நல்ல தீர்ப்பு/அங்கம் 4
அங்கம் 4
காட்சி 1
ஓய்வுகொள்ளும் அழகிய தனி அறையில் மணித்
தவிசில் அரசர் வீற்றிருக்கிறார் உணவுண்ட பின். இரு
தோழியர் மயில் விசிறி கொண்டு விசிறுகிறார்கள். அவர்
யாரையோ எதிர்பார்க்கிறார் வழக்கப்படி. வள்ளி
வெற்றிலைச் சுருள் தட்டேந்தி அங்கு வருகிறாள். அரசர்
கண்ணில் வியப்பு.
அரசர் : அரசியார் எங்கே வள்ளி ? உடல் நலம்
குறைவா?
வள்ளி :கணையாழி காணவில்லை. பணிப் பெண்கள்
தேடுகிறார்கள் அரசியார் தேடுகிறார் தங்களிடம்
மன்னிப்பு வேண்டினார்கள்.
அரசர் : எந்தக் கணையாழி ?
வள்ளி : மாணிக்கக் கணையாழி.
அரசர் : எனவே அரசியார் துன்பத்தில்
ஆழ்ந்திருக்கிறார்கள். திருமணத்தில்
நான் இட்ட கணையாழி! அரசியாரை
மெதுவாக என்னிடம் அழைத்து வந்துவிடு.
நான் தேறுதல் கூறுகிறேன். பணிப்பெண்கள்
தேடட்டும் போ.
[அவள் போகிறாள்]
[அரசி வருகிறாள். வள்ளியும் வருகிறாள்]
அரசி : உங்களிடம் வைத்த அன்பு குறைந்து விட
வில்லை. என் விழியை, என் நினைவை,
தங்கள் கணையாழி ஏமாற்றிவிட்டது.
அரசர் : கன்னல்! அதைப்பற்றி நீ வருந்தாதிருந்தால்
போதும். முப்பது ஆண்டுகள் இன்பத்தை நல்கிக்
கழிந்தன. வாழ் நாட்களில், ஐம்பது ஆண்டுகள்
கழிந்தபின் திருமண கணையாழி காணாமற்
போனால், அதனால் குற்றமில்லை. நீ மறந்திரு.
இம்மியளவு துன்பத்தையும் உன் நெஞ்சு
தாங்காது.
அரசி : யார் எடுத்திருப்பார் ? குற்றவாளியை விட்டு
வைத்தால் இன்னும் இதுபோல நடக்குமே!
அரசர் : அரண்மனை ஆட்களையும், பணிப் பெண்களையும்,
காவலர்களையும், உடற்காப்பாளர்களையும்,
மற்றும் இங்கு வருவோர் போவாரையும் கேட்டு
ஆராய்வோம்.
அரசி : கோள் நிலை வல்லுனர் கூற மாட்டாரா?
அரசர் : கோள் நிலை வல்லவர் கூறுவதைக் கொண்டு
குற்றத்தை உறுதி செய்வதை முட்டாள் தனமென்று
அற நூல் கூறுகிறது. உணர்வும் ஒத்துக்கொள்ளாது.
[முல்லை வருகிறாள்]
முல்லை : அப்பா!
அரசர் : ஓடிவா குழந்தாய்.
[அருகில் வருகிறாள்]
முல்லை : அகப்பட்டதா அம்மா?
அரசி : இல்லை முல்லை !
அரசர் : உன்னிடம் வந்து பேசிப் போகும் பெண்களில்
யார்மேலாவது ஐயப்பட இடமுண்டா
குழந்தாய்!
முல்லை : இல்லை அப்பா கிள்ளை, சாலி, தாழை,
பொன்னி, தோரை, உண்மையின் அடையாளங்கள்,
இனி இங்கு வரவேண்டாம் என்று அவர்களைச் சொல்ல
நினைக்கிறீர்களா அப்பா.
அரசர்: வாழி வாழி நான் அப்படிச் சொல்லவே
மாட்டேன்.
[சாலி வருகின்றாள்]
சாலி : இளவரசியார் இருக்கிறாரா?
முல்லை : அப்பா சாலி இங்கு வரலாமா?
அரசர் : ஓ, நன்றாக !
முல்லை : சாலி உள்ளே வா!
[வருகிறாள், முல்லை கை காட்டுகிறாள்.
சாலி உட்கார்ந்தாள் பக்கத்தில்]
சாலி: பேரரசர், பேரரசியார் ஏதோ தனியாகப்
பேசுகையில் நான் வந்தது இடையூறோ என்னவோ,
மன்னிக்க வேண்டுகிறேன்.
அரசி : அப்படி ஒன்றுமில்லை என் மாணிக்கக்
கணையாழி மறைந்து விட்டது அது பற்றிய
ஆராய்ச்சி. அரண்மனை ஆட்கள்
எடுத்திருப்பார்கள். அல்லது பணிப்பெண்கள்.
இல்லை என்றால் அகப்பட்டு விடவும் கூடும்.
சாலி : இல்லையம்மா, கிள்ளை எடுத்தாள் !
முல்லை : கிள்ளையா?
கன்னல் : அப்படியா!
அரசர் : நீ எப்போது பார்த்தாய்?
முல்லை : நீ கண்ணால் பார்த்தாயா?
சாலி : இளவரசியே! நானும் கிள்ளையும் உன்னை
விட்டுப்பிரிந்து போகையில், கிள்ளையின் இடை
யினின்று சிறு பொருள் ஒன்று விழுந்தது. கிள்ளை
நானறியாதபடி அதை எடுத்தாள். தவிந்த விரல்களின்
புறத்தில், சிவந்த ஒளி
அடித்தது. என்ன என்றேன்; ஒன்றுமில்லை
என்று கூறி சாப்பிட்டபின் அரண்மனைக்குப்
போகலாமா என்று, வேறு பேச்சைத் துவக்கினாள்.
அதை அவள் இடையில் செருகினாள். அது,
துணியில் முடிந்த தங்கக்காசு அளவு காட்சி
அளித்தது.
அரசர் : குழந்தாய்! நீ வருந்தலாகாது. நான்
கிள்ளையை அறமன்றுக்கு அழைக்க வேண்டும்.
அவள் என் படைத்தலைவர் மகள், உனது
அன்புள்ள தோழி ஆயினும் அறத்தின் முன்
அனைவரும் நிகர்.
முல்லை : அவள் நல்லவள் அப்பா.
அரசர் : அறமன்றம் அவளை நல்லவள்
என்று உறுதி செய்யட்டுமே!
சாலி : அரசே, அவள் தீயவள். அவள் தீயவளானால்,
அறமன்றம் தீர்ப்புக் கூறட்டும்.
அரசர் : மன்றம் நோக்கிச் செல்லுவேன். இதில்,
சேர்க்கையுடையவர் அனைவரையும் மன்று
நோக்கி வரும்படி அழைப்பு அனுப்புகிறேன்.
சாலி : வணக்கம்.
[போகிறாள்]
கன்னல் : கிள்ளை நல்லவள் என்று நான்
எண்ணினேன்.
முல்லை : இப்போதும் அவள் நல்லவள் தான்
அம்மா
[அரசர் போகிறார். முல்லை தலை
குனிந்தபடி வருத்தத்தோடு தன்
அறை நோக்கிச் செல்லுகிறாள்]