158. யானோ காணேன்!

பாடியவர் : வெள்ளைக்குடி நாகனார்.
திணை : குறிஞ்சி.
துறை : ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் சிறைப் புறமாகச் சொல்லியது.

[(து–வி.) இரவுக் குறிக் கண்ணே தலைவனும் வந்தானாதலை அறிந்த தோழி, இரவுக்குறியை மறுத்து வரைந்து கோடலை வலியுறுத்த நினைக்கின்றாள்; தலைவிக்குச் சொல்லுவாள் போலத் தலைவனும் கேட்டு அறியுமாறு இப்படிக் கூறுகின்றாள்.]

அம்ம வாழி, தோழி! நம்வயின்
யானோ காணேன் அதுதான் கரந்தே
கல்லதர் மன்னும் கால்கொல் லும்மே;
கனை இருள் மன்னும் கண்கொல் லும்மே
விடர்முகைச் செறிந்த வெஞ்சின இரும்புலி 5
புகர்முக வேழம் புலம்பத் தாக்கிக்
குருதி பருகிய கொழுங்கவுட் கயவாய்
வேங்கை முதலொடு துடைக்கும்
ஓங்குமலை நாடன் வரூஉம் ஆறே.

தோழீ; வாழ்வாயாக! யான் கூறுவதான இதனையும் கேட்பாயாக: மலைப்பிளப்பான குகையிடத்தே பதுங்கியிருந்த வெய்ய சினத்தையுடைய பெரிய புலியானது, புள்ளிகள் அமைந்த முகத்தையுடைய வேழமானது வருந்துமாறு அதன் களிற்றைத் தாக்கிக் கொல்லும்: அக்களிற்றது குருதியையும் பருகும்; கொழுமையான கவுளைக் கொண்ட தன் பெரிய வாயினை வேங்கை மரத்தின் அடிப்பாகத்தே துடைத்துக்கொள்ளும்; உயர்ந்த மலைகளைக் கொண்ட நாட்டிற்கு உரியோனாகிய தலைவன் வருகின்ற மலையகத்து நெறியின் தன்மை அத்தகையது போலும்! அவ்வழிதான் வழியிடைக்கண் மறைவாகக் கிடக்கும் நிறைந்த கற்களைக் கொண்டமையினால் நடக்கும் கால்களைக் கொன்றுவிடுமே! மிக்க இருளால் நிரம்பிய இரவுப் பொழுதும் கண்களைக் கொன்று விடுமே! இதனின்றும் அவனைக் காத்தற்கு நம்மிடத்ததாய ஒன்றனை யானும் காணேனே!

கருத்து : 'இரவுக் குறிக்கண் வருதலைக் காட்டினும் வரைந்து மணந்து கொள்ளுதலைச் செய்யானோ?' என்பதாம்.

சொற்பொருள் : கனையிருள் - மிக்க இருள். புகர் – புள்ளி. 'வேழம்' என்றது பிடியினை: களிற்றைப் புலி தாக்குதலைக் கண்டதும் அதன் பிடியானது புலம்பித் துடிப்பதாயிற்று என்க.

விளக்கம் : கல்லதர் – கற்கள் பொருந்திய வழி: நடப்பாரின் கால்களைச் சிதைத்து வருத்துவதனால் 'மன்னும் கால் கொல்லுமே' என்றனர். இவ்வாறே, இருள்தான் தன் செறிவு மிகுதியினாலே கண்ணினது பார்வையைக் கெடுக்கும் என்பதாம். 'காடு புலியுடையது; கற்கள் பொருந்தியது; நேரமோ கண்கொல்லும் இருட்டு; அவர் அவ்வழி வருதலை நினைந்து யாமும் வருந்துவோம்; அவர் இனி வராதிருப்பின் நன்று' என்பதாம். இதனைக் கேட்கும் தலைவன் வரைவுவேட்டலிலே மனஞ்செலுத்துவான் என்பதாம்.

உள்ளுறை : "புலி களிற்றைத் தாக்கிக் குருதியைப் பருகி வேங்கையின் அடிமரத்திலே சென்று தன் வாயைத் துடைக்கும்" என்றது, ஐயன்மார் தலைவனைத் தாக்கிச் சிதைத்துத் தகப்பனின் முன்பாகக் கொண்டு போய் நிறுத்துவர் என்பதாம். இதனாலும், இரவுக்குறி மறுத்து வரைவுவேட்டமை தெளிவாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/158&oldid=1731772" இலிருந்து மீள்விக்கப்பட்டது