நல்ல தீர்ப்பு/நல்ல தீர்ப்பு-அங்கம் 1



நல்ல தீர்ப்பு


பிறை நாட்டின் தென்புறத்தில் அமைந்த குளிர் மலர்ச் சோலையில், கோடையின் கொடுமை நீங்கி இருக்க, அந்நாட்டரசனாகிய வயவரி மன்னனும், அரசி கன்னலும், இளவரசி முல்லையும் வந்திருந்தனர். பிறை நாட்டின் படைத் தலைவன் மாழையும், மனைவி கண்ணியும், மகள் கிள்ளையும் வந்திருந்தனர். நாட்டின் அமைச்சு வல்லுளியும், மனைவி வேலியும், மகள் சாலியும் வந்திருந்தனர். மற்றும் கல்விச் செல்வரும் பொருட் செல்வரும் உறவோடு வந்திருந்தனர்.

மற்றும் பிறை நாட்டின் மேற்கில் உள்ளதும் பிறை நாட்டின் சிற்றரசாய் அமைந்ததும் ஆகிய பீலி நாட்டின் மன்னன் கடம்பனும், அரசி ஆம்பலும், இளவரசி நிலவும் வந்திருந்தனர். குளிர் மலர்ச் சோலையில், அவர்கள் இனிதாக நாள் கழித்தார்கள், ஒவ்வொரு நாளும் விழா நாள்.

இன்று மகளிர் தனி நாள்

சிற்றரசன் மகள் நிலவு அரங்கேறுகின்றாள். மற்றப் பெண்டிர்கள் காட்சி காணும் அவாவோடு சூழ வீற்றிருக்கின்றனர்.

இசைக் கருவிகள் வாய் திறக்கின்றன. ஆடலாசிரியன் பாடுகின்றான்.

நிலவு ஆடுகின்றாள்

களை யெடுத்தார் பல பெண்கள்!- கீழ்க்
கவிந்தனவே அவர் கண்கள்!
வளை குலுங்கும் கைகள் ! வளைந்திடும் மெய்கள்
விளைவைக் கொடுக்கும் அல்லி, குவளை, செந்தாமரைக்

                                               களை யெடுத்தார் பல பெண்கள்


மண்டும் களைகள் தமை
நண்டு நிகர் விரல்கள்
கொண்டு களைவதொரு காட்சி!
கெண்டை உலவுகையில்
பெண்டிர் விழிகள் தமைக்
கண்டு நாணும், என்ன
தொண்டை இனிய கற்
கண்டோ மலரில் வரும்
வண்டோ? என இசைக்கும்
தண்டமிழ் இசை பாடிக்
                                 களை யெடுத்தார் பல பெண்கள்

கூந்தல் அவிழ்ந்து விடும்
வாய்ந்த அருவிபோல்!
ஏந்தி முடிக்கும் அவர் அங்கை!
சோர்ந்தே விழுந்து விடும்
மேலுடை, நூலிடையில்
தூக்கிச் செருகும் அவர் செங்கை!
ஆர்ந்த மயிலினங்கள்
ஆடுகையில் தாள் பெயர்ந்து!
தீர்ந்த இடத்தை விட்டுத்
தீராத நன்செய் இடைக்
                              களை யெடுத்தார் பல பெண்கள்!

அரசி கன்னல்: ஆ! நான் எங்கே இருக்கின்றேன்? மகிழ்ச்சியன்றி
                             மற்றொன்றும் இல்லாத இன்பஉலகிலா!

முல்லை: என் நினைவு என்னிடம் இல்லையம்மா!
                  இளவரசி நிலவு ஒருத்தி அவள் ஆடத் துவக்கியவுடன்
                 அவளிடம் களை எடுக்கும் பெண்கள்

                 பலரைக் கண்டேன் அம்மா!

படைத் தலைவன் மகள் கிள்ளை, தங்கச் சிலை போல் இன்னும் செயலற்றுக் கிடக்கின்றாள். அமைச்சன் மகள் சாலி, நெஞ்சில் இன்பம் தாங்காமல் அழுகின்றாள். அவள் கண்கள் மகிழ்ச்சியை நீராக்கி வடிக்கின்றன.

