நற்றிணை 1/159
159. அவளும் ஒல்லாள்!
- பாடியவர் : கண்ணம் புல்லனார்.
- திணை : நெய்தல்.
- துறை : தலைவியின் ஆற்றாமையும் உலகியலும் கூறி வரைவு கடாயது.
[(து–வி.) பகற்குறிக்கண் தலைவனும் தலைவியும் கூடி வருகின்ற காலம்; மாலையிலே பாக்கஞ்சேரும் தலைவி தலைவனைப் பிரிந்திருக்க ஆற்றாளாய்த் துயருறுகின்றனள் என்று கூறி, அதனால் தம் பாக்கத்து வந்து இரவுப்போதிற்குத் தங்கிப் போகுமாறு தோழி கூறுகின்றாள். தலைவன் இதனை ஏற்கானாய், வரைந்து கோடலிலேயே மனஞ்செலுத்துபவனாவன் என்பதாம்.]
மணிதுணிந் தன்ன மாஇரும் பரப்பின்
உரவுத்திரை கெழீஇய பூமலி பெருந்துறை
நிலவுக்குவித் தன்ன மோட்டுமணல் இடிகரைக்
கோடுதுணர்ந் தன்ன குருகுஒழுக்கு எண்ணி
எல்லை கழிப்பினும் ஆயின் மெல்ல
5
வளிசீத்து வரித்த புன்னை முன்றில்
கொழுமீன் ஆர்கைச் செழுநகர்ச் செலீஇய
'எழு'எனின் அவளும் ஓல்லாள்: யாமும்
'ஒழி'என அல்லம் ஆயினம்; யாமத்து
உடைதிரை ஒலியின் துஞ்சும் மலிகடற்
10
சில்குடிப் பாக்கம் கல்லென
அல்குவதாக, நீ அமர்ந்த தேரே!
கரிய பெருங் கடலானது, நீலமணியைக் குற்றம் அற்றதாய்த் தெளிந்து கொண்டாற்போன்ற நீர்ப்பரப்பைக் கொண்டிருப்பதாகும். அதன் வலிய அலைகள் கொணர்ந்து குவித்த மணலிடத்தே பூக்கள் நிறைந்து கிடக்கும் அழகினைக் கொண்டது பெரிதான கடற்றுறை. அத் துறைக்கண் நிலவைக் குவித்து வைத்தாற்போன்ற முகடுயர்ந்த மணல்மேட்டினது இரந்துசரியும் கரையிடத்தே யாமும் நிற்பேம். சங்குகளை இணையாகத் தொடுத்துப் போட்டாற்போல வரிசை வரிசையாக அமர்ந்திருக்கும் கடற் குருகுகளை எண்ணிக் கண்டபடி நின்னோடும் பகலினைப் போக்கினோம். ஆயின், 'காற்றடித்துக் கோலஞ் செய்த புன்னைமரம் நிற்கும் முற்றத்தையுடைய கொழுவிய மீனுணவை உண்ணும் செழுமையான மனையகத்துச் செல்வதன் பொருட்டாக எழுவாயாக' என்று மெல்லச் சொன்னேமாயின், அவளும் அதற்கு இசைவாள் அல்லள். யாமும், 'வாராதே இவ்விடத்தேயே ஒழிவாயாக' என்றுரைக்கும் நிலையினம் அல்லேம். அதனால், சேர்ப்பனே! நின் தேர்தான் நடுயாமத்தே உடையும் அலையினது ஒலியினைக் கேட்டபடியே உறக்கங் கொள்ளும் கடல்வளம் சிறந்த எம்பாக்கம் ஆரவாரிக்கும்படியாக இரவுப்போதிற்குத் தங்குவதாக!
கருத்து : 'இரவில் வந்து எம் இல்லத்து விருந்தினனாகத் தங்கிச் செல்வாயாக' என்பதாம்.
சொற்பொருள் : மணி – நீலமணி. துணிதல் – ஆய்ந்து தெளிதல். ஒழுங்கு – வரிசை. வரித்தல் – கோலஞ்செய்தல் கொழுமீன் – கொழுமையான மீன். நகர் – மனை. அல்குதல் – தங்குதல்.
விளக்கம் : "நீதான் அகன்றதற்பின் இவள் நின்னோடும் கூடிய இடனையும், ஆடிக்களித்த துறையையும் நோக்கி நோக்கி மெலிந்து இரங்கியிருப்பாளேயன்றி, இல்லிற்கு எழுதற்கும் இசையாள்: நீதான் பாக்கம் புகுந்தனையாயின், இவளும் நின்னைத் தொடர்ந்தாளாக வருவாள்" என்று கூறுவாளாகத், தலைவியின் பிரிதற்கு இசையாத பேரன்பினைத் தோழி தலைவனுக்கு உரைக்கின்றாள். வரைந்தாலன்றித் தலைவியை அவளூரில் அவளில்லத்திலேயே முயங்குதல் வாயாதாகலின் இது வரைவுகடாய தாயிற்று.
'கடலுள் சென்று மீனார்ந்த குருகினமும் கரைக்கண் திரும்பின; அவள்தான் தன் இல்லத்திற்குத் திரும்புங் கருத்திலள்' என்பதும் ஆம்.