199. உள்ளுடைந்து உளேன்!

பாடியவர் : பேரிசாத்தனார்.
திணை : நெய்தல்.
துறை : வன்பொறை எதிரழிந்தது.

[(து–வி) தலைமகனின் பிரிவினாலே வருத்தம் மிகுதியாக, அதனால் நலிவுற்றிருந்தாள் தலைவி. அவனைக் காணப் பொறுக்காத தோழி துயரத்தை ஆற்றியிருக்குமாறு வற்புறுத்திக் கூறித் தலைவியைத் தேற்ற முயல்கின்றாள். அவளுக்குத் தலைவி சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

ஓங்குமணல் உடுத்த நெடுமாப் பெண்ணை
வீங்குமடல் குடம்பைப் பைதல் வெண்குருகு
நள்ளென் யாமத்து உயவுதோறு உருகி
அள்ளல் அன்னவென் உள்ளமொடு உள்ளுடைந்து
உளெனே வாழி தோழி! வளைநீர்க் 5

கடுஞ்சுறா எறிந்த கொடுந்திமிற் பரதவர்
வாங்குவிசைத் தூண்டில் ஊங்குஊங்கு ஆகி
வளிபொரக் கற்றை தாஅய் நளிசுடர்
நீணிற விசும்பின் மீனொடு புரைய
பைபய இமைக்கும் துறைவன் 10
மெய்தோய் முயக்கம் காணா ஊங்கே!

தோழீ, வாழ்வாயாக. சங்கினங்களையுடைய கடல் நீரிடத்தே விரையச் செல்லும் சுறாமீனைப் பிடிப்பதைக் கருதித் தூண்டிலை எறிந்தவரான, வளைவான மீன்பிடி படகுகளை உடையவரான பரதவர்கள், இழுக்கும் விரைவையுடைய தூண்டிற் கயிற்றின் இடையிடையே அமைந்து காற்று மோதுதலினாலே கற்றை சாய்ந்து போகிய நெருங்கிய விளக்கொளியானது நீல நிறத்தையுடைய வானத்திடத்தே தோன்றும் விண்மீன்களைப் போலத் தோற்றியவாய், மெல்லமெல்ல ஒளிவீசா நிற்கும் துறைக்குரியவன் தலைவன். அவனது உடலிடத்தே தழுவியிருக்கும் அணைப்பினைப் பெறாதவிடத்து, உயரமான மணல்மேடுகளாற் சூழப்பெற்ற நெடிய கரிய பெண்ணையினது பருத்த மடலிடத்தே கட்டியுள்ள கூட்டின்கண்ணே வருந்தியபடியே இருக்கின்ற வெளிய நாரையானது, நள்ளென்னும் ஒலியையுடைய இரவின் யாமப்பொழுதிலே நரலுந்தோறும் உள்ளம் உருகினேனாய், அள்ளலாகிய சேறுபோன்ற என் உள்ளத்தோடும் கூடிய மனமும் உடைந்துபோயின நிலையினளாக, யானும் உயிர் வாழ்ந்திருக்கின்றேனே!

கருத்து :'யான் ஆற்றியிருப்பினும் என் உள்ளம் தானே வருந்தித் தளரும்' என்பதாம்.

சொற்பொருள் : ஒங்கு மணல் – உயரமான மணல்மேடு. பெண்ணை – பனை. வீங்கு – பருத்த. குடம்பை – கூடு. பைதல் – துன்பம். உயவுதல் – நரலுதல்; ஒலித்தல், வளைநீர் சங்கினங்களைக் கொண்ட கடல். கடுஞ்சுறா – கடியச் செல்லும் சுறாமீன். திமில் – மீன்பிடி படகு. கற்றை - கிடேச்சுக் கட்டையால் ஆக்கப்பெற்ற மிதவை. நளி சுடர் – நெருங்கிய சுடர் விளக்குகள்

விளக்கம் : பிரிவுத் துயராலே நலிவுற்றிருந்த உள்ளத்தை 'அள்ளலன்ன உள்ளம்' என்றனள்; அதுவும் கெட்டுத் தான் இறத்தலுக்குப் பைதல் வெண்குருகின் நரலுதல் காரணமாகும் என்றது, இரவுப்போதினும் கண்ணுறக்கமில்லாதே வருந்தியிருந்த நிலையைக் காட்டுதற்காம்.

உள்ளுறை : காற்றாலே அலைக்கப்பட்டும் ஒளியவியாது சுடர்விடும் விளக்கையுடைய துறை என்றது, அவ்வாறே பிரிவுத்துயரால் அலைக்கப்பட்டு வருந்தியிருந்தும், அவர் வருவர் என்னும் நம்பிக்கையினாலே தான் உயிரோடு வாழ்ந்திருத்தலை உரைத்ததாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/199&oldid=1731882" இலிருந்து மீள்விக்கப்பட்டது