நல்ல தோழிதான்/அனுபவம் புதுமை!



அனுபவம் புதுமை!



சிவகுரு-அவரது முழுப்பெயர் சிவகுருநாதன். துணிந்து கிளம்பி விட்டார். எத்தனை நாள்தான் வெறும் நினைப்பிலேயே ஊஞ்சல் ஆடிக்கொண்டிருப்பது? மனம் கட்டுகிற கனவுகளையும், வளர்க்கிற ஆசைகளையும் ஒவ்வொன்றாக செயல்படுத்திப் பார்த்துவிட வேண்டியதுதான் என்று அவர் தீர்மானித்தார்.

மற்றவர்கள் கேள்விப்பட்டால், விசித்திரமான நினைப்புகள் என்றுதான் சொல்வார்கள். பைத்தியக்காரத்தனமான ஆசைகள் என்று பலர் பரிகசிக்கவும் கூடும். வம்பை விலைக்கு வாங்குகிற மாதிரிதான் இதெல்லாம் என்று சிலர் எச்சரிக்கவும் செய்யலாம்.

சிவகுரு மற்றவர்கள் ஆபிப்பிராயம் பற்றி கவலைப் படுகிறவர் இல்லை. "சொல்லுகிறவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும்; அப்படிப் பேசுவது அவர்களுக்கு சந்தோஷம் அளிக்கிறது. நான் என் இஷ்டம்போல் நினைப்புகள் வளர்ப்பதும், அவற்றில் சிலவற்றையாவது செயலாக்க ஆசைப்படு: வதும் எனக்கு சந்தோஷம் தருகிறது” என்று அவர். மனம் பேசிக்கொள்ளும்.

அவ்வாறு அவர் என்னதான் விந்தை நினைப்புகளையும், விசித்திரக் கனவுகளையும் வளர்த்து வந்தார் என்று கேட்டாலோ...

சிவகுரு ரயிலில் பயணம் போகிறார். சன்னல் வழியாக வெளிப்புறக் காட்சிகளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார். திடீரென்று ஆ! ஆகா! என வியந்து கொள்கிறார். நல்ல வெயில் நேரம். துரத்தில் ‘குளு குளு’ என்று வேப்ப மரங்கள் நிழல் பரப்பி நிற்கின்றன. ஒரு இடத்தில் ஒற்றை ஒரு மரம். அதன் நிடில் குளுமையாகப் பரவிக்கிடக்கிறது. அது அவரை ஈர்க்கிறது. இப்படியே இந்த இடத்தில் இறங்கி விடனும்; அங்கே போய் அந்த மரத்தடி நிழலில், துண்டை விரித்து, ஹாயாகப் படுத்துக்கிடக்கனும், நேரம் பற்றிய நினைப்பே இல்லாமல், போக வேண்டிய இடம்-பார்க்க வேண்டிய ஆட்கள்-செய்ய வேண்டிய வேலை என்கிற எந்த கவலையுமே இல்லாமல், சுற்றுப் புற அழகில் சொக்கிப்போய் சுகமாக கிடக்கணும். இது அவரது மனதின் நினைப்புகளில் ஒன்று.

நீண்டதுரம் பயணம் போய்க் கொண்டிருக்கிற ரயில் வண்டி அநேக பெரிய ஸ்டேசன்களையும், பல சின்னச் சின்ன ஸ்டேசன்களையும் கடந்து போகிறபோது, இடைவழியில் ஏதோ ஒரு ஸ்டேசனில் இறங்கி, நடந்து போய் புதிய இடத்தில் எதிர்ப்படக் கூடிய அனுபவங்களை சந்திக்க வேண்டும்.

பயணங்களின் போது, ஆங்காங்கே பெரிய பெரிய ஆறுகள் வரும் ஏதாவது ஒரு ஆற்றின் கரையில் இறங்கிவிட வேண்டும். அந்தக் கரை மீதாகவே நடந்து போய், புதுப்புது இடங்களைக் காணவேண்டும். மனசுக்குப் பிடித்த ஊர் எதுவேனும் தென்பட்டால், சிறிதுகாலம் அந்த ஊரிலேயே தங்கிவிட வேண்டும். அந்த ஊரும் அங்கே தங்கியிருப்பதும் அலுத்துப் போனால், மீண்டும் ஆற்றின் கரை வழியே நடந்து போகவேண்டும்...

அவர் செல்லமாய், சீராட்டி வளர்த்த நினைப்பு ஒன்றும் உண்டு.

