நல்ல தோழிதான்/திருப்திகரமான ஏற்பாடு

திருப்திகரமான ஏற்பாடு




தொழில் அதிபர் செல்வநாயகத்துக்கு முதல் பார்வையிலேயே அந்த இளைஞனைப் பிடித்து விட்டது. பிறகு சந்திக்க நேர்ந்த ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அவர் அவனை ஆராயும் கண்களோடு நோக்கினார், அவன் அவர் மனசில் நிலையான ஒரு இடத்தைப் பிடித்துக்கொள்ளும் தகுதிகளை உடையவனாகவே தென்பட்டான்.

“இவனை நம்ம ஆளாக ஆக்கிவிட வேண்டியது தான்” என்று அவர் எண்ணினார். “இது ஒரு பிசினஸ் டீல் வெற்றிகரமாக முடியவேண்டும்” என்று அவர் மனம் ஆசைப்பட்டது. ‘முடியாமல் என்ன? ஐயாவாள் நோட் பண்ணி, நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்து, திட்டமிட்டுச் செயலாற்றிய எதுதான் வெற்றிகரமாக, லாபகரமாக நிறைவேறவில்லை?’ என்று அவரது மனசின் இன்னொரு பகுதியே தன்னகங்காரத்தோடு கொக்கரித்துக் கொண்டது.

அவனை தனியாச் சந்தித்துப் பேசவேண்டும் என்று விரும்பி, தகுந்த நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார் அவர்.

அன்று மாலையே உரிய சந்தர்ப்பமும் வாய்த்தது.

நாகரிக நகரத்தின் நவநாகரிகத்துக்கும் ஸ்டைலான பழக்க வழக்கங்களுக்கும் பெயர் பெற்றிருந்த அந்தப் பெரிய ஓட்டலின் விசாலமான புல்வெளியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் போட்டிருந்த மேஜை நாற்காலிகளில் ஒன்றில் அவன் தனியாகக் காணப் பட்டான். அவனோடு சதா காட்சி அளித்துவந்த, செல்வச் செழிப்பும் பகட்டும் ‘ஸொசைட்டித்தனமும்’ ஆடை போலவும் அலங்காரம் போலவும் உடம்பில் படிந்திருக்க, ஒய்யாரமாய் திகழ்ந்த மங்கை அவனிடம் விடைபெற்றுப் போய்விட்டாள்

அவள் பெரிய இடத்து அம்மணி. அது தொழில் அதிபர் செல்வநாயகத்துக்குத் தெரியும். அவளுடைய கணவன் பிசினஸ் விஷயமாக வெளிநாடு சென்றிருந்த வன் அன்றைய பிளேனில் அந்நகரில் வந்து இறங்கு வதற்கு இருந்தான் என்பதையும் அவர் அறிவார். ‘ஆகவே பையனுக்கு இனி இங்கு வேலை இல்லை. நம்ம யோசனையை மகிழ்ச்சியோடு வரவேற்பான்’ என்று அவர் மனம் பேசியது.

அவர் தற்செயலாக அந்தப் பக்கமாக நடப்பவர் பேல் போய், ‘இங்கே உட்காரலாமா?’ என்று கேட்டபடி அவனுக்கு எதிரே அமர்ந்தார், மெதுவாகப் பேச்சு கொடுத்தார். ‘உங்களை அடிக்கடி இங்கே பார்க்கிறேனே, என்ன வேலையோ?’ என்று விசாரித்தார்,

அவருடைய போக்கை ‘அநாகரிகமான தலையீடு’ என அவன் கருதவில்லை, புன்முறுவலோடு ‘பிசினஸ்’ என்றான்.

“என்ன பிசினஸோ?”

“தேவைப்படுகிறவர்களுக்கு அவர்கள் தேவையை அனுசரிந்து, திருப்திகரமாகப் பணி புரிவது!”

“ஏதாவது கம்பெனியின் பிசினஸ் சிப்ரசென் டேட்டிவோ? அல்லது ஏஜன்சி ஏதேனும்...”

“அதெல்லாம் இல்லை, இது சொந்தமான, சமூக உறவு ரீதியான, ஒரு பிசினஸ்” என்று சொன்ன இளைஞன், அதற்குமேல் விளக்கம் கூறவில்லை, தேவையில்லை என்று எண்ணினான் போலும்,

அவரும் அதுகுறித்து அதிக அக்கறை காட்டவில்லை. “கொஞ்ச நேரத்துக்கு முன்னே, இங்கிருந்து போன அம்மாள் உங்களுக்கு உறவோ?” என்று கேட்டார்.

“பிசினஸ் உறவுதான். இந்தப் பெரிய நகரத்தில் அந்த அம்மாளுக்கு என் உதவி தேவைப்பட்டது. தேவைப்பட்ட காலம்வரை நானும் திருப்திகரமாக சேவை செய்தேன். அதற்கு எனக்கு தாராளமான பணமும், போனஸ் என்று கருதப்பட வேண்டிய அளவுக்கு அன்பளிப்புகளும் கிடைத்தன. அத்துடன் இந்த உறவு சரி” என்று கவலை இல்லாமல் கூறினான் அவன்.

“இனிமேல் என்ன செய்வதாக உத்தேசம்?!”

“அடுத்த வாடிக்கையைத் தேடவேண்டியதுதான். என் வாழ்க்கையையே ஒரு பிசினஸ் முறையில்தான் நான் நடத்தி வருகிறேன்.”

“நானும் வாழ்க்கையை ஒரு பெரிய பிசினஸாகத் தான் கருதுகிறேன்” என்று செல்வநாயகமும் சொல்ல ஆசைப்பட்டார். அவனுடைய கருத்தை காப்பி அடிப்பது போல் அது ஒலிக்கும் என்று அவர் மனசில் பட்டதனால், அந்த ஆசையை அப்படியே ஒடுக்கிவிட்டார்.

அந்த இளைஞனுடைய ‘காலத்துக்கு ஏற்ற’ நாகரிகரீதியான, சோஸியல் சர்வீஸ் அடிப்படையில் நடைபெறும் பிசினஸ் என்ன என்பதை அவரும் புரிந்து வைத்திருந்தார். நாகரிக சமுதாயமும், நகர வாழ்க்கையும், நவயுக கலாசாரங்களும் எத்தனை எத்தனையோ பிழைக்கும் வழிகளுக்கு வகைசெய்து வருகின்றன! எவர் எவரோ, என்ன என்ன எல்லாமோ செய்து, எப்டி எப்படியோ வாழ்க்கை நடத்துகிறார்கள்! இதை நன்கு அறிந்து வைத்திருந்த தொழில் அதிபர் அந்த

இளைஞனின் சாமர்த்தியத்தை வியந்து பாராட்டத் தயாராக இருந்தார்.

ஆனால் அவன் அவரிடமோ அல்லது வேறு எவரிடமிருந்தோ, பாராட்டுரைகளையோ அன்றி நற்சான்றிதழ்களையோ எதிர்பார்த்ததாகத் தெரிய வில்லை. அவனது நிலையில் அவன் பரிபூரண திருப்தி கொண்டவனாகவே காணப்பட்டான்.

அவனுக்கு முப்பது வயசுக்குள் இருக்கலாம். சிரித்த முகமும் சிங்காரத் தோற்றமுமாய், வசீகரனாய், உரையாடல் திறமை மிகுந்த இனியனாய் விளங்கினான். உயரமில்லாது, எனினும் குள்ளம் என்று சொல்லப்பட வேண்டிய அகாவிலும் இராது, ‘தண்டியும் சதையுமாக’ இல்லாமல், ஆயினும் மெலிந்த உடல் என்று கொள்ளப்பட வேண்டிய தன்மையிலும் இராமல், கவலையற்ற. போஷாக்கு நிறைந்த வளப்பமான வாழ்க்கை முறையை விளம்பரப்படுத்துகிற தோற்றம் பெற்றிருந்தான். ஸ்டைல் என்பதை உரக்க எடுத்துச் சொல்லும் புதிய டிசைன்கள், அடித்தமான வர்ணங்கள்,கோணங்கித்தன அமைப்புகள் எதுவும் அவனது ஆடைகளிலோ அலங்கரிப்பிலோ தென்படவில்லை. அவனுக்கு அமைவாகவே எல்லாம் இருந்தன.

இவை எல்லாம்தான் செல்வநாயகத்தை அவன் பால் விருப்பம் கொள்ள வைத்தன. அவன் பெயர் ராஜன் என்பதையும் கேட்டறிந்து கொண்டார். அவன் தனது கோரிக்கையை மனம் உவந்து ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கை இருந்தது அவருக்கு.

‘உங்களுக்கு மிக முக்கியமான அலுவல்கள் எதுவும் இப்போது இல்லை என்று தெரிகிறது. எனக்கும் உதவி தேவைப்படுகிறது. எனது சொந்த விவகாரங்கள் சிலவற்றை நான் ஒழுங்குபடுத்தியாக வேண்டும். அதற்கு உங்கள் மாதிரி ஆற்றல் உள்ள நபரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். எனக்கு பெர்சனல் அசிஸ்டன்டாக இருந்து ஆவன செய்ய, நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். மாதம் ஐநூறு ரூபாய் தருவேன். தங்கும் இடம், இதர வசதிகள், சலுகைகள், எல்லாம் உரிய முறையில் கவனிக்கப்படும். என்ன சொல்கிறீர்கள்?” என்று தொழில் அதிபர் ‘பிசினஸ் லைக்காக’ப் பேசினார்.

அவன் சிறிது நேரம் யோசனை பண்ணுவதுபோல் இருந்தான். பிறகு, ‘சம்மதம்’ என்றான்.

“ஆல் ரைட்...... இப்படிக் கொடுங்கள் கையை! என்று உற்சாகத்தோடு அவன் கையைப் பற்றிக் குலுக்கினார் அவர். உங்களுக்கு செளகரியப்படுகிறபோது, என்னோடு புறப்படலாம்” என்றார். அவனுக்கு எப்போதும் செளகரியம்தான். ஆகவே, ஆன்றே அவருடன் புறப்பட்டு, அவர் ஊர் போய்ச் சேர்ந்தான் ராஜன்.

தொழில் அதிபர் அவனுக்கு அதிகமான வேலைகள் ஒதுக்கிவிடவில்லை. இருந்த வேலைகளை எளிதில், சீக்கிரமே முடித்துவிடும் ஆற்றல் அவனுக்கு இருந்தது. எனவே, வசதிகள் மிகுந்த சூழ்நிலையில் ஓய்வாகப் பொழுது போக்கும் சுகவாசி மாதிரியே அவனும் நாளோட்டினான்.

செல்வநாயகம் பிசினஸ் விஷயமாக அடிக்கடி வெளியூர்களுக்குப் போய்க் கொண்டிருந்தார். சில சமயம் அவனையும் உடன் அழைத்துச் சென்றார். அநேக தடவைகள் அவன் பங்களாவிலேயே தங்விகிட நேர்ந்தது.

அதற்காக அவன் வருத்தப்படவில்லை. பிறகு, அதுபோன்ற சந்தர்ப்பங்கள் கிடைப்பதற்காக அவன் ஆனந்தமே கொண்டான். காரணம், திருமதி செல்வ நாயகத்தின் அன்பும் உபசரிப்பும் தனிப்பட்ட கவனிப்பும்தான்.

அதிபர் ராஜனை அழைத்து வந்ததுமே தன் மனைவி வசந்தாவிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவளும் சமூகப் பிரமுகரின் அந்தஸ்துக்கு ஏற்ற தகுதி கள் பெற்ற துணைவியாகவே விளங்கினாள்.

அவள், வசீகர சக்தியும் திருப்திப்படுத்தும் குண நலன்களும், சிரித்துச் சிரித்து-சிரிக்கச் சிரிக்கப் பேசும் திறமையும் கொண்டிருந்த ராஜனுடன் ‘ஃபிரீயாகவே’ பழகினாள். சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அவ்விரு வரும் ரொம்ப ஃபிரியாகப் பழகுவதற்கும் இனிமையாகப் பொழுதுபோக்குவதற்கும் துணை செய்தன.

அவன் பெரிய இடத்துப் பெண்மணிகள், சொஸைட்டி ‘வண்ணப்பூச்சி’கள் உத்தியோகம் பார்க்கும் நாகரிக நங்கையர்பற்றி எல்லாம் சுவாரஸ்யமான தகவல்களை அவளுக்குத் தந்தான். அவ்வப்போது அவளைப் புகழ்ந்து பேசவும் தவறவில்லை.

அவனுடைய ஆற்றலையும், அனுபவத்தையும் ஒரு சமயம் அவள் வியந்து பேசியபோது அவன் மோகன மாய் சிரித்தான். ‘என் பிசினசின் முதலிடே அது தானே!’ என்றான்.

பிசினஸா? என்ன பிசினஸ்? என வியப்பால் அகன்ற கண்களோடு அவனைப் பார்த்தாள் வசந்தா.

“வாழ்க்கை பிசினஸ்தான்!”

“அப்படியும் ஒண்னு இருக்குதா?” என்று கேட்டு, கலகலவெனச் சிரித்தாள் அவள்.

“வாழ்க்கையை ஒவ்வொருவரும் அவரவர் மனப் பண்புக்குத் தக்கபடி மதிப்பிடுவார்கள். அது ஒரு நாடகம், எக்ஸிபிஷன், ரயில்வே பிரயாணம் மாதிரி, ஜாலி விளையாட்டு இப்படிப் பல நோக்குகள் உண்டு. நான் வாழ்க்கையை ஒரு பிசினஸாக வளர்த்து வரு கிறேன். இன்றைய சமுதாய நிலையில் பலருக்கும் பொதுவான பண வறுமை தவிர வேறு பலவிதமான வறுமைகள். அதன் அடிப்படையில் விதம் விதமான தேவைகள். அன்பு வறுமை, நட்பு வறுமை, உறவு வறுமை, உதவி வறுமை இப்படி அநேகம், இவை வாழ்க்கை வசதிகள் மிகுந்த உயர்மட்டத்தில் அதிகம் நிலவுகின்றன. அவற்றால் தவிக்கும் பெரிய இடத்துப் பெண்களின் குறைகளை நீக்குவதுதான் என் பிசினசின் முக்கிய நோக்கம். அதன் மூலம் பணமும் கிடைக்கும், சுகமும் கிடைக்கும். பண வரவையும் லாபத்தையும் கருத்தில் கொண்டு செயல்படுத் கப்படுவ தால் இது பிசினஸ் ஆகிறது...”

அவனுடைய விளக்கமும் பேச்சும் அவளுக்கும் வேடிக்கையாகப்பட்டன. அவள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். அந்நிலையில் வசந்தா மிகுதியும் ரசிக்கப்பட வேண்டிய கலையாய், கவிதையாய், இன்பக் கனியாய் தோன்றினாள் அவன் பார்வையில்.

ராஜன் அங்குவந்து ஐந்தாறு மாதங்கள் இருக்கும். “பரவால்லே வாழ்க்கை அருமையாய், இனிமையாய் குளுகுளுன்னு ஓடுது” என்று மகிழ்ந்து கொண்டிருந்த நாளின் ஒரு மனோகர வேளையில் வசந்தா சொன்னாள்

“நாம் பிரியவேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.”

“ஏன்? என்ன விஷயம்” என்று திகைப்புடன் கேட்டான் அவன்.

“நம் இன்ப உறவின் கனி என்னுள் உருவாகி வளர்கிறது” என அவள் மகிழ்ச்சியோடும் வெட்கத்துடனும் தெரிவித்தாள்.

‘என்னது?’ அவனுக்கு அதிர்ச்சி அதி.

“நான் நான்கு மாசமாக் குளிக்கலே” என்று வெளிப்படையாகச் சொன்னாள் அவள்.

‘சே!’ என்று கையை உதறினான்ராஜன், “ஆரம்பம் முதலே தடுப்பு நடவடிக்கைகள் எடுத்திருக்கணும். அல்லது போனமாசமே சொல்லியிருந்தால், ஈசியா அகற்றியிருக்கலாம். இப்ப கொஞ்சம் லேட்டாயிட்டுது. அதனாலே ரிஸ்க் இருந்தாலும் பரவால்லே. மருந்துகள் இருக்கு பயப்படத் தேவையில்லை. எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர்கிட்டே சொல்லி ஏற்பாடு செய்து போடலாம்.”

அவன் பேச்சு அவளுக்குப் பிடிக்கவில்லை. அதை அவள் முகச்சுழிப்பு விளம்பரப்படுத்தியது. அவள் தன்னை சிக்கவில் மாட்டி வைக்கத் திட்டம் போடுகிறாள் போலும் என்று அவனுடைய ‘பிசினஸ் மைண்டு’ பேசியது. “அவருக்கு விஷயம் தெரியாமலா போகும்? இதை எப்படி மறைக்க முடியும்?” என்று கேட்டான்.

அவனது அப்பாவித்தனத்தைக் கண்டு அவளுக்கு சிரிப்பு வந்தது இப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலும் இவளால் எப்படிச் சிரிக்க முடிகிறது என்று குழம்பினான் அவன்.

“இதில் மறைப்பதற்கோ, மறுப்பதற்கோ அவசியம் அதுவும் இல்லை...”

அவளுடைய நிதானமான போக்கும் பேச்சும் அவனுக்கு ஆச்சர்யம் அளித்தன. “உண்மை தெரிந்ததும் அவர் கோபம் கொள்ளமாட்டாரா?” உன்னை அல்லது என்னை அல்லது ரெண்டு பேரையுமே தாக்க வேனும்கிற வெறிகொண்டு...

“உங்களுக்கு உண்மை தெரியாது. இதிலே அவருக்கு ரொம்ப சந்தோஷம். அவருடைய திட்டமும் ஏற்பாடும் வெற்றி பெற்றுள்ளதை அறிந்து பெருமையும் மகிழ்ச்சியும் அடைவதுதான் அவர் சுபாவம்.”

அவள் புதிராகப் பேசுகிறாள் என்று பட்டது அவனுக்கு. விஷயம் புரியாமல் தலையைச் சொறிந் தான். ‘நீ என்னதான் சொல்கிறாய்? தயவு பண்ணி எல்லாவற்றையும் தெளிவாகச் சொல்லு’ என்றான்.

வசந்தா புன்னகை புரிந்தாள். ‘எங்களுக்குக் குழந்தை இல்லை. கல்யாணமாகிப் பல வருஷங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. அவருக்குப் பிள்ளை பிறக்கும் என்கிற நம்பிக்கைக்கிடமில்லை. ஆனாலும் எங்களுக்கும் குழந்தை தேவை. அவருடைய திரண்ட சொத்துக்கு செல்வத்துக்கும் வாரிசு வேண்டும். தேவைப்படுகிறவர்களின் தேவையை அனுசரித்து, திருப்திகரமாக உதவுவதை பிசினசாகக் கொண்டுள்ள உங்கள் உதவியை அவர் