நற்றிணை 1/168
168. பண்பெனப் படுமோ!
- பாடியவர் :
- திணை : குறிஞ்சி.
- துறை : தோழி இரவுக் குறி மறுத்தது.
[(து–வி.) இரவுவேளையிலே தலைவன் வருதலால், வழியிடையே உண்டாகும் ஏதப்பாடுகளை நினைந்து, அதனை விளக்கித் தலைவியை அவன் மணம் புரிந்து கொள்ளுதலை மேற்கொள்ளுமாறு செய்தற்கு நினைக்கின்றான் தோழி. அதனால், தலைவனிடம் இவ்வாறு உரைக்கின்றனள்.]
சுரும்புண விரித்த கருங்கால் வேங்கைப்
பெருஞ்சினைத் தொடுத்த கொழுங்கண் இறாஅல்
புள்ளுற்றுக் கசிந்த தீம்தேன் கல்லலைக்
குறக்குறு மாக்கள் உண்ட மிச்சிலைப்
புன்தலை மந்தி வன்பறழ் நக்கும்
5
நன்மலை நாடர் பண்புஎனப் படுமோ
நின்நயந்து உறைவி இன்னுயிர் உள்ளாய்
அணங்குடை அரவின் ஆர்இருள் நடுநாள்
மைபடு சிறுநெறி எஃகுதுணை ஆக
ஆரம் கமழும் மார்பினை;
சாரற் சிறுகுடி ஈங்குநீ வரலே?
10
கரிய அடியையுடைய வேங்கையின் பெரிய கிளையிலே வண்டுகள் உண்ணும்படியாக மலர்கள் இதழவிழ்ந்தவாய் நிரம்பியிருந்தன. அவ்விடத்தே கொழுலிய கண்களையுடைய தேனிறாலைத் தேனீக்கள் தொடுத்திருந்தன. அத் தேனிறால்கள் வண்டுகள் மொய்த்தலாலே கசியத் தொடங்கின. கசிந்து கல்லின்குழிகளிலே வழிந்த இனிய தேனைக் குறவரின் இளமகார் வழித்து உண்டனர். அவர்கள் உண்டு எஞ்சியதை மெல்லிய தலையையுடைய மந்தியின் வலிய குட்டிகள் தாமும் சென்று நக்குதலைச் செய்யும். இத்தகைய நன்மையுடைய மலைநாடனே! நின்னை விரும்பியவளாக இவ் விடத்தே தங்கியிருக்கும் தலைவியின் இனிய உயிரானது படுகின்ற வேதனையை நினைந்தாயல்லை. அச்சத்தைத் தரும் பாம்புகள் திரிதலையுடைய இருள்மிகுந்த இரவின் நடுயாமப் பொழுதிலே, மயக்கத்தினைத் தருகின்ற சிறுவழியினூடே நின் கைக்கொண்ட வேலே நினக்குத் துணையாக நீ வருகின்றனை! சந்தனத்தின் மணங்கமழுகின்ற மார்பினை உடையையாய்ச் சாரலிடத்துள்ள எம் சிறுகுடிக்கு நீதான் வருதலை உடையாய்! அதுதான் நினக்குப் பண்பு என்று சொல்லத்தகுந்த ஒரு செயலாகுமோ?
கருத்து : 'இரவின்கண் வருதலைக் கைவிட்டுவிட்டு இவளை மணந்துகொள்ளுதலிலே மனஞ் செலுத்துவாயாக!' என்பதாம்.
சொற்பொருள் : சுரும்பு – வண்டு. புள் – வண்டு. அளை – கல்லிடத்துக் காணப்பெறும் குழிகள். குறுமாக்கள் – சிறுவர், பண்பு – தகுதிப்பாடு. அணங்கு – அச்சம். மை – மயக்கம். எஃகு - வேல். ஆரம் – சந்தனம்.
விளக்கம் : 'நீ தனியே இரவின்கண் வருகின்றனை; வழியிடையே நினக்குத் துன்பமுண்டாகுயோ எனக் கருதி இவள்தான் வருந்தி உயிர் நலிவாள்! இவளுயிர் காக்கப்படுதலை நீ கருதாயோ?' என்பாள், 'நின் நயந்து உறைவி இன்னுயிர் உள்ளாய்' என்றனள். 'அணங்குடை அரவு' என்றது கொடிய நாகப் பாம்புகளை. 'ஆரங்கமழும் மார்பினை' என்றது நறு நாற்றத்தால் நின் வரவை எம் மனைக்காவலர் உணர்வர் என்று கூறியதாம். இரவுக்குறி மறுத்து இதனால் வரைவு வேட்டல் பயனாக ஆயிற்று
உள்ளுறை : வேங்கை தவைவியாகவும், சுரும்புணவிரிந்தது அவள் பருவமலர்ச்சி யுற்றதாகவும், அதனிடத்துள்ள இறாவின் தேன் தலைவியிடத்து விளங்கும் இன்பமாகவும் புள் மொய்த்தல் தோழியர் சூழ்ந்திருப்பதாகவும், கசிந்து வீழ்ந்த தேனைக் குறமக்கள் உண்பது மிக்க நலனைப் பசலை படர்ந்து உண்டொழிப்பதாகவும், எஞ்சியது மந்தி வன்பறழ் நக்குதல் தலைவன் ஒரோவொருகால் தலைவியைக் களவிற் கூடுவதாகவும் கொள்க.