சிவகுரு பெரிய பஸ் நிலையத்தில் நிற்கிறார். பஸ்கள் வருகின்றன, போகின்றன. ஏகப்பட்ட பஸ்கள். எங்கெங்கோ போகிற பஸ்கள்.

அவை போகிற வழியில் உள்ள ஊர்களின் பெயர்கள் பஸ்சின் ஒரு பக்கத்தில் காணப்படும். முடிவாக போய் சேர்கின்ற ஊரின் பெயர் தலைப்புப் பலகையில் பெரிதாய் பளிச்சிடும்.

அவர் அவற்றையெல்லாம் படித்துப் பார்ப்பார். அவ்விதம் படித்து ரசித்த சமயம் ஒன்றில்தான் சிவகுருவுக்கு அந்த நினைப்பு எழுந்தது. இந்த பஸ்களில் ஏதாவது ஒன்றில் ஏறவேண்டியது.

அது போய் சேருகிற முடிவான இடத்துக்கு டிக்கட் வாங்கவேண்டியது. பயணம் போக வேண்டியதுதான், அங்கே போய் இறங்கி, ஊரைசுற்றிப் பார்க்கவேண்டும். அடுத்த பஸ்சிலோ, அதற்கு அடுத்ததிலோ ஏறி திரும்ப வரவேண்டியது இப்படி ஒவ்வொரு நாள் வெவ்வேறு பஸ்சில் ஏறி, வெவ்வேறு இடங்களுக்கு போய் பார்த்தால் எப்படி இருக்கும்?

புதிய புதிய இடங்கள், விதவிதமான ஊர்கள், கட்டிடங்கள், ஆட்கள் பார்க்கிற அனுபவம் புதுமையாக இருக்குமே!

இந்த நினைப்பு அவருள் ஊசலிட்டது. அவர் பெரிய பஸ் நிலையத்தில் வந்து நிற்கிற போதெல்லாம். புறப்பட்டுச் செல்கிற எந்த பஸ்சைப் பார்த்தாலும், ‘இதில் ஏறிப் போகலாமா இதில் போய் பார்க்கலாமா?’ என்று அவர் மனம் குறு குறுக்கும்.

அடுத்த தடவை போய்விட வேண்டியதுதான்... அடுத்த வாரம் இங்கே வருகிறபோது, ஏதாவது ஒரு பஸ்சில் ஏறிவிட வேண்டியதுதான் என்று எண்ணுவார். ஆனாலும், இதுவரை அவர் துணிந்ததில்லை.

அவர் அப்படிச் சுற்றவிட்டு, என்றைக்கு வீடு வந்து சேர்ந்தாலும், ‘எங்கே போனே? ஏன் போனே? எதுக்காக இத்தனை நாள் தங்கினே?’ என்று அவரை தட்டிக் கேட்கக் கூடியவர்கள் யாருமே கிடையாது. அவரே ராஜா, அவரே மந்திரி, அவரே எல்லாம். பணப் பிரச்னையும் இல்லை சுகவாசி ஆவர்.

இருப்பினும் அவர் மனம் துணிந்து, எண்ணங்கள் கனவுகள்- ஆசைகள் வளர்ந்த அளவுக்கு அவரிடம் செயல் துணிச்சல் இருந்ததில்லை.

எப்படியோ எண்ணத்தில் உரு ஏற்றி இன்று செயலாற்ற சிவகுரு துணிந்து விட்டார்.

பெரிய பஸ் நிலையம் அடைந்தார். சுற்றிச் சுற்றி வந்து பற்பல ரூட்பஸ்’களையும் பார்த்தார். அவை போகக் கூடிய ஊர்களின் பெயர்களையும் கவனித்தார்.

ஒரு பஸ் அவருக்கு வெகுவாக பிடித்திருந்தது. அதன் புது மினுமினுப்பு தேய்ந்து மங்கி அழிந்துபோகவில்லை. பஸ்சின் தோற்றம் எடுப்பாக இருந்தது. அது முடிவாக சேர்கிற இடமும் அவரை வசீகரித்தது. கடலோரச் சிற்றூர் அது என்று அவர் கேள்விப்பட்டிருந்தார்.

