200. இதுவும் உரைக்க!

பாடியவர் : கூடலூர்ப் பல்கண்ணனார்.
திணை : மருதம்.
துறை : தோழி தலைமகளது குறிப்பறிந்து வாயிலாகப் புக்க பாணன் கேட்பக் குயவனைக் கூவி இங்ஙனம் சொல்லாயோ என்று குயவற்குச் சொல்லியது.

[(து–வி.) பரத்தையை விரும்பித் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவனுக்குச், சில காலத்திற்குப் பின்னர் அந்தப் பரத்தையின் உறவும் வெறுத்துவிட, அதன் தலைவியின் உறவை நாடுகின்றான். தன் செயலால் தலைவி சினமுற்றிருப்பாளென்பதை அறிந்தவன், அவளைத் தனக்கு இசைவிக்குமாறு தன் பாணனைத் தூதாக அனுப்புகின்றான். அவனைக் கண்டதும் தலைவியின் உள்ளம் நெகிழ்கின்றதைக் கண்ட தோழி, அவ் வேளையிலே விழாவினை அறிவிப்பானாக வந்த குயவனிடங் கூறுவாள் போலப். பாணனுக்கு மறுப்புக் கூறுகின்றாள். இங்ஙனம் தோழியின் கூற்றாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

கண்ணி கட்டிய கதிர அன்ன
ஓண்குரல் நொச்சித் தெரியல் சூடி
யாறுகிடந்த தன்ன அகல்நெடுந் தெருவில்
'சாறு'என நுவலும் முதுவாய்க் குயவ!
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ: 5
ஆம்பல் அமன்ற தீம்பெரும் பழனத்துப்
பொய்கை ஊர்க்குப் போவாய் ஆகி
'கைகவர் நரம்பின் பனுவற் பாணன்
செய்த அல்லல் பல்குவ வையெயிற்று
ஐதகல் அலகுல் மகளிர்! இவன் 10
பொய்பொதி கொடுஞ்சொல் ஓம்புமின்' எனவே.

இருபுறமும் அரும்பிட்டுக் கட்டிய ஒரு கதிரைப் போன்ற ஒள்ளிய கொத்தினைக் கொண்ட நொச்சியது மாலையைச் சூடிக்கொண்டு, ஆறு குறுக்கிட்டுக் கிடந்தாற்போன்ற அகன்ற நெடிய தெருவினிடத்தே வந்துள்ளோனே! 'இற்றை நாளால் இவ்வூரிடத்தே திருவிழா நடைபெறா நின்றது' எனக் கூறுகின்ற அறிவு முதிர்ச்சிகொண்ட குயவனே! நீ செல்லும் இடங்களில் இதனையும் அவ்வவ்விடங்களில் உள்ளார்க்குச் சொல்லியோனாகச் செல்வாயாக!

ஆம்பல் நெருங்கித் தழைத்திருக்கும் இனிதான பெரிய வயல்களையும் பொய்கையையும் உடைய ஊரின் கண்ணே செல்வோய் ஆகுக. 'கூர்மையான பற்களையும் மெல்லிதாக அகன்ற அல்குல் தடத்தையும் கொண்டோரான இளமகளிர்களே! கையின் தடவுதலை விரும்புதற்கு உரியவான நரம்புகளைக் கொண்ட யாழினை இசைத்தபடியே வாயாலும் நல்ல பாட்டுக்களைப் பாடுவோனான நம்மூாப்பாணன் செய்த துன்பங்கள் நாளுக்குநாள் பெருகிக்கொண்டே போகின்றன. இத்தன்மையாளனாகிய இவனது பொய்மையாற் பொதியப்பெற்று நுவலப்படுகின்ற கொடிய சொற்களை எல்லாம் மெய்ம்மை எனக் கருதி ஏற்றுக் கொள்ளாதீராய், நுங்களைக் காத்துக் கொள்வீராக' என்று சொல்வாயாக!

கருத்து : 'பாணன் கூற்றுப் பொய்யாதலின், தலைவி அதனை ஏற்றற்கு இசையாள்' என்பதாம்.

சொற்பொருள் : கண்ணிகட்டல் – அரும்புகளை இருபுறமும் நிரலே வைத்து கட்டுதல். தெரியல் – மாலை. சாறு – விழா பழனத்துப் பொய்கை – பழனங்கட்கு இடையே விளங்கும் பொய்கையும் ஆம். பனுவல் – பாட்டு: பன்னப்படுவது பனுவல். வை – கூர்மை. ஐது – மென்மை. கொடுஞ்சொல் – கொடியதாம் விளைவைக் கொண்டு தரும் இன்சொல்.

விளக்கம் : ஊர் விழாவை அறிவிப்போன் குயவன் என்று உரைத்துள்ள செய்தியைக் கவனித்தல் வேண்டும். கொற்றவை கோயில்களுட் பலவற்றிற்கு இந்நாளினும் குயக்குலத்தாரே பூசாரிகளாக விளங்குகின்றனர்; இவ் வழக்கே அக் காலத்தும் இருந்திருக்கலாம்; ஊர்விழா என்பது இக் காலத்தும் காளிகோயில் விழாவாக விளங்குதலும் இதனை விளக்கும். 'பொய்கை ஊர்க்கு' என்றது, பரத்தையின் ஊரைக் குறிப்பிட்டுக் கூறியது என்க. 'பாணன் செய்த அல்லல்'— பரத்தையர் பலரையும் மயக்கித் தலைவனுக்கு இசைவித்துப் பின்னர் அவனாற் கைவிடப்பெற்று அவர்கள் பலரும் துயருற்று நலிந்து கெடுமாறு செய்தது. 'கைகவர் நரம்பின் பனுவற் பாணன்' என்றது, இசையின் இனிமையாலும் பாட்டின் நயத்தாலும் மகளிரை மயக்கிவிடுபவன் என்றற்காம். இதனால், தலைவி தலைவனை ஏற்பதற்கு இசையாள் என மறுத்து உரைத்தனள் ஆகும். ஆனால், தலைவி கற்பு மேம்பாட்டிற் சிறந்தவளாதலினால், அவள் தலைவனை ஏற்றற்கே விழைவதனைப் பாணன் அவளது முகக்குறிப்பால் அறிந்து, தலைவனைத் தலைவியுடன் சேர்ப்பிப்பான் என்பதும் இதன் பயனாகும்.

'பொய்பொதி கொடுஞ்சொல்' என்றது, 'தலைவன் மிக நல்லன்: உம்மையனறிப் பிறரை நாடுதல் நினையான்; உம்மையே நினைத்து உருகுவான்; ஆதலின் அவனை ஏற்பீராயின் உமக்குப் பெரிதும் நன்மையாம்' என்றாற்போலச் சொல்லிப் பெண்களை மயக்கித் தலைவனுக்கு இணங்கச் செய்தல்.

நற்றிணை முதல் இருநூறு
செய்யுட்களும் புலியூர்க்கேசிகன்
தெளிவுரையும் முற்றுப்பெற்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை_1/200&oldid=1731885" இலிருந்து மீள்விக்கப்பட்டது