பேரரசி கன்னல் அரங்கின் மேல் ஏறுகிறாள். நிலவின் கலைத்திறம் பற்றிப் பாராட்டிப் பேசலுற்றாள்.

நிலவே, உன் கலைவாழ்வு பல்லாண்டு நிலவுக!
நிலவே, உன் வாழ்நாள் காவிரிபோல் பெருகுக!

துன்ப உலகினின்றும் இன்ப உலகிற்கு எமை அழைத்துச் சென்றாய். தாழ்ந்த செயல்களை, தாழ்ந்த நினைவுகளை இமைப்போதும் நீங்காத எம்மை அமைதியில் குளிக்க வைத்தது உன் ஆடல்!

நிலவே! இத்தனை பெரிது; இத்தனை சிறந்தது; இத்தனை இன்பம் பயப்பது; ஆட்டக்கலை என்பதை இன்று அறிந்தோம்.

ஆடல், பாடல், அழகு எனும் மூன்றும் ஒன்றும் குறையாத முழுநிலவே, நான் இன்று உனக்குத் தரும் பரிசு ஒன்று.

உன் தந்தை எம் அரசர்க்கு நடக்கவும் தெரியாத இளயானைக் கன்று ஒன்றைத் தந்தார். அந்த ஆண் யானைக் கன்றானது எம்மிடம் முப்பது ஆண்டுகள் வாழ்ந்து பின், இறந்தது. அதன் தந்தமானது முத்துப்போல் ஒளியுள்ளதாகவும், வயிரம் போல உறுதியுள்ளதாகவும் இருந்ததால் அதைப் பொற் கொல்லரிடம் தந்தோம். அவன் அந்தத் தந்தத்தில், அறுத்து, வயிரம் பதித்துத் தந்தது இந்தப் பதக்கம். அதை உனக்குத் தந்தேன்.

[பேரரசி, நிலவுக்குப் பதக்கமார்பணி சூட்டுகிறாள். அனைவரும் கை தட்டுகிறார்கள்]


நிலவு கூறுகிறாள் :
           பேரரசியாருக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.
"நான் பிறந்த அன்று, இந்த யானைக் கன்று பிறந்தது.
ஆறு தினங்கள் சென்றபின் என் தந்தை அதைப்
பேரரசர்க்கு அளித்தார்" என்று என் தாயார் சொன்னார்கள்.
அதன் தந்தத்தால் எனக்கு இந்த வயிரப் பதக்கத்தைத்
தந்ததால் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும் கருதுங்கள்!
                                                                               [அனைவர்க்கும் வியப்பு]

படைத்தலைவன் மகள் கிள்ளை கேட்டாள்:
                   அப்படியானால், அம்மையாரே தங்கள் வயது என்ன?

உடனே அமைச்சன் மகள் சாலி கேட்டாள்:
                  யானைக் கன்று வளர்ந்து, இறந்து, பல்லாண்டுகள்
                  போயின. தந்தத்தால் அணிசெய்து பல்லாண்டுகள்
                 கழிந்தன!

கூடவே பேரரசியார் கூறினாள்:
                   ஏறக்குறைய உனக்கு ஐம்பது ஆண்டுகள்
                  ஆயினவா? என்ன புதுமை

நிலவு கூறினாள்:
                    எனக்கு ஐம்பது ஆண்டுகள் ஆயின. என்
                    தந்தை எழுபது வயதுடையவர். அன்னைக்கு
                    அறுபத்தெட்டு.

பேரரசி: உலகைத் தன் வலிய கையோடு கொண்டு
                 போகும் ஆயுள் நாள், நிலவே உன்னை மறந்து,
                 விட்டுப் போனதா? கரையற்ற கால வெள்ளத்துக்குத்
                 தப்பி நிலவே நீ எந்தக் கரையில் நின்றிருந்தாய்?
                 உதிர்கின்ற நாளின் சருகு போன்ற இளமை,
                 உனக்கு மட்டும் ஆலின் விழுது போல் ஊன்றி
                 நின்றதென்ன? உடல் நூல் வல்ல

                 மருத்துவனும், உயிர்ப்பினைக் கட்டுப் படுத்தும்
                 அறிஞனும் நாளோடு தவறாது காணும் முதுமையை
                 நீ சந்தித்ததில்லை எனில் புதுமை அன்றோ !

நிலவு கூறினாள்.
                ஆடல் பயில்வாரின் உடல் வாடல் இல்லை.
                புதுமை மாறாத ஆடற்கலைஞருக்கு
                முதுமை நேருமோ பேரரசியாரே?
                                                              [அனைவர் கண்ணிலும் வியப்பு]

பேரரசியார் பேசுகின்றார்.
               நிலவே! நீடுவாழ்க. புதியதோர் எண்ணம்!
               நினைக்கும் தோறும் வியப்பைச் செய்யும்
               ஓர் ஒப்பற்ற நிலை நீ தந்தாய் நீ வாழ்க!
               ஆடல் அரங்கு முடிவு பெற்றது. அனைவரும்
               உணவு கொள்ளச் செல்வோமாக.

                                        [அனைவரும் செல்கிறார்கள். படைத் தலைவன்
                                         மகளாகிய கிள்ளை மட்டும் பறக்கவில்லை]

காட்சி 2



                         [அரங்கில் ஒரு புறம். நிலவு காற்சதங்கையை
                         அவிழ்க்கக் குனிகிறாள். அதற்குள் வேறோர்
                         மலர் போன்ற கை சதங்கையை அவிழ்த்து
                         உதவி செய்கிறது.]

நிலவு : என் செல்வமே! நீ யார்?

கிள்ளை : அன்னையே! படைத்தலைவர் மகள்; கிள்ளை

நிலவு : உன் பிரிவு உன் அன்னை தந்தையர்க்குத் துன்பத்தைச் செய்யுமே!

கிள்ளை : ஆடல் பயிலவிரும்புகிறேன். அந்த விருப்பம்
                    என் உடலின் ஒவ்வோர் அணுவிலும்

                    கிளர்ச்சி செய்கிறது. என் அவா பருவக்காற்றுப்
                    போல் எழுந்து பின் மாறுவதன்று; யானை கட்ட
                    ஒன்றிய தறிபோல் உறுதி கொண்டது. பசி
                    கொண்டு கேட்பவனுக்கு ஓர் அகப்பைக் கஞ்சி
                    மறுப்பாரோ. என் வேண்டுகோளைத் தாங்கள்
                    மறுப்பீரோ! ஆடல்; தங்களிடம் உள்ள கடல்
                    போன்ற ஆடற்கலை. கொஞ்சம் இறங்குவீர்களா?

நிலவு : தசை சரியாத கொடி போன்ற மேனி,
                உடுக்கை போன்ற இடை, காதளவு நீண்ட
                கண்ணில் உயிர்! இதழின் கடையில் இயற்கையில்
                சிந்தும் சிறு நகை. அத்தனையும் உனக்கு அமைப்படி
                கிள்ளையே! ஆடல் உனக்கு வரும். ஆடலுக்கு நீ வந்தவள்.
                பீலி நாட்டில் தடாரி வட்டம் என்னும் வட்டத்தில் நான்
                வாழ்கின்றேன். அங்கு நீ வருதல் வேண்டும். ஏற்பாடு
                செய். நான் செல்லுமுன் கூறு.

கிள்ளை: என்னை தந்தையரிடம், கெஞ்சி, அவர்கள்
                  தரும் விடையை அறிவிக்கின்றேன் அம்மணி

நிலவு: போய் வா

                                                 [கிள்ளை பணிந்து, பறந்தாள்]

        நிலவு குளிர் மலர்ச் சோலையில் தனக்காக
        அமைந்த விடுதி நோக்கிப் போகிறாள். சாலி
        என்னும் அமைச்சன் மகள் எதிர் நோக்கி வந்து
        பணிகிறாள்.

நிலவு: நீ யார்?

சாலி: நான் சாலி,

நிலவு: தந்தை?

சாலி: இந்நாட்டின் அமைச்சர் வல்லுளியார்

நிலவு: என்ன செய்தி?


சாலி :எனக்கு நீங்கள் ஆடல் பயிற்சி
             அளிக்க வேண்டும்.

நிலவு : நான் பீலி நாட்டில் தடாரி வட்டம் என்னும்
             இடத்தில் வாழ்கின்றேன். அங்கு நீ வர
             ஏற்பாடு செய்து கொள்.

சாலி :நன்று! போய் வருகின்றேன்.

காட்சி 3



                  [பெருமன்னன் மகள் முல்லையும், சாலியும்
                  கிள்ளையும் குவளைப் பூக் குலுங்கும் நிழலில்
                  அமைந்த திண்ணையில் அமர்ந்து பேசிக்
                  கொண்டிருந்தார்கள்]
                 
கிள்ளை :ஆற்றூர் காரி மன்னனுக்கும், நம் நாட்டுப்
                   பேரரசர்க்கும் மனத்தாங்கல் இருந்தால்,
                   பீலி நாட்டில் நான் ஏன் ஆடல் கற்றுக்
                   கொள்ளக் கூடாது?

சாலி : நீ அதை அவர்களையே கேட்பது தானே.

கிள்ளை : கேட்டேனே சாலி.

சாலி : என்ன சொன்னார்கள்?

கிள்ளை :அவர்களா ? நீளமாகச் சொன்னார்கள்,
                   என்ன சொன்னார்கள் தெரியுமா?
                   "அதற்கு மேல் கேட்காதே—அரசியல் செய்தி"

முல்லை : கிள்ளை! அதோடு நிறுத்திவிடு இவ்வளவு
                    கூட நீ வெளிப்படையாய்ப் பேசியிருக்கக்
                    கூடாது.

கிள்ளை : ஏன் சாலி நீ கேட்டாயா உன் பெற்றோரை?

சாலி : கேட்டேன்.

கிள்ளை: கேட்டாயா? என்ன சொன்னார்கள்?

சாலி : உனக்கு சொல்லியது போலில்லை.

கிள்ளை : அப்படியா. என்ன?

சாலி : "போகக்கூடாது"

கிள்ளை : ஏன் என்று கேட்டாயா?

சாலி : விட்டுவிடுவேனா?

கிள்ளை : உம்

சாலி : ஏன் என்றேன். அதற்கு அவர்,... கேட்காதே!

                                                                        [அனைவரும் சிரிப்பு]
முல்லை : உங்கள் ஆவல் நிறைவேறாததற்கு நான்
                    வருந்துகிறேன்.

கிள்ளை : இளவரசியே, என்கண்ணே, என்னை என்
                  பெற்றோர் "போ" என்று சொன்னாலும் நான் உடனே
                  போயிருக்க மாட்டேன். ஏன் தெரியுமா?

முல்லை : இதென்ன புதுமை?

சாலி : ஏன்?

கிள்ளை :கொஞ்ச நாளைக்கு மிக்க வேலையிருக்கிறது.

முல்லை : உனக்கா?

சாலி: என்ன கூடை முறம் கட்ட வேண்டுமா?

கிள்ளை: நன்றாகக் கேட்டாய். நீ சொன்னது பாதி சரி

முல்லை: கூடை முறம் ஒரு பாதி கட்டவேண்டும்;
                 மறுபாதி? இவைகளில் எது சரி?

கிள்ளை : "கட்டவேண்டும்"

சாலி : என்ன கட்டவேண்டும்?

முல்லை : விரைவில் சொல்லிவிடு?

கிள்ளை : மாலை கட்டவேண்டும். இளவரசிக்கு


முல்லை : விளங்கவில்லை.

சாலி : இளவரசிக்குத் திருமணமா?

கிள்ளை : உனக்கும் நினைவு இல்லை. முல்லை பிறந்த
                    நாள் அடுத்த வெள்ளிக்கு.

முல்லை : ஆ!

சாலி : உனக்கு மட்டும் எப்படி நினைவு வந்தது?

கிள்ளை : முல்லை எப்போதும் என் நினைவில்
                  நிலையாக இருக்கிறாள்.

முல்லை : கிள்ளை நீ என் மீது வைத்துள்ள அன்பு
                   பயனற்றது.

கிள்ளை : அது உனக்குத் தெரியாதோ, அன்பு
                   பயனை எதிர்பார்த்ததல்ல. பயனை
                   எதிர்பார்த்தது எது தெரியுமா? வாணிகம்.

முல்லை : வாயாடி! போவோம்.

சாலி : கிள்ளையோடு பேசுவதில் தெவிட்டு
             ஏற்படுவதில்லை.
                                    [அனைவரும் எழுந்திருக்கிறார்கள்]