189. வங்கம் போவாரோ?

பாடியவர் : ......
திணை : பாலை.
துறை : பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.

[(து–வி.) தன்னைப் பிரிந்து தலைமகன் வேற்றூர்க்குப் போயினதனாலே வருந்தி மெலிந்தாள் ஒரு தலைமகள்; அவட்கு 'சொன்ன சொற்பிழையானாய்த் தலைமகன் விரைய மீள்வன்' என வலியுறுத்திக் கூறி, அவளது நலிவைப் போக்குதற்கு முற்படுகின்றாள் தோழி.]

தம்மலது இல்லா நம்நயந்து அருளி
இன்னும் வாரார் ஆயினும் சென்னியர்
தெறலருங் கடவுள் முன்னர்ச் சீறியாழ்
நரம்பிசைத் தன்ன இன்குரற் குருகின்
கங்கை வங்கம் போகுவர் கொல்லோ? 5
எவ்வினை செய்வர்கொல் தாமே? வெவ்வினைக்
கொலைவல் வேட்டுவன் வலைபரிந்து போகிய
கானப் புறவின் சேவல் வாய்நூல்
சிலம்பி யம்சினை வெரூஉம்
அலங்கல் உலவையம் காடிறந் தோரை? 10

கொடிய தொழிலான கொலைத்தொழிலினைச் செய்தலிலே வல்லவனாகிய ஒரு வேட்டுவன்; அவ் வேட்டுவனது வலையிடத்தே அகப்பட்டு அதனை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றது காட்டுப்புறாவின் சேவல் ஒன்று. தன்

வாயிடத்து உண்டாகும் நூலினாலே சிலம்பி கட்டியுள்ள கோட்டையைக் கண்டதும். அப் புறவுச்சேவல் அதனையும் வலைபோலுமெனக் கருதினதாய் வெருவிற்று. சூறைக்காற்றுச் சுழன்று அடிக்கின்றதும். அத்தன்மையுடையதுமான சுரத்தினிடத்தே சென்றுள்ளவர் நம் தலைவர். அவர் தாம் தம்மை உடனில்லாதே வாழ்தலில்லாத நம்மை விரும்பியவராக அருளிச் செய்தலைக் கருதி, இன்னும் நம்பால் வந்திலர். அங்ஙனம் வாராராயினும் "அவர்தாம் குறித்துச் சென்றுள்ள இடத்திற்கு அல்லாதே வேறு பிறிதான எவ்விடத்துக்கும் சென்றிருப்பார் போலும்? பெற்று உண்ணுஞ்சென்னி யென்னும் உண்கலத்தை உடையோரான பாணர்கள் சினந்தணிதற்கரிய தெய்வத்தின் முன்னர்ச் சென்றாராய், அதன் சினந்தணியுமாறு சிறிய யாழினது நரம்புகளைத் தடவி இசை எழுப்புவர்; அத்தகைய இனிய யாழோசையைப் போலும் குரலினைக் கொண்டவான குருகினங்களை உடைய கங்கையாற்றின் கண்ணே வங்கத்தேறிச் செல்வார் போலும்? அல்லாதே வேறு எத் தொழிலைச் செய்வார் கொல்லோ?" என நினைத்து ஏங்காதே. எதனையும் அவர் செய்யார். நின்பால் விரைய மீள்வர். அதுகாறும் நின் துயரத்தை நீயும் ஆற்றியிருப்பாயாக என்பதாம்.

கருத்து : பிரிந்து போயின காதலர் தம் சொற்பிழையாராய் விரைய நின்பால் மீள்வர்; ஆதலின் நீ தான் நின் பெருகும் பிரிவுத்துயரை ஆற்றியிருப்பாயாக என்பதாம்.

சொற்பொருள் : சென்னியர் – சென்னியை உடையோர்; சென்னி – மண்டையோடு போல்வதொரு பிச்சைப் பாத்திரம். இவர் சீறியாழ் இசைத்தனர் என்பதனாற் 'பாணர்' எனக் கொண்டோம். சிலம்பி – சிலந்திப் பூச்சி. வங்கம் – படகு. கங்கை வங்கம் – கங்கை பாயும் வங்க நாடும் ஆம்.

விளக்கம் : 'காதலனும் காதலியுமாகிய தலைவன் தலைவியர் இருவரும் தம்முள்ளே ஒன்று கலந்த உயிரன்பினர்' என்பாள், 'தம்மலது இல்லா நம்', என்றனள். அவனும் தம்மை விரும்புபவன் எனினும், அவன் பிரிவுக்குத் துணிந்தனன் ஆதலின், அவனினும் காட்டில் தம்முடைய காதலன்பே பெரிதென்பாளாக இவ்வாறு கூறினளும் ஆம். 'தெறலருங் கடவுள்' என்றுரைத்தது நெற்றிக் கண்ணோனாகிய சிவபிரானை. சினந்தணியுமாறு இன்னிசை எழுப்புவர் என்றது, இசையின் இனிமைக்குச் சினத்தை மாற்றும் ஆற்றலுண்டு எனக் காட்டுவதாகும்; இராவணன் இசைத்ததை நினைக்க. சீறியாழ் – சிறிய யாழ்; இவற்றை உடையோரைச் 'சிறுபாணர்' என்பர்; பேரியாழை உடையோர் 'பெரும்பாணர்' ஆவர். 'கங்கை வங்கம் போகுவர் கொல்லோ' என்னும் சொற்கள், அவன் அவ்வெல்லையளவுஞ் செல்லான்; அதற்கிடைப்பட்ட நாடுகளிலேயே தன் செய்தொழிலை முடித்துக் கொண்டானாக விரையத் தலைவிபால் மீள்வான்? என்பதை உணர்த்துதற்காம். இதனாற் பிரிந்த தலைவன் வடநாட்டிற்குச் சென்றமை பெறப்படும். பெரிமயத்திற்கு முன்னர்க் கங்கைக் குருகுகள் ஒலி செய்தலைச் சீறியாழ்ப்பாணர் தெறலரும் கடவுள் முன்னர் அவரைப் போற்றி யாழிசைத்த தன்மைக்கு உவமித்தனர்.

இறைச்சி : வேட்டுவனது வலையிலே அகப்பட்டுத் தப்பிச் சென்ற புறவுச் சேவலானது சிலம்பியின் வலை தனக்கொரு கேடுஞ் செய்யாதாகவும், அதனையுங் கண்டு தன்னை முன்னர் அகப்படுத்துக்கொண்ட வலையினது நினைவினாலே அஞ்சினாற் போல, முன்னர்க் களவுக்காலச் சிறுபிரிவுக்கே பெரிதும் நலனழிந்த தலைவியை அறிந்தவனான தலைவன், இதுகாலை மேற்கொண்ட தன் பிரிவை நீட்டியானாய் விரையத் திரும்புவன் என்பதாம்.

உள்ளுறை : தெறலருங் கடவுளின் சினமும் இன்னிசையால் தணியுமாறு போல, நின்னைப் பற்றி வருத்தும் துயரமும் இன்னிசையால் தணியும்; ஆதலின் யாம் யாழிசைப்போம்; பிரிவுத் துயரைச் சற்றே மறப்போம் வருகவென அழைத்ததுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/189&oldid=1731852" இலிருந்து மீள்விக்கப்பட்டது