179. பொய் புகலாகப் போயினள்!

பாடியவர் : .........
திணை : பாலை.
துறை : மனை மருட்சி.

[(து–வி.) தலைமகனுடன் சென்றுவிட்ட தன் மகளை நினைந்தாள் நற்றாய். தன் இல்லிலிருந்தவாறு பலவாறாகச் சொல்லிச்சொல்லி மனம் மயங்குவதாக அமைந்த செய்யுள் இது. மென்மையும் இளமையும் கொண்டாளான தன் மகள் எவ்வாறு வழி நடப்பாளோ? அவளைப் பிரிந்து எவ்வாறு தானும் ஆற்றியிருப்பதோ? என அவள் புலம்புகின்றாள்.]

இல்லெழு வயலை ஈற்றுஆ தின்றெனப்
பந்துநிலத்து எறிந்து பாவை நீக்கி
அவ்வயிறு அலைத்தஎன் செய்வினைக் குறுமகள்
மானமர்ப் பன்ன மையல் நோக்கமொடு.
யானுந் தாயும் மடுப்பத் தேனொடு 5
தீம்பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி
நெருநலும் அனையள் மன்னே; இன்றே.
மையணற் காளை பொய்புக லாக
அருஞ்சுரம் இறந்தனள் என்பதன்
முருந்தேர் வெண்பல் முகிழ்நகை திறந்தே. 10

இல்லிடத்தே முளைத்துப் படர்ந்திருந்த வயலைக்கொடியினைக் கன்றையீன்ற பசுவானது தின்றுவிட்டது; அதைக் கண்ட அவள் கலங்கினாள்; தான் விளையாடியபடியிருந்த கையிடத்துப் பந்தை நிலத்திலே எறிந்தாள்; தான் வைத்திருந்த பஞ்சாய்ப் பாவையினை ஒருபுறமாகப் போட்டாள்; தன் அழகிய வயிற்றிடத்தே கையால் அடித்துக் கொண்டு புலம்பினாள். செய்யுங் காரியங்களிலே தேர்ந்த என் இளமகளின் தன்மைதான் இத்தகையது ஆயிற்றே! யானும் செவிலித்தாயும் அவளுக்குப் பாலினை ஊட்ட முயன்றபோது, மானின் அமர்த்த நோக்கைப் போன்ற மயங்கிய பார்வையினை யுடையளாய், தேன்கலந்த இனிய பாலினையும் உண்ணாளாய். விம்மி விம்மிப் பெரிதும் அழத் தொடங்கினளே! நேற்றைக்கும் அத்தன்மையளாகவே இருந்தனளே! இன்றோ, கரிய அணலையுடைய காளையாவானது பொய்யுரைகளே தனக்குரிய பற்றுக்கோடாகக் கொண்டவளாக, கடத்தற்கு அரிதான சுரநெறியிடத்தேயும் சென்றனள் என்கின்றனரே! இளங்குருத்துப் போலும் அழகியவான தன் வெண்மையான பற்களிடத்தே இளநகையைத் தோற்றுவித்தபடி, மகிழ்ச்சியோடு செல்வதாகவும் கூறுகின்றரே! அவள்தான் எவ்வாறு நடந்து செல்வாளோ? எவ்வாறு அவனோடு கூடி இல்லறம் நடத்துவாளோ?

கருத்து : 'பிள்ளைமைக் குணம் சற்றும் மாறாத என் மகள் புதியவனாகிய இளைஞனின் பேச்சையே வாழ்விற்குப் பற்றுக்கோடாகக்கொண்டு எவ்வாறு சென்றனளோ?' என்பதாம்.

சொற்பொருள் : வயலை – வயலைக் கொடி. ஈற்று ஆ – கன்றையீன்ற பசு. பாவை – பஞ்சாய்ப் பாவை. அவ்வயிறு – அழகிய வயிறு. குறுமகள் – இளமகள். அமர்ப்பு – அமரிய பார்வை. மையல் நோக்கம் – மயங்கிய பார்வை. அணல் – மோவாயின் கீழுள்ள தாடி. காளை – காளை போல்வான், முருந்து – நாணற் குருத்து; மயிலிறகுக் குருத்துமாம்.

விளக்கம் : 'இல்லிடத்து வளர்ந்த வயலைக்கொடியைப் பசு மேய்ந்ததற்கே வயிற்றிலடித்து வருந்திப் புலம்பியவள் என்மகள். அவள் இல்லைந்துறந்து புதியோனின் பின்னர்ச் செல்லும் துணிவினை எவ்வாறு பெற்றனளோ?' எனத் தாய் ஏங்குகின்றாள். இனிய பாலினை ஊட்டவும் உண்ணாது மறுத்துப்போகும் அவள்தான், எவ்வாறு பொறுப்புடன் இல்லறம் பேணுவாளோ?' எனவும் கவலையடைகின்றாள். 'என் செய்வினைக் குறுமகள்' என்பதற்கு, 'என்னுடைய இல்லத்துச் செய்யும் பணிகளையெல்லாம் உடனிருந்து கண்டறிந்த இளமகள்' எனவும் கொள்ளலாம் அதனால் அவள், தன் இல்லறத்தையும் நன்றாகவே நடத்துவாள் என்ற ஒரு சிறு நம்பிக்கையும் தாய்க்குப் பிறக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/179&oldid=1731828" இலிருந்து மீள்விக்கப்பட்டது