ஆகவே, அந்த பஸ்சில் சிவகுரு ஏறி உட்கார்ந்தார். சாப்பாட்டு விஷயம் என்றுமே அவருக்கு ஒரு பெரிய பிரச்னையாகத் தோன்றியதில்லை. வெறும் டீ, வேர்க் கடலை, பிஸ்கட் தினுசுகள் என்று தின்று நாள் கணக்கில் அவரால் கவலையின்றி இருக்க முடியும். அங்கங்கே இருக்கக்கூடிய சாதாரண ஓட்டல், அல்லது ‘கிளப்புக் கடை’ எதிலும் கிடைக்கக்கூடிய தின் பண்டம் அல்லது சிற்றுண்டி எதையும் கொண்டு அவரால் சமாளிக்க முடியும்.

பஸ் புறப்பட்டது. இந்த ‘வழித்தடம்’ பஸ்சில் பயணிகள் கூட்டமும் இல்லை. மிக வசதியாக இருந்தது. பஸ் பல மணிநேரம் ஓடிய பிறகே முடிவான ஊரைச் சென்றடையும் என்றும் அவர் தெரிந்து கொண்டார். அது அவருக்கு மனநிறைவு தந்தது.

பயணத்தை சிவகுரு ரசித்தார். பஸ் நின்ற ஊர்களின் பெயர்களை ஆர்வமாக கவனித்தார். ஏறி இறங்குகிற பயணிகளையும் பார்த்தார். பல மணி நேரத்திற்குப் பிறகு பஸ் கடலோர ஊரை சென்றடைந்தது. பஸ்சில் வந்த பலரும் கீழே இறங்கினர். சிவகுருவும் இறங்கினார். பஸ் திரும்பி நின்றது. காத்து நின்ற சில பேர் அவசரம் அவசரமாக அதில் ஏறினார்கள். பஸ் உடனே புறப்பட்டு விட்டது.

சிவகுரு சுற்றுமுற்றும் பார்த்தார். சாதாரண ஊர் தான். பஸ் நின்று கிளம்பும் இடத்தில் டிக்கடையோ, பீடி- சிகரெட் வகையரா விற்கிற பெட்டிக்கடையோ எதுவும் இல்லை.

தெரு எனத் தோன்றியதில் அவர் நடந்தார். பலதரப்பட்ட வீடுகளின் வரிசை. ஒரு இடத்தில் ஒரு கோயில், பெரிதாகத்தான் இருந்தது.

அவர் சுற்றித் திரிவதற்கு தெருக்கள் பல இல்லை அந்தச் சிற்றூரில், இருந்த சில தெருக்களிலும் கண்டு களிப்பதற்கு விசேஷமாக எதுவும் இல்லை. அவர் கோயிலுக்கு போனார்.

கோயில் பெரிதாக இருந்ததே தவிர, குறிப்பிடத்தக்க சிற்பங்களோ, கலை வேலைப்பாடுகளோ அங்கு இல்லை. சிவகுரு சிறிது நேரம் அங்கே நின்றார். பிறகு, கடலின் பக்கம் போனார்.

கடல் அழகாக, மிடுக்காக தோன்றியது. நெடுகிலும் கட்டு மரக் கட்டைகள், பரப்பி வைக்கப்பட்ட வலைகள், வலைகளை செப்பனிடும் ஆட்கள்.

இங்கு மீனவர்கள் அதிகம் என்று தெரிகிறது என எண்ணியபடி அவர் நடந்தார். நீளத்துக்கு வரிசையாய் சிறுசிறு குடிசைகள். அவற்றில் ஆட்கள் இருப்பதாகத்தான் தோன்றியது.

அங்கே நின்ற ஒருவனை நெருங்கி, “இங்கே டீ, காபி ஏதாவது கிடைக்குமா? கிளப்புக் கடை எதுவும் இல்லையா?” என்று கேட்டார்.

“தண்ணிதான் கிடைக்கும். அந்த கடைசி குடிசைகளில் காய்ச்சுறாங்க...” என்று அவன் சொன்னான். அவன் குறிப்பிட்டது சாராயத்தை என அவர் புரிந்து கொண்டார்.

“எதுக்கும் அதோ அந்த கடையிலே கேட்டுப் பாரும்,” என்று அந்த ஆள் கை காட்டினான்.

அவன் காட்டிய திக்கில் இருந்த, கடை மாதிரித் தோன்றிய ஒரு இடத்தை நோக்கி அவர் நடந்தார்.

கடைதான் வாழைப்பழம், மிட்டாய் தினுசுகள், முறுக்கு, சர்பத் எல்லாம் கிடைக்கும். அடும்பும். டீ பாத்திரங்களும் இருந்தன. பால் இல்லை; அதனால் டீயும் இல்லை.

தகவல் அறிந்து கொண்ட சிவகுரு சர்பத் வாங்கிக் குடித்தார். பிறகு கடலோரமாகவே நடந்து இயற்கை வனப்புகளை ரசித்தார். ஒரு இடத்தில் சிறிது நேரம் நின்றார்.

கடல் கண்களுக்கு விருந்து. அலைகளின் நடனம் அலுப்பு தராத இனிய காட்சி. விரிந்து கிடந்த நீலவானம் ஒரு அற்புதம். இதை எல்லாம் வியந்தபடி நின்றும், நடந்தும் அவர் வெகுதூரம் சென்று விட்டார், கடைசி குடிசைகளையும் கடந்து.

அவர் உள்ளத்தில் அமைதியும், சந்தோஷமும் பரவியது. அவ்வேளையில் குடிசைவாசிகள் இரண்டு பேர் அவரை நோக்கி வந்தார்கள். முரட்டுத் தோற்றம் கொண்டவர்கள்.

“எங்கேருந்து வாறீர்? இங்கே யாரைப் பார்க்க வந்தீர்?” என்று கேட்டான் ஒருவன்.

“சும்மா ஊரையும், கடலையும் பார்க்கத்தான் வந்தேன். இங்கு யாரையும் எனக்குத் தெரியாது,” என்றார் சிவகுரு.

“கஞ்சா, அபின் மாதிரியான சரக்கு ஏதாவது கொண்டு வந்திருக்கிறீரா?”

“அது மாதிரி சமரச்சாரங்களே எனக்குத் தெரியாது”

“ஓ... துப்பு பார்க்க வந்தியா? சாராயம் காய்ச்சறாங்களான்னு பார்க்கிறியா?” என்று மற்றவன் முறைத்தான்.

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை!” என்று பரிதாபமாக சொன்னார் அவர்.

“பையிலே என்ன வச்சிருக்கே?” என்றவாறு முதல் முரடன் அவர் பையை பிடுங்கினான். அதனுள் கை விட்டு துழாவி ஒவ்வொன்றாக எடுத்தான்.

பர்ஸ் கையில் கிடைத்தது. அதை எடுத்து திறந்து பார்த்தான். பத்து ரூபாய், ஐந்து ரூபாய் நோட்டுகளாக அறுபது ரூபாய் இருந்தது. சில்லறை காசுகளும் இருந்தன.

“உன்னை நம்பமுடியாது... திருட்டுத்தனமா உளவறியத்தான் வந்திருப்பே...”

“பேசாமல் திரும்பிப் போ,” என்று உறுமினான் மற்றவன்.

சிவகுருவுக்கு உள்ளுற பயம் பிடித்துக் கொண்டது. வாய் திறவாது நின்றார்.

“இந்தா பையை புடி!” பtசை மட்டும் வைத்துக் கொண்டு இதர சாமான்களுடன் பையை அவர் கையில் திணித்தான் முரடன்.

“என் பர்ஸ்!” தீனமாக ஒலித்தது சிவகுருவின் குரல்.

“பர்ஸ் . ஹூவ்... பர்ஸ்...!” என்று கூறி ஒரு தினுசாக சிரித்தான் தடியன். நோட்டுகளை எடுத்துக் கொண்டு பர்சை அவரிடம் நீட்டினான்.

“பணம்... என் பணம்...” என்று இறைஞ்சினார் சிவகுரு.

“போ... போ... இங்கே நிற்காதே!” என்று மிரட்டினான் முரடன்.

“பஸ்சுக்கு கூட பணம் இல்லியே!” அழுவது போல் சொன்னார் ஆவர்.

“சரிதாம் போடா,” என்று அவரைப் பிடித்து தள்ளினான் தடியன். சி“ல்லறை காசுகள் இருக்குல்லா அது போதும்,” என்று கூறி சிரித்தான்.

“திரும்பிப் பாராமல் போ... இல்லேன்னா, உதை வாங்குவே!” உறுமல்கள் தொடர்ந்தன.

சிவகுரு பயந்து போய் நடந்தார். வேகமாகவே நடந்தார். ஒரு கவரில் சில ரூபாய் நோட்டுகளை வைத்து, சட்டையின் உள் பையில் பத்திரப்படுத்தி இருந்தார் அவர். ஆகவே, பயணம் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டபடி நடந்தார் சிவகுரு.

★ தினமலர் தீபாவளி மலர் 1995