நற்றிணை 1/146
146. இழிந்து இருந்தனை சென்மோ?
- பாடியவர் : கந்தரத்தனார்.
- திணை : குறிஞ்சி.
- துறை : பின்னின்ற தலைவன் முன்னிலைப் புறமொழியாகத் தோழி கேட்கச் சொல்லியது.
[(து–வி.) தோழியை இரந்தும் தன் குறையைத் தீர்ப்பதற்கான வாக்குறுதியைப் பெறாமற்போன தலைவன், அவள் கேட்டுத் தன்பால் இரக்கங்கொள்ளுமாறு தனக்குட் கூறுவான் போல, இப்படிக் கூறுகின்றான்.]
வில்லாப் பூவின் கண்ணி சூடி
'நல்ஏ முறுவல்' எனப் பல்லூர் திரிதரு
நெடுமாப் பெண்ணை மடல்மா னோயே!
கடனறி மன்னர் குடைநிழல் போலப்
பெருந்தண் ணென்ற மரநிழல் சிறிது இழித்து
5
இருந்தனை சென்மோ —'வழங்குக சுடர்!' என
அருளிக் கூடும் ஆர்வ மாக்கள்
நல்லேம் என்னும் கிளவி வல்லோன்
எழுதி அன்ன காண்தகு வனப்பின்
ஐயள் மாயோள் அணங்கிய
மையல் நெஞ்சம் என்மொழிக் கொளினே!
10
சித்திரங் காண்பதிலே ஆர்வமுடைய மக்கள் பலரும் அன்போடும் ஒருங்கேகூடிப் பாராட்டிய புகழ்ச்சொற்களின் மிகுதியினாலே 'நல்ல ஓவியன் தான்' என்னும் சொல்லினைப் பெற்றவனாகிய தன்னாண்மை வல்லான் ஒருவன், தன் திறன் எல்லாம் சேர்த்து எழுதிவைத்தாற் போன்ற, காணத் தகுந்த வனப்பினையுடைய சித்திரப் பாவையொத்த அழகினள் அவள்! மாமை நிறங்கொண்ட அவளாலே வருத்தப்பெற்று மையல்கொண்ட நெஞ்சமே! விலைக்கு விற்றற்காகாத பூளைப்பூவின் தலைக்கண்ணியைச் சூடிக்கொண்டு, 'யான் நன்கு பித்தேறினேன்?' எனப் பிறர் கூறுமாறு காட்டியபடி பல ஊர்களிலும் திரிகின்ற நெடிய கரிய பனைமடற் குதிரையினைக் கருத்திற் கொண்டோய்! என் பேச்சையும் நீ ஏற்றுக் கொள்வையாயின், 'தம் கடமைப்பாட்டை அறிந்து காக்கும் மன்னவரது குடைநிழலிடத்தே நாட்டுமக்கள் குளிர்ச்சி பெறுமாறு' போலப் பெரிதும் தண்ணென்றிருக்கும் மரநிழலினிடத்தே இறங்கிக் களைப்பாற்றிக் கொண்டு சிறிதளவு இருந்தனையாய், 'ஞாயிறுதான் தன் செலவைத் தொடர்வதாக' என அதுகாறும் பொழுதைக் கழித்த பின்னர், மீண்டும் நின் செலவைத் தொடர்வாயாக!
கருத்து : 'மடலேறி மன்றம் போந்தாயினும் அவளை, அடைவேன்' என்பதாம்.
சொற்பொருள் : வில்லாப்பூ – விலையிடற்காகாப் பூ; பூளைப் பூ முதலியன; இவற்றை மக்கள் இயல்பாகச் சூடார் என்பதாம். 'ஏம் உறுவல்' - பித்தேறினம் ஆவேம். மடல்மான் – மடலாற் செய்த குதிரை. கடன் – அரசநெறி. குடை – வெண் கொற்றக் குடை. ஐயள் – அழகினள். மையல் நெஞ்சம் – மயங்கிய நெஞ்சம்.
விளக்கம் : 'மாயோள் அணங்கிய மையல் நெஞ்சம்' என்றான், அவளை அடைந்தாலன்றித் தன் உயிர்தான் நிலை பெறுதல் இல்லை எனத் தன் நிலையை உணர்த்துதற்கு, 'அணியலங் காவிரைப் பூவோ டெருக்கின் பிணையலங் கண்ணி மிலைந்து (கலி.139)' என்று வரும் கலியடிகள், மடலேறுவார் சூடும் பல்வகைப் பூக்களாலாகிய கண்ணி பற்றிக் கூறுவது காண்க.
'கடனறி மன்னர் குடைநிழற்போலப் பெருந்தண் மர நிழல்' என்று கூறியது தன் கடனறிந்து குறைதீர்த்து அருளாளாய்த், தன்னை ஒதுக்கும் தோழியது கொடுமையை நினைந்து, அவட்கு அறிவுதெருட்ட உரைத்ததாகும். 'மடலேறி மன்று பட்டவழித் தமராயினார் மகட்கொடை நேரலே சால்பு' என்பது மரபாதலின், தான் அதற்கும் துணிந்தமை உரைக்கின்றான்.தலைவன் மடலேறி வருகின்ற மரபினை,
'மாவென மடலும் ஊர்ப: பூவெனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியுஞ் சூடுப;
மறுகின் ஆர்க்கவும் படுப;
பிறிதும் ஆகுப; காமம் காழ்க்கொளினே'
எனவரும் குறுந்தொகைப் பாட்டானும் அறியலாம்.(குறுந்: 17).