நற்றிணை 1/148
148. வருந்தமாட்டேன்
- பாடியவர் : கள்ளம்பாளனார்: கருவூர்க் கண்ணம் பாளனார் எனவும் பாடம்.
- திணை : பாலை.
- துறை : பிரிவுணர்ந்து வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறீஇயது.
[(து–வி.) 'தன்னைப் பிரிந்து வேற்றூர்க்குத் தலைவன் செல்ல நினைக்கின்றான்' என்பதனை, உய்த்துணர்ந்தாள் ஒரு தலைவி. அவள் மேனி நாளுக்குநாள் நலியத் தொடங்கிற்று. தலைவியது தளர்வைத் தோழி காணுகின்றாள். அவள் மனத்தைத் தெளிவிக்கத் தோழி உரைப்பதாக அமைந்த செய்யுள் இது.]
வண்ணம் நோக்கியும் மென்மொழி கூறியும்
'நீஅவண் வருதல் ஆற்றாய்' எனத்தாம்
தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர் இன்றே
நெடுங்கயம் புரிந்த நீர்இல் நீள் இடைச்
செங்கால் மராஅத்து அம்புடைப் பொருந்தி
5
வாங்குசிலை மறவர் வீங்குநிலை அஞ்சாது
கல்லளைச் செறிந்த வள்ளுகிர்ப் பிணவின்
இன்புனிற்று இடும்பை தீரச் சினம்சிறந்து.
செங்கண் இரும்புலிக் கோள்வல் ஏற்றை
உயர்மருப்பு ஒருத்தல் புகர்முகம் பாயும்
10
அருஞ்சுரம் இறப்ப என்ப
வருந்தேன் தோழி! வாய்க்க அவர் செலவே!
தோழி! என் மேனி வண்ணத்தினது சிறப்பினைப் பல படியாகப் பார்த்துப்பார்த்து இன்பமடைந்தனர்; மென்மையான சொற்கள் பலவற்றைப் பேசி என்னை மகிழ்வித்தனர்; நீதான் அவ்விடத்திற்கு எம்முடனே கூடியபடி வருதலை ஆற்றமாட்டாய் என்பார். தாம் தொடங்கிச் செய்யும் முயற்சியினை மேற்கொண்டவராய் நம்மைப் பிரிந்து போதலையும் செய்வார். நெடிதான பொய்கையிடத்தும் பொருந்திய நீரில்லாதாய்க் காணப்படும் நெடிதான சுரநெறியிலே, சிவப்பான அடிமரத்தையுடைய மராவினது அழகிய பக்கத்திலே பொருந்தியிருந்தபடி, வழிவருவாரின் வருகையினை எதிர்பார்த்தபடியாக, வளைந்த வில்லினைக் கையிடத்தே கொண்டோரான ஆறலை கள்வர்கள் மிகுதியாயிருப்பர். அவர்கட்கும் அவர் அஞ்சமாட்டார். மலைக் குகையிலே சேர்ந்து கிடந்த பெரிதான நகங்களையுடைய தன் பெண்புலியானது இனிதான குட்டிகளை ஈன்றதனாலே கொண்ட நோயும் பசியும் தீரும் பொருட்டாகச், சினமிகுதியாற் சிவந்த கண்களைக் கொண்டதும், வேட்டை கொள்ளுதலிலே வல்லமையுடையதுமாகிய பெரிதான ஆண் புலியானது. உயர்ந்த கொம்புகளைக் கொண்ட களிற்றது புள்ளிகளையுடைய மத்தகத்தே பாய்ந்து அதனைக் கொல்லும். அத்தன்மைத்தானதும் கடத்தற்கு அரிதானதுமான சுரநெறியையும், 'இன்றைக்கே யாம் கடந்து செல்வேம்' எனவும் கூறுவார். இதற்காகவும் யான் வருந்தமாட்டேன். 'அவர் சென்று முயலுகின்ற செயல்தான் இனிதாக வாய்ப்பதாகுக' என்று வாழ்த்தி, அவரை வழியனுப்பிவைத்து, அவரைப் பிரிந்த துன்பத்தையும் தாங்கிப் பொறுத்திருப்பேன்.
கருத்து : 'இல்லத் தலைவியான நீயும் பிரிவைப் பொறுத்து ஆற்றியிருத்தலே கடமையாகும்' என்பதாம்.
சொற்பொருள் : 'வண்ணம்' என்பது தலைவியின் இயல்பான நிறத்தையும், புனைவால் அமைகின்ற வண்ணங்களையும் குறிக்கும். புரிந்த – பொருந்திய. வீங்குநிலை – மிக்கிருக்கின்ற நிலை. ஆள்வினை – முயற்சி; ஆணின் செயலாதலின் ஆள்வினை என்றனர். கயம் – ஆழமான குளம். கல்லளை –மலைக்குகை; பாறையிடுக்கு. வாங்குசிலை – வளைவான வில். புனிற்று இடும்பை – ஈன்றதன் அணிமை காரணமாக ஏற்படும் நோவு. ஒருத்தல் – களிற்றுத் தலைவன்,
இறைச்சிப் பொருள் : 'பிணவின் புனிற்றிடும்பை தீரப் பெரும்புலி களிற்றைக் கொன்று இழுத்துக்கொண்டு போதலைப்போலத் தலைவனும் இல்லத்து வறுமை அகலப் பொருளினை மிகுதியாக ஈட்டிக்கொண்டு வருவான்' என்பதாம்.
விளக்கம் : 'வண்ணம் நோக்குதல்' பிரிந்தால் அதுதான் வேறுபடுமே என்னும் ஆற்றாமையினால். 'மென்பொழி கூறல்' அவள் மனம் புண்படாவாறாம். நீரற்ற நெடுவழியினை, அதன்கண் மறைந்திருக்கும் ஆறலை கள்வர்க்கும், கொடும்புலிக்கும் அஞ்சாது கடந்துசென்று பொருளீட்டி வருதல், இல்லத்தில் தலைவியுடனிருந்து அதனால் அறம்பல செய்து இன்புறுதற்கே என்று கொள்ளல் வேண்டும். 'வருந்தேன்' என்றது இவ் வுண்மையினை உணர்தலால்.
ஒப்பு : ஆண்புலியைக் 'கோள்வல் ஏற்றை' எனக் குறுந்தொகைச் செய்யுளும் (141), அகநானூற்றுச் செய்யுளும் (171) உரைப்பதனால், புலியின் ஆற்றலை அறியலாம். இவ்வாறே ஆள்வினையை முடித்துவரும் ஆற்றலையுடையவன் தலைவன் என்பதுமாம். 'மராஅம்'– செங்கடம்பு மரம்; முருகன் கோயில் கொள்ளும் மரம்!