160. கண்டதும் இழந்தேன்!

பாடியவர் : ......
திணை : குறிஞ்சி.
துறை : கழற்றெதிர் மறை

[(து–வி.) 'தலைவனின் களவுறவினாலே அவனது பண்பு நலன்கள் கெட்டன' என்று பாங்கன் பழித்துக் கூற, அவனுக்கு எதிருரையாகத் தன் மனநிலையைத் தலைவன் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

நயனும் நண்பும் நாணுநன்கு உடைமையும்
பயனும் பண்பும் பாடறிந்து ஒழுகலும்
நும்மினும் அறிகுவென்-மன்னே; கம்மென
எதிர்த்த தித்தி எர்இள வனமுலை
விதிர்த்துவிட் டன்ன அந்நுண் சுணங்கின், 5

ஐம்பால் வகுத்த கூந்தல் செம்பொறித்
திருநுதல் பொலிந்த தேம்பாய் ஓதி
முதுநீர் இலஞ்சிப் பூத்த குவளை
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரிமதர் மழைக்கண் காணா ஊங்கே. 10

விரைய எதிர்ப்பட்டுத் தோன்றிய தித்தியை உடையவள்; எழுச்சிகொண்ட இளைதான அழகிய முலைகளைக் கொண்டவள்: அவற்றின்பால் அள்ளித் தெளித்தாற்போல விளங்கும் அழகிய நுண்மையான தேமற் புள்ளிகளையும் பெற்றுள்ளவள்; ஐம்பகுதியாக வகுத்து முடிக்கப்பெற்ற கூந்தலைக் கொண்டவள்; சிவந்த புள்ளிகளைக் கொண்ட அழகிய நெற்றியிடத்தே அழகுறப் படிந்த தேன்பாய்கின்ற ஓதியைப் பெற்றிருப்பவள்; நாட்பட்ட நீரினைப்பொருந்திய பொய்கையிலே பூத்திருக்கும் குவளை மலர்களை எதிர் எதிராக வைத்துத தொடுத்தாற்போன்ற, செவ்வரிபரந்த மதர்த்த கண்களை உடையவள்; இவள்! இவள் கண்களைக் காண்பதன் முன்பாக நயனும், நண்பும், நாணம் நன்றாக உடைமையும், பயனும், பண்பும், பாடறிந்து ஒழுகுதலும் ஆகிய எல்லாமே நும்மினுங் காட்டில் அறிந்தொழுக வல்லவனாக யானும் இருந்தேன்! இவளைக் கண்டதன் பின்னர், அனைத்துமே இழந்தேன்; இனி இரங்கிப் பயன்யாது கொல்லோ?

கருத்து : 'இனி அவளை அடைதல் ஒன்றே நின்னாற் செயத்தகுவதான ஒரு காரியம்' என்பதாம்.

சொற்பொருள் : நயன் – நற்பண்பு: அனைவருடனும் கலந்து பழகும் நயப்பாடு நண்பு – அடைந்தாரது நட்பைப் போற்றலும், பகைத்தாரை வசப்படுத்தி நட்பாக்கலும், நாணம் – தகுதியிற் குறைந்தன செய்தற்கு முற்படாவாறு தடுக்கும் குணம். பயன் – ஈத்து உவத்தல். பண்பு – நன்மை தீமையறிந்து ஒழுகுதல். பாடறிந்து ஒழுகுதல் – உலக வழக்கத்தை அறிந்து ஒழுகுதல். தித்தி – அடிவயிற்றுப் பகுதியில் தோன்றும் அழகுத் தேமல். சுணங்கு – முலைகளிடைத் தோன்றும் பொன்னிறப் புள்ளிகள். ஏர் – அழகு; எழுச்சி. வனமுலை – வனப்புக்கொண்ட முலைகள். விதிர்த்தல் – தெளித்தல். ஓதி – கூந்தல்; கூந்தல்ஓதி - இருபெயர் ஒட்டு. முதுநீர் – முதிர்ந்த நீர். இலஞ்சி – பொய்கை, அரி – செவ்வரி, சிவப்பான இரேகைகள்.

விளக்கம் : இவள் மழைக்கண் காணா ஊங்கே நயனும்..... உடையேன்' என்றலின், கண்டதன்பின் உடையேனல்லன் என்றதுமாம், இவனையன்றிப் பிறர்பாற் பழகுதற்கு மனம் பொருந்தாமையின் நயன் அற்றான்; இவளது நட்பையன்றிப் பிறர் நட்பினை நாடாமையின் நண்பு அற்றான்; பெண்பால் இரத்தற்கும் துணிந்து தாழ்ந்தமையின் நாணம் இழந்தான்; பிறருக்காகவன்றி இவளுக்காகத் தன் உயிரையும் கொடுத்தற்குத் துணிந்தமையால் பயன் இவளென்றே கருதிப் பிற பயன்களை ஒதுக்கினான்; களவு உறவின் பழியுடைமை அறிந்தும் மேற்கொண்டானாதலின் பண்பு மறந்தான்; உலக வழக்கம் மணந்து வாழ்தலே என்றறிந்தும் அதனை மேற்கொள்ளாது களவிலே துய்க்கத் துணிதலின் பாடறிந்து ஒழுகுதலையும் கைவிட்டான்" என்று கொள்க.

மேற்கோள் : 'நிற்பவை நினைஇ நெகிழ்பவை உரைப்பினும்' என்னும் துறைக்குக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். களவியல். சூ.11. உரை மேற்கோள்). உலகத்து நிலைபேறாகக் கருதப்படுவனவாய் நற்குணங்களையும் காதலியைக் கண்ட போதிலேயே இழந்துவிடும் தலைவனது மனப்போக்கை இச் செய்யுள் காட்டுவதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/160&oldid=1731776" இலிருந்து மீள்விக்கப்பட்டது