இரவுக்குறி வந்து சிறைப்புறத்தானாகுதலை அறித்த தோழி, இவ்வாறு தலைவிக்குக் கூறுவதன் மூலம் விரைவிலே தலைவியை மணந்துகொள்ளுதற்குத் தலைவனைத் தூண்டுதற்கு முற்படுகின்றாள்.]

இருங்கழி பொருத ஈர வெண்மணல்
மாக்கொடி அடும்பின் மாஇதழ் அலரி
கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும்
காமர் கொண்கன் நாமவெங் கேண்மை
ஐதுஏய்ந் தில்லா ஊங்கும் நம்மொடு 5
புணர்ந்தனன் போல உணரக் கூறித்
'தான் யாங்கு'? என்னும் அறன்இல் அன்னை
யான்எழில் அறிதலும் உரியள், நீயும்; நம்
பராரைப் புன்னைச் சேரி மெல்ல
நள்ளென் கங்குலும் வருமரோ 10
அம்ம வாழி! அவர் தேர்மணிக் குரலே!

தோழி! நெடிது வாழ்வாயாக! கண்டவர் விருப்பமுறும்தகைமை உடையோன் நம் காதலன். கரிய கழியிடத்து நீர் மோதுதலானே ஈரமாகிய வெண்மணலிடத்தே படர்ந்திருக்கும் பெருங் கொடிகளையுடையது அடும்பு. அதன் பெரிய பூவிதழ்களைக் கொய்து கொணர்ந்து மகளிரது கூந்தலிடத்தே சூட்டலுறும் தலைமாலைக்கு அணிகூட்டும் தன்மையாளன் அவனாவான். அவனுடைய அச்சந்தரும் வெய்ய நட்பானது பண்டு பொருந்தியிருந்தது. இவ் வேளை அவனுக்கும் நமக்கும் யாதொரு தொடர்பும் சிறிதேனும் இல்லை. இருந்த போதிலும் அறனுணர்வற்ற நம் அன்னை நம்மோடும் அவன் கூடியிருந்தானேபோல வெளிப்படக் கூறினளாக, 'அவன் எவ்விடத்தே உள்ளனன்?' என்றும் கேட்பாளாயினள். அன்றி, நீயும் நின்னது மேனி எழிலது மாற்றத்தினாலே யானே நின் உறவை அறிதற்கு உரியளாகவும் தோன்றுகின்றனை. பருத்த அடியினவான புன்னை மரங்கள் விளங்கும் நம் சேரிக்கண்ணே, அவனது தேர் வருவதனாலே எழுகின்ற மணியினது குரல்தான், நள்ளென்னும் இரவின் நடுயாமத்தினும் மெல்ல வருவதாகுமே? அதனை அன்னையும் கேட்டாளாயின் யான் என் செய்வேனடீ?

கருத்து : 'நின்னை வரைந்து கொண்டு போதலே தலைவனுக்கு இனிச் செய்யத்தகுவது' என்பதாம்.

சொற்பொருள் : இருங்கழி – கரிய கழி. மாக்கொடி – பெருங்கொடி; கருங் கொடியும் ஆம். மாவிதழ் – பெரிதான பூவிதழ்: கரிய பூவிதழும் ஆம். அலரி – அலர்ந்த பூக்கள். கோதை – தலைமாலை. காமர் – கண்டார் விருப்புறும் அழகு நாமம் – அச்சம், ஐது – சிறிதளவு ஏய்ந்தில்லா – பொருந்தியிராத. உணர – கேட்பார் அறியுமாறு வெளிப்பட. எழில் –களவொழுக்கத்தாலே வந்துற்ற புதிய அழகு நலம்.

விளக்கம் : 'மணிக்குரல் வரும்' என்றாள்; வரின் அன்னை ஐயன்மாருக்கு, உணர்த்த அதனால் தலைவனுக்கு ஏதமுண்டாதலும் கூடுமென அஞ்சியதனால். 'காமர் கொண்கன்' என்றது, அவனைக் காணின் தாயும் அவனைத் தலைவிக்கு ஏற்றவனேயெனக் கொண்டு விரும்புவாள் என்பதனாலாம். 'நீயும் யான் எழில் அறிதலும் உரியன்' என்றது, தன் காவல் பொய்ப்பட்டதென்ற குறைச்சொல் தனக்கு உண்டாகாதபடி காத்தற்கு வேண்டி உரைப்பதாம். இதனைக் கேட்டலுறும் தலைவன் தலைவியை விரைய வரைந்து வந்து மணமுடித்துக் கொள்ளுதலிலே மனஞ்செலுத்துவான் என்பதும் ஆம்.

உள்ளுறை : 'அடும்பின் மாவிதழ் அலரி கூந்தன் மகளிர் கோதைக்கு ஊட்டும் காமர் கொண்கன்' என்றது, அவன் முன்னர்த் தலையளி செய்தாற்போல இனியும் பலரறிய மணந்து தலைவியின் கூந்தலிற் பூச்சூட்டி மணக்கும் வாய்மையன் ஆவான் என்பதாம்.

ஒப்பு : அடும்பின் மலரைப் பெண்கள் சூட்டிக் கொள்வர் என்பதனை, 'அடும்பின் ஆய்பாலர் விரைஇ நெய்தல் நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல்' என வருவதானும் அறியலாம்.—(குறு, 401,1-2). இது கடற்கரைப் பாங்கிலே வளரும் கொடி. இதன் இலைகள் மானடித் தடம் போல விளங்கும் என்பர். 'அடும்பின் அலர்கொண்டு உதுக்காண் எம் கோதை புனைந்த வழி' (கலித் 144, 30-31) என்பதும், மகளிர் அடும்பின் மலரிட்டுக் சுட்டிய கோதையினை அணிதலைப் புலப்படுத்தும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/145&oldid=1731742" இலிருந்து மீள்விக்கப்பட்டது