நல்ல தீர்ப்பு/அங்கம் 2

அங்கம் 2


காட்சி 1



                           [பிறை நாட்டின் அரண்மனையில் ஒரு பகுதி
                           இளவரசி முல்லை மணித் தவிசில்
                           வீற்றிருக்கிறாள். தோழிமார் பலர் புடை
                           சூழ்ந்திருக்கிறார்கள். முல்லையின் தந்தையும்,
                           பேரரசனுமாகிய வயவரி மன்னனும் பேரரசி
                           கன்னலும் வருகிறார்கள். மங்கல முரசு
                           அதிர்கின்றது]

பேரரசர் : வாழிய குழந்தாய். தமிழ் நன்று. அது
                   தமிழர்க்கு உறுதி பயப்பது. அதை இன்னும் நீ
                   பயில்க! தமிழறிவு பெறுக. பிறை நாட்டின் எதிர்
                   கால அரசி நீ. அறம் இது, மறம் இது என்று
                  ஆய்ந்துணர்க. வாழிய நீடு வாழிய!

பேரரசி : அன்புக்கொரு மகளே, முல்லையே மணம்
                   எய்துக உனது பதின்மூன்றாம் ஆண்டு தொடங்கிற்று.
                   நீ வாழிய!

முல்லை : உங்கள் வாழ்த்து நன்று. என்பால் தங்கட்குள்ள
                   அன்புக்கு நன்றி! தந்தையார் வாழ்க,
                   அன்னையார் வாழ்க, தமிழ் வாழ்க.
                                                                          [முல்லை பணிகின்றாள்]

                                   [பேரரசும் பேரரசியாரும் போகின்றார்கள்]
நிலவு, சாலி, தாழை, பொன்னி, தோரை முதலிய
பெண்கள், தத்தம் இயல்புக்கேற்ற கையுறையுடன்
வருகிறார்கள்.

தோரை--தான் கொணர்ந்த தங்கப்பானை யடுக்கிய
வெள்ளியுறியை முல்லைக்குத் தந்து--வாழிய
இளவரசியே என்று வாழ்த்துகிறாள்.


பொன்னி--தான் கொணர்ந்த, ஒன்பது வகை மணிகள்
அழுத்திய தலையணியாகிய சுட்டியை முல்லைக்குத்
தந்து - வாழிய இளவரசியே! என்று வாழ்த்தி ஒருபுறம்
அமைகிறாள்.

தாழை--தான் கொணர்ந்த முத்துப் பரல் இட்ட காற்
சிலம்பை முல்லைக்குத் தந்து, வாழிய இளவரசியே
என்று வாழ்த்தி மற்றொருபுறம் அமைகிறாள்.

சாலி--தான் கொணர்ந்த எண் சோவையுள்ள
இடையணியாகிய காஞ்சியை முல்லைக்குத் தந்து
வாழிய இளவரசியே என்று வாழ்த்தி ஒருபுறம்
அமைகிறாள்.

கிள்ளை--தான் கொணர்ந்த, முல்லையில் தொடுத்த
தானமுல்லைத் தொடயலை முல்லைக்குச் சூடி,
வாழிய இளவரசியே என்று வாழ்த்த, இளவரசியாகிய
முல்லை, அவளைக் கட்டித்தழுவித் தன் அண்டையில்
நிறுத்தித் தானும் எழுந்து நின்று கூறுகிறாள்.

அன்புள்ள தோழியர்களே,

என் பிறந்தநாட் சிறப்பை சிறக்க வைத்தீர்கள்..
உங்கள் வாழ்த்து என்னைப் பெருவாழ்வில்
சேர்க்கத் தக்கது. நன்றி கூறுகிறேன்.

                                     [மீண்டும் மங்கல முரசு முழங்குகிறது
                                     நிலவு வருமுன் மற்றவர்கள் போய்
                                     விடுகிறார்கள்]

காட்சி 2



          சாலி, தாழை, பொன்னி, தோரை நால்வரும்
முல்லைக்கு வாழ்த்துக்கூறி வருகையில் தமக்குள்
பேசிக் கொள்ளுகின்றார்கள்:


தோரை : போரசு, பேரரசி இருவருக்கும் அன்புக்கு
                   ஒருத்தி முல்லை இளவரசி; நாளைய பட்டத்தரசி
                   அவள் இனிது வாழ்க!

பொன்னி : பிறை நாட்டின் தனியரசி முல்லை. அவளின்
                   அடக்கம் அன்பு நன்றியறிதல் ஆகிய நற் பண்புகள்
                   அவளுக்குள்ள மேன்மையை ஆயிரம் பங்கு
                   அதிகப்படுத்துகின்றன.

சாலி : ஏன் தாழை நீ என்ன சொல்லுகின்றாய்?

தாழை : நம்மிடத்தில் அவள் அன்புடையவள். அவள்
               ஆட்சிக் காலத்தில் நாட்டு மக்கள் மேல் அவள்
               அன்புடையவளா யிருத்தல் வேண்டும்.
               இருப்பாள். நல்லவள்.

சாலி : கிள்ளை நம்முடன் வரவில்லை. முல்லைக்குக்
             கிள்ளை மேல் மிக்க அன்பு. உயர்ந்த அணிகள்,
             பொருள்கள் நாம் தந்தோம். கிள்ளை காசு பெறாத
             அலங்கல் கழுத்தில் இட்டாள் அதற்காக முல்லை
              இளவரசி கிள்ளையைத் தழுவிக் கொண்டாள்
              கண்டீர்களே! கிள்ளை எப்படி எவரிடம் வளைந்து
              கொடுக்க வேண்டும் என்பதை நன்றாய் அறிந்தவள்.
              முல்லையும் பசப்புக்கு மகிழ்பவள் கிள்ளையின்
              வஞ்சகம் முல்லைக்குத் தெரியாது. தெரிந்து
              கொள்வாள்.

தோரை : மெய்தான்! நம்மிடம் ஒருமாதிரி; அவளிடம்
               வேறு மாதிரிதான் நடந்து கொண்டாள் முல்லை!

பொன்னி : கிள்ளை கொண்டுவந்தது எளிய பொருள்.
                  அதற்காக முல்லை வருந்தவில்லை என்பதைக்
                  காட்ட அவளிடம் கொஞ்சம் அதிக அன்பைக்
                  காட்டினாள் வெளிக்கு. அது தவிர முல்லைக்கு
                  நம்மேல் உள்ள அன்பு குறைவு என்று நாம்
                  எண்ணலாமா?

சாலி : சரி உனக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.
            போகலாம் விரைவாய்!
                                                                                         [மறைதல்]

"https://ta.wikisource.org/w/index.php?title=நல்ல_தீர்ப்பு/அங்கம்_2&oldid=1645176" இலிருந்து மீள்விக்கப்பட்டது