190. நகைக்கு மகிழ்ந்தோய்!

பாடியவர் :....
திணை : குறிஞ்சி.
துறை : (1) பின்னின்ற தலைமகன் ஆற்றானாகி நெஞ்சிற்குச் சொல்லியது; (2) அல்ல குறிப்பட்டு மீள்வான் நெஞ்சிற்குச் சொல்லிய தூஉம் ஆம். (3) இடைச்சுரத்துச் சென்று தலைமகள் நலம் உள்ளி மீளலுற்ற நெஞ்சினைக் கழறியதூஉம் ஆம்.

[(து–வி.) (1) தோழிபாற் சென்று தலைவியைத் தனக்கு இசைவித்துக் கூட்டுவிக்குமாறு குறையிரந்து நின்று, அவளால் ஒதுக்கப்பட்ட ஒரு தலைவன், இவ்வாறு தன் நெஞ்சிற்குச் சொல்லுகின்றனன்; (2) இரவுக்குறியிடைத் தலைவியை நாடிச்சென்று காணானாக மீள்பவன் ஒருவன் தன் நெஞ்சிற்கு இவ்வாறாக உரைக்கின்றான்; (3) வினைவயிற் சென்ற ஒரு தலைவன் இடைவழியில் தலைவிபாற் சென்ற தன் நெஞ்சை நோக்கி இவ்வாறு கூறுகின்றனன். இம் மூன்று துறைகட்கும் பொருந்துமாறு பொருள் அமைந்த செய்யுள் இது.]

நோஇனி வாழிய நெஞ்சே! மேவார்
ஆரரண் கடந்த மாரி வண்மகிழ்த்
திதலை எஃகின் சேந்தன் தந்தை
தேங்கமழ் விரிதார் இயல்தேர் அழிசி
வண்டுமூசு நெய்தல் நெல்லிடை மலரும் 5
அரியலம் கழனி ஆர்க்காடு அன்ன.
காமர் பணைத்தோள் நலம்வீறு எய்திய
வலைமான் மழைக்கண் குறுமகள்
சில்மொழித் துவர்வாய் நகைக்குமகிழ்ந் தோயே!

நெஞ்சமே! தன்னுடன் பொருந்தாத பகைவரது கடத்தற்கரிய அரணங்களை எவ்லாம் வென்று கைக் கொண்டவன்; மாரிபோன்ற கை வண்மையினை உடையவன்; கள்ளுண்டு மகிழும் இயல்பினன்; திதலை படர்ந்த வேற்படையினை உடையோனான 'சேந்தன்' என்பவன். அவன் தந்தை 'அழிசி' என்பவன். தேன்மணம் கமழும் இதழ் விரிந்த புதுப் பூக்களால் தொடுக்கப்பெற்ற மாலையையும், அழகிய தேரினையும் உடையவன் அவ் அழிசி, அவனுக்கு உரியது 'ஆர்க்காடு' என்னும் பேரூர். வண்டு மொய்க்கும் நெய்தலின் மலர்கள் நெற்பயிரிடையே மலர்ந்திருக்கும் நீர்வளத்தைக் கொண்டதும் அம் மலர்களினின்றும் நறுந்தேன் கழனிகளிற் பெருகிக் கொண்டிருப்பதுமான சிறப்பையுடையது அவ் ஆர்க்காடு ஆகும். அதன் பெருமையைப் போல, விருப்பம் வருகின்ற பணைத்த தோள்களோடு பிற நலன்களும் வீறெய்தி விளங்கும் பெருமையள் தலைவியாவாள்; வலைப்பட்ட மானினது குளிர்ச்சி கொண்ட கண்களைப் போன்ற கண்களையும் அவள் உடையவள். இளமகளாகிய அவளது சில சொற்களே பேசும் செவ்வாயிடத்தே முகிழ்த்த குறு நகையினைக் கண்டதனாலே மகிழ்ச்சி கொண்டோய்! இனி நீதான் அவளையே நினைந்து துன்புற்று நலிவாயாக. அத் துன்பத்துடன் தானே கூடினையாக நெடிது வாழ்தலையும் செய்வாயாக!

கருத்து : "அவளை நின்னால் மறக்கவியலாது; ஆதலின் வருந்தி நலிவாயாக, நெஞ்சமே" என்பதாம்.

சொற்பொருள் : மேவார் – பகைவர். ஆர் அரண் – பிறரால் வென்று கைக்கொள்ளுதற்கரிய காவன் மிகுந்த கோட்டை. மாரி – மழை; அதன் வன்மை கொடைமிகுதிக்கு உவமிக்கப் பெற்றது; அது பிரதியுபகாரத்தை எதிர்பாராதே வழங்கும் தன்மை. எஃகு – வேல்; திதலை எஃகென்றது பகைவரது குருதிக்கறையோடு விளங்கிய எஃகம் ஆதலினால், சேந்தன் தந்தை – சேந்தனின் தந்தை. அரியல் – மது; இங்கே தேன். நலம் வீறெய்தல் – நலம் மேம்பட்டு விளங்குதல், துவர் வாய் – சிவந்த வாய்.

விளக்கம் : அவளைக் கண்டு கொண்டதற்கு அந் நாளிலே மகிழ்ந்த நெஞ்சமாதலின், அவளைப் பிரிந்ததற்கு வருந்துதலும் அதற்கே உரித்தென்பான், 'நோ, இனி' என்றனன். திதலை – தேமற புள்ளிகள்: இது குருதிக்கறை படிந்த வேலின் தோற்றத்தன்மைக்கு ஒப்பிடப் பெற்றது.

வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலர்ந்து கழனியிடத்தே தேனைச் சொரிதலைப் போன்று, தோழியும் தலைவிக்கு இனிமை சேர்ப்பாளாகித், தன்னைத் தலைவியுடன் கூட்டுவித்தற்கு முயலல் வேண்டும் என்று முதல் துறைக்கேற்பப் பொருள் கொள்ளலும் பொருந்தும்.

அழிசியின் ஆர்க்காட்டைக் கைக்கொள்ளல் எத்துணைக் கடினமோ அத் துணைக் கடினம் தலைவியைப் பெற்றுக் கூடுவதும் எனக் குறிப்பாகக் காட்டி, அவளது குடிப்பெருமையையும். அவள் தன்னால் அடைதற்கு அரியளாவள் என்பதனையும் உரைக்கின்றனள்.

'வலை மான் மழைக் கண்' என்றது, மருண்ட அவளது நோக்கத்தைக் கண்டு உனத்தகத்தே கொண்டதனாற் கூறியதாகும்.

'மகிழ்ந்தோய் நோ, இனி' என்றது. அவளை மறத்தற்கியலாத தன் நெஞ்சத்தினது தன்மையைக் கூறியதாம்.

'சின் மொழித் துவர்வாய் நகை' என்றது, தலைவியும் தன்மேற் கொண்ட காதலன்பை உடையவளாவள் என்று தான் அறிந்தமை கூறியதாகும்.

மூன்று துறைகட்கும் ஏற்பப் பொருளை இசைவித்துக் கண்டு இன்புறுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/190&oldid=1731854" இலிருந்து மீள்விக்கப்பட்டது