184. வேகும் உள்ளம்!

பாடியவர்: ......
திணை : பாலை.
துறை : மனைமருட்சி.

[(து–வி.) தலைமகள் தலைமகனுடன் உடன்போக்கிற் சென்றுவிடுகின்றாள்; மகளது பிரிவைப் பொறுக்கமாட்டாத தாய், மனையிலிருந்து மயங்கிப் புலம்புவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

ஒருமகள் உடையேன் மன்னே! அவளும்
செருமிகு மொய்ம்பின் கூர்வேற் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள்!
'இனியே தாங்குநின் அவலம்' என்றிர்; அதுமற்று
யாங்கனம் ஒல்லுமோ? அறிவுடையீரே! 5
உள்ளின் உள்ளம் வேமே உண்கண்
மணிவாழ் பாவை நடைகற் றன்னவென்
அணியியற் குறுமகள் ஆடிய
மணியேர் நொச்சியும் தெற்றியும் கண்டே.

அறிவு உடையவரான பெண்டிர்களே! யானோ பல பெண்களைப் பெற்றவளும் அல்வேன்; ஒரே ஒரு மகளை மட்டுமே உடையவளாக இருந்தேன்; அவளும் இதுகாலைப் போர்க்களத்தே மிக்குச்சென்று போரியற்றும் வலிவுடையானாகிய கூர்மையான வேலினைக் கைக்கொண்டு வந்த காளை ஒருவனோடு, நேற்றிரவுப் போதிலே பெருமலையிடத்தாகிய கடத்தற்கரிய சுரநெறி வழியே சென்றனள். அவளை யிழந்து வருந்தும் என்னிடத்தே, 'அவள் சென்றது அறத்தோடு பட்டது; ஆதலின் நீதான் இனி நின் துயரத்தைத் தாங்கிக் கொள்வாயாக' என்று சொல்லுகின்றீர்கள். அதுதான் என்னால் இயலக்கூடிய தாகுமோ? மையுண்ணும் கண்களிடத்துள்ள மணியிடத்து வாழ்கின்ற பாவையானது வெளிப்போந்து நடைகற்றாற்போல, என் அழகிய சாயலையுடைய இளமகள் விளையாடியிருந்த நீலமணிபோன்ற அழகிய நொச்சியையும் திண்ணையையும் கண்டதும், அவளையே யானும் நினைப்பனே! நினைத்தால், என் உள்ளமும் வேகின்றதே! இதற்கு யான் என் செய்வேனோ?

கருத்து : 'அவளைப் பிரிந்து எப்படி ஆற்றியிருப்பேன்' என்பதாம்.

சொற்பொருள் : ஒரு மகள் – ஒரே குழந்தையாகத் தோன்றிய செல்வ மகள். மொய்ம்பு – வலிமை, அணி இயல். அழகிய சாயல். நொச்சி – நொச்சி வேலியின் அணித்தான இடம். தெற்றி – திண்ணை; தெற்றியாடும் இடமும் ஆம். தெற்றியாடல் – கழற்சியாடல்.

விளக்கம் : மகளது அருமையை நினைத்துத் தாய் புலம்புகின்றாள். ஒரே மகள் என்பது ஏக்க மிகுதிக்கு மேலும் காரணமாகின்றது. இல்லெனில், பிற புதல்வியரால் அத் துயரம் குறைதற்கு வாய்ப்பு உண்டாகும் எனலாம் 'மணிவாழ் பாவை நடைகற்றன்ன' என்றது, தன் மகளது எழிலையும், தான் அவளைப் பேணிய பெருஞ் செவ்வியையும் எண்ணிக் கலங்கிக் கூறியதாம்.

மேற்கோள் : அகத்திணை இயலுள், நற்றாயின் கூற்று நிகழும் இடங்களை வரையறுக்கும் சூத்திர உரையுள், 'அவ் வழியாகிய கிளவி' என்பதற்கு இச்செய்யுளை நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டி, இந்நற்றிணை 'தெருட்டும் அயலிலாட்டியர்க்கு உரைத்தது என்பர்' (தொல்.அகத். 36 உரை).

உவமவியலுள் 'வினையுவமத்தின் வகை என்னும் பகுதியுள் மணிவாழ் பாவை நடைகற்றன்ன என்னும் பகுதியைச் காட்டி. 'நடைகற்றன்ன' என்புழிக் கற்று என்னும் வினையெச்சம் தன் எச்சவினை இகந்தாயிலும். அஃது உவமப்பகுதியாகலான் அங்ஙனம் வருதலும் 'வகை' என்றதனானே கொள்ளப்படும் (உவம.2) என்பர் பேராசிரியர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/184&oldid=1731840" இலிருந்து மீள்விக்கப்பட்டது