நற்றிணை 1/167
167. பசப்பினைக் களையா!
- பாடியவர் :
- திணை : நெய்தல்.
- துறை : தோழி பாணற்கு வாயில் மறுத்தது; தூதொடு வந்த பாணற்குச் சொல்லியதூஉம் ஆம்.
[(து–வி) (1) பரத்தையிற் பிரிந்த தலைவனின் பொருட்டாகத் தலைவிபால் தூதுவந்த பாணனிடம், தலைவியின் நிலையைத் தோழி கூறிப் போக்குவது இது. (2) வினைவயின் சென்ற தலைவனின் வருகையை அறிவித்து முற்பட வந்த பாணனுக்குத் தோழி சொல்வதாக அமைந்ததூஉம் ஆம்.]
கருங்கோட்டுப் புன்னைக் குடக்குவாங்கு பெருஞ்சினை
விருந்தின் வெண்குருகு ஆர்ப்பின் ஆஅய்
வண்மகிழ் நாளவைப் பரிசில் பெற்ற
பண் அமை நெடுந்தேர்ப் பாணியின் ஓலிக்கும்
தண்ணந் துறைவன் தூதொடும் வந்த
5
பயன்தெரி பனுவற் பைதீர் பாண!
நின்வாய்ப் பணிமொழி களையா பல்மாண்
புதுவீ ஞாழலொடு புன்னை தாஅம்
மணம்கமழ் கானல் நாண்நலம் இழந்த
இறைஏர் எல்வளைக் குறுமகள்
பிறைஏர் திருநுதல் பாஅய பசப்பே.
10
புன்னையது மேற்குப்பக்கமாக வளைந்து சாய்ந்திருக்கும் கரிய தண்டினைக் கொண்ட பெருங்கிளையிடத்தே புதுவதாக வந்து தங்கிய வெளிய நாரையானது ஒலி செய்யுமானால், அவ்வொலியானது ஆஅய் அண்டிரது வள்ளன்மையாலே மகிழ்ச்சிகொண்ட நாளோலக்கத்திலே பரிசில் பெற்ற இரவலர்களது பண்ணுதலமைந்த நெடிய தேரினது ஒலியைப் போல ஒலித்தபடியிருக்கும், தண்ணிய கடற்றுறைக்கு உரியோன் தலைவன். அவனுக்காகத் தூதுரைக்கும் ஏவலோடு வந்துள்ளவனே! பயன் தெரிதலுறும் பனுவல்களை வருத்தமின்றிக் கூறிக் காட்டவல்ல பாணனே! நின் வாயிடத்தாக வழங்கும் பணிவான சொற்களைச் கைவிடுவாயாக. பலவான மாண்புகளைக் கொண்ட ஞாழலின் புதுப்பூக்களோடு புன்னையின் புதுப்பூக்களும் உதிர்ந்து கலந்துகிடந்து மணங் கமழுகின்ற கானற்சோலையிடத்தே, நின் தலைவனோடு கொண்ட நட்பினாலே தன் மாண்பு கொண்ட அழகினையெல்லாம இழந்தவள் தலைவியாவாள். சந்திடத்து அழகுற விளங்கும் ஒள்ளியவளைகளைக் கொண்ட இளையோளாகிய இவளது, பிறைபோலும் அழகிய நெற்றியிடத்தே, பரவிய பசலை நோயானது படர்ந்துள்ளது; அதனை நின்சொற் களையா காண்!
கருத்து : 'நின் சொற்களால் இவளது பசலை தீராது; ஆதலின் நீதான் சென்று வருக!' என்பதாம்.
சொற்பொருள் : குடக்கு – மேற்கு. வாங்கல் – வளைதல். விருந்தின் வெண் குருகு – புதுவதாய் வந்தமர்ந்த வெளிய நாரை. நாளவை – நாளோலக்கம். 'பனுவல்' என்றது, இசை நுட்பங்களை வரையறுத்தும் கூறும் நூல்களை; அவற்றை ஐயமறக் கற்றுத் தெளித்தவன் பாணன் எண்பதாம். பணி மொழி – பணிவான சொற்கள்; பண்ணின் இனிக்கும் சொற்களுமாம். இறை – சந்து. ஏர் – பேரழகு.விளக்கம் : 'குடக்கு வாங்கு பெருஞ்சினை' என்றலால், இச்செய்யுளைச் செய்தவர் ஆய்நாட்டின் கிழக்குத் திசையிலே உள்ளவரென்பதும், ஆயிடம் சென்று பரிசில் பெற்றவருள் ஒருவரென்பதும் விளங்கும். 'நாளவைப் பரிசில் பெற்ற' என்பது. அரசர்கள் பரிசில் வழங்குதல் தம் நாளவைக்கண் இருந்தே என்பதனையும் காட்டும். 'பயன்' ஏழிசையின் சுறுபாடுகள்; 'பயன்தெரி பனுவல்' என்றது, யாழிசை நுணுக்கங்களைக்குறித்த நூற்களாம். 'கானலிடத்து மாண்நலம் இழந்த' தன்மை கூறியது, முதற்களவுக் கூட்டத்தின் நிகழ்விடத்தைச் சுட்டியதாம்.
இறைச்சிகள் : (1) ‘நாரை நரலுதல் தேர்ப்பாணியின் ஒலிக்குமென்பது, பாணனின் பணிமொழி தானும் தலைவனின் அருண்மைத் தோன்றக் கேட்பதாகும்' என்பதாகும்.
(2) ஞாழற்பூவும் புன்னைப்பூவும் விரவிய மணத்தையுடைய கானல் என்றது, அவ்வாறே தலைவியையும் பரத்தையையும் ஒப்பக் கருதும் மனநிலையினன் தலைவனாயினான என்றதாம்.
இவற்றால் தலைவியது ஆற்றாமை மிகுதியை உரைத்துத் தலைவனை அவளும் ஏற்பாள் என்ற கற்புச் செவ்வியையும் புலப்படுத்தினளாம்.