நற்றிணை 1/198
198. பெயர் பொலிக!
- பாடியவர் : கயமனார்.
- திணை : பாலை.
- துறை : பின் சென்ற செவிலி இடைச்சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது.
சேயின் வரூஉம் மதவலி! யாஉயர்ந்து
ஓமை நீடிய கானிடை அத்தம்
முன்நாள் உம்பர்க் கழிந்த வென்மகள்
கண்பட நீர்ஆழ்ந் தன்றே தந்தை
தன்னூர் இடவயின் தொழுவேன் நுண்பல்
5
கோடேந்து அல்குல் அரும்பிய திதலை
வார்ந்திலங்கு வாலெயிற்று பொலிந்த தாஅர்
சில்வளை பல்கூந் தலளே அவளே
மையணல் எருத்தின் முன்பின் தடக்கை
வல்வில் அம்பின் எய்யா வண்மகிழ்த்
10
தந்தை தன்ஊர் இதுவே
ஈன்றேன் யானே! பொலிகநும் பெயரே!
கருத்து : 'என் மகளைக் காணாது அலமரும் எனக்கு அவளது பேச்சினை நீவிர் சொல்வீராக; சொன்னால் நும்பெயர் புகழ்பெறும்' என்பதாம்.
சொற்பொருள் : சேயின் – தொலைவிடத்திருந்து, மதவலி – பெருவலிமை. யா – யாமரம் ஒமை – ஓமை மாம். தந்தை தன் ஊர் (முன்னது) இல்லம்; (பின்னது) ஊர். கோடு – வரை, தார் – மாலை.
விளக்கம் : 'மதவலி' எனச் சிறப்பித்துக் கூறிய செவ்வியினால். எதிர்வந்தவன் ஓர் தலைவன் எனக் கொள்ளலும் பொருத்தம் உடையதாகும். தன் மகளது பிரிவாற்றாமையினாலே வருந்தும் தாய், அவளை எதிரே கண்டு வருவாரது வாய்ச் சொற்களைக் கேட்டு மனவமைதி பெறுவதற்கு முயலுகின்றாள். வயதிற் சிறியராயினும் 'தொழுவேன்' என்றது, அவர் வாய்மொழியாலே பெறும் மனவமைதி பெரிதாதலான். 'அணல்' என்பது மோவாயிடத்தே விளங்கும் மயிர்; தாடியும் ஆம். எய்யா வண்மகிழ் – குறைதலற்ற வளவிய மகிழ்ச்சிப் பெருக்கம்: இது கள்ளூணால் வந்தடைவது 'ஈன்றேன் யானே' என்றது, பிறருக்காயின் அவர்தாம் கண்டாரைப்பற்றி யாதும் கூறார் ஆதலினால், பெற்ற தாயாகத் தன்னைப் படைத்துக் கூறியதும் ஆம்.