149. அலர் சுமந்து ஒழிக!

பாடியவர் : உலோச்சனார்.
திணை : நெய்தல்.
துறை : (1) தோழி தலைவியை உடன்போக்கு வலித்தது; சிறைப்புறமாகச் சொல்லியதூஉமாம்.

[(து–வி.) (1) தலைவனுடன் போய்விடுவதற்குத் தலைவியை வற்புறுத்திக் கூறுவது; (2) சிறைப்புறம் நிற்கும் தலைவன் கேட்டுணர்ந்து மணவினைக்கு விரைதற் பொருட்டுத் தோழி கூறுவது]

சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்றச்
சிறுகோல் வலந்தனள் அன்னை அலைப்ப
அலந்தனென் வாழி தோழி! கானல் 5
புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவல்
கடுமாப் பூண்ட நெடுந்தேர் கடைஇ
நடுநாள் வரூஉம் இயல்தேர்க் கொண்கனொடு
செலவுஅயர்ந் திசினால்; யானே;
அலர்சுமந்து ஒழிகஇவ் அழுங்கல் ஊரே! 10

தோழீ, வாழ்வாயாக! நம்மூர்த் தெருக்களிலே, சிலரும் பலருமாகக் கூடி, நின்று தம் கடைக்கண்ணாற் பார்த்து, மூக்கின் உச்சியிலே சுட்டுவிரலைச் சேர்த்துக் கொண்டாராகப் பழி தூற்றித் திரிவாவாராயினர். அவரது பழியுரைகளைக் கேட்டறிந்த நம் அன்னையும், சிறுகோல் ஒன்றைக் கைக்கொண்டு சுழற்றியபடியே என்னை. அடிப்பாளாயினள்! இவற்றால் யானும் மிகவும் துயர் உற்றேன். காண்பாயாக! இத் துன்பமெல்லாந் தீரும்படியாக.

கானலிடத்தே விளங்கும் புதுமலர்களைத் தீண்டியதனாலே பூமணம் கமழும் நிறங்கொண்ட பிடரி மயிரையுடைய, கடிதாகச் செல்லும் குதிரைகள் பூட்டப்பெற்றிருக்கும் நெடிய தேரை விரையச்செலுத்தியபடி, இரவின் நடுயாமப் பொழுதிலே வருகின்ற அழகிய தேரினனான கொண்கனோடு, நீயும் சென்றுவிடுதற்கு யான் உடன்படா நின்றேன். அங்ஙனம் நீதானும் சென்றனையானால், ஆரவாரத்தையுடைய இவ்வூர்தான், யாது செய்யும்? பழிச்சொற்களைக் கூறுதலைச் சுமந்ததாய் இதுதான் ஒழிந்து போவதாக!

கருத்து : 'ஊர்ப் பழியினின்றும் பிழைத்ததற்குத் தலைவனுடனே உடன்போக்கிற் சென்று விடுதலே நன்று' என்பதாம்.

சொற்பொருள் : கடைக்கண் நோக்கம் – ஒருக்கணித்த பார்வை ; கரவான பார்வை. மறுகு – தெரு. வலந்தனள் – சுழற்றி அடித்தனள். பூநாறு – பூமணங் கமழும். குரூஉ – நிறங்கொண்ட. கடுமான் – விரையச் செல்லும் குதிரைகள். இயல் தேர் – அழகிய தேர்; இயலுகின்ற தேரும் ஆம்.

விளக்கம் : 'தலைவியது குடிமாண்பின் உயர்ச்சி பெரிது; அதனால் நேரடியாகப் பழிக்க அச்சமுற்ற அலவற் பெண்டிர்கள், கடைக்கண் சார்த்தியும், மூக்கு நுனியில் விரலைச் சேர்த்தியும், தமக்குள் கரவாகப் பேசியபடி அலர் உரைப்பார் ஆயினர்' எனலாம். அன்னை தன் மகளை ஐயுற்றனள் என்பதன்றேனும், பிறர் சுட்டிப் பழித்ததற்குக் காரணமாயின தன்மை குடிக்குப் பழியெனக் கொண்டு, மகளை அடித்தனள் எனக. 'அலருரையாற் காமஞ்சிறக்கும் எனினும் அன்னை அறிந்தாளாதலின், இனி இற்செறிப்பு நிகழ்தல் கூடும் என்பதாம். அதன் பின்னர்த் தலைவனோடு சேர்தல் வாயாதாகலின், அன்றிரவே போய்விடுதல் நன்றென்கின்றாள்.

இனிச் சிறைப்புறமாகச் சொல்லியதென்று கொள்ளின், இவற்றைத் தோழி படைத்து மொழித்தாளாகக் கொள்க. இதனைக் கேட்கும் தலைவன், இனித் தலைவியை முறையாக மணந்துகொள்ளுதலே செயத்தகுந்த தென்று கொள்வான்; அதனால் விரைவில் மணவினைக்கும் முயல்வான் என்றறிக. தோழி, தலைவிக்குக் கூறுவாள் போலத் தலைவனும் கேட்டுணருமாறு இங்ஙனம் கூறினள் என்றும் கொள்ளுக.

மேற்கோள் : 'இச் செய்யுள் அலர் அச்சம் நீங்கினமை கூறியது' எனக் (அகத். 42) காட்டித் தலைவி கூற்றாகக் கொள்வர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். தலைவர், தேர் முதலியவற்றை ஏறிச்சென்று தலைவியரைக் கூடுதற்கும் உரியரெனப் புலவர் கூறுதற்கும் மேற்கோளாகக், 'கடுமான் பரிசுடைஇ, நடுநாள் வரூஉம்' என்பதனையும் அவர் காட்டுவர்.

ஆசிரியர் இளம்பூரணனார், 'உடன்போக்கு ஒருப்பட்டதற்குச்' செய்யுளாகக் காட்டுவர் (தொல். அகத். சூ. 45 உரை). பொருளியலுள், 'போக்கும் வரைவும் மனைவிகண் தோன்றும் என்பதற்கு உதாரணமாகவும் காட்டுவர். அலர் மிகாமைக் கூறும் கூற்றினும் கற்புக்கடம் பூண்டு கூறுதலுக்கு, 'நடுநாள் வருஉம்....... 'அழுங்கலூரே' என்ற பகுதியையும் இவர் காட்டுவர்.

பிற பாடங்கள் : சிறுகோல் வலத்தள் அன்னை; 'கடுமான் பரிய கதழ்பரி கடைஇ'; 'புதுமலர் தீண்டிய பூண்நாறு குரூஉச் சுவல்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/149&oldid=1731750" இலிருந்து மீள்விக்கப்பட்டது