183. மடவை மன்ற!

பாடியவர் : ......
திணை : நெய்தல்.
துறை : வரைவிடை வைத்துப் பிரியும் தலைவற்குத் தோழி கூறியது.]

[(து–வி.) வரைவிடை வைத்துத் தலைவியைப் பிரிந்துபோகும் தலைவனிடத்தே, அவனைப் பிரியின் தலைவி உயிர் வாழ மாட்டாள் என்று கூறுவதன் மூலம், அவனை விரையத் திரும்பிவிடுமாறு தோழி இப்படிக் கூறுகின்றாள்.

தம்நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து
பிறநாட்டு உப்பின் கொள்ளை சாற்றி
நெடுநெறி ஒழுகை நிலவுமணல் நீந்தி
அவணுறை முனிந்த ஒக்கலொடு புலம்பெயர்ந்து
உமணர் போகலும் இன்னா தாகும் 5

மடவை மன்ற கொண்க வயின்தோறு
இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும்
நும்மில் புலம்பின் மாலையும் உடைத்தே
இனமீன் ஆர்ந்த வெண்குருகு மிதித்த
வறுநீர் நெய்தல் போல 10
வாழாள் ஆதல் சூழா தோயே.

கொண்கனே! தம் நாட்டிடத்தே விளைந்த வெள்ளை நெல்லைக் கொணர்ந்து தருவார்கள்; தந்து, அதற்குமாறாகப் பிறநாட்டிடத்தே விளையும் உப்பின் மிகுதியைக் கொண்டுபோய்த் தம் நாட்டிடத்தே விற்பார்கள்: நெடிய நெறியிலே வண்டிகளுடனே நிலவுக்காலத்திலே மணற்பாங்கான இடங்களைக் கடந்து செல்வார்கள். இவர்களைப் பிரிந்து அவ்விடத்தே இருப்பதை வெறுத்த சுற்றத்தோடும் கூடியவர்களாக வேற்றுப்புலத்திற்கும் போவார்கள்; உப்பு வாணிகர்கள். அவர்கள் அவ்வாறு தம் சுற்றத்தினை உடன்கொண்டு போகுதலும் அவர்க்கு இன்னாமையினை உடையதாகவே விளங்கும். இடங்கள்தோறும் மிகவும் இன்னாதாய் ஊதைக்காற்றும் வந்து வருத்துகின்றது; நின்னை உடனில்லாததனை உணர்கின்ற தனிமைத் துயரமும் பெருகுகின்றது; அவற்றுடன் மாலைக் காலமும் வந்து நலிவை மிகுதிப்படுத்துகின்றது. மீனினத்தை மிகுதியாகத் தின்ற வெளிய நாரையானது மிதித்துச் சிதைத்த நீரற்ற குளத்திடத்தேயுள்ள நெய்தல் மலரைப் போல, இவளும் நின்னைப் பிரிந்து இனி ஒரு கணப்பொழுதும் வாழமாட்டாள்; இவள் இவ்வாறாதலை ஆராய்ந்து காணாத நீயும், திண்ணமாக அறியாமை உடையை காண்!

கருத்து : 'நீ பிரிந்து போவதாயின் இவள் மனம் நலிந்து செத்து ஒழிவாள்' என்பதாம்.

சொற்பொருள் : வெண்ணெல் – வெள்ளைச் சம்பா நெல். 'பிறநாடு' என்றது நெய்தல் நிலத்தை. கொள்ளை – மிகுதி. சாற்றல் – விலைபகர்தல்; விற்றல் ஒழுகை – வண்டித் தொகுதிகள், ஒன்றன்பின் மற்றொன்றாச் செல்லும் முறைமை பற்றி 'ஒழுகை' என்றனர். நிலவு மணல் – நிலவனைய வெண்மணலும் ஆம்;

விளக்கம் : நீர் வற்றியதனால் அழிவை எதிர் நோக்கி நலிந்திருக்கின்ற நெய்தல் மலரினைக் குருகு மிதித்து அழித்தலைப் போலத் தலைவியைப் பிரிவு என்னும் கொடுமைக்கு உட்படுத்தி நீயும் உயிரழியச் செய்வாய் என்கின்றாள். 'வறுநீர் நெய்தல் போல' என்றது, களவுக் காலத்தே இடையீடுபட்டு வருகின்ற பிரிவினாலே நலிவுற்று, வரைந்து மணந்து கொள்வான் என்ற நம்பிக்கையால் மட்டுமே உயிர்வாழ்ந்திருப்பவள் தலைவி; அவளை நீதான் முற்றவும் அழியச் செய்கின்றனை என்றதாம்; அவள் இல்லத்தார் தரவு அவளுக்கு நலனைத் தருவதில்லை என்பதுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/183&oldid=1731837" இலிருந்து மீள்விக்கப்பட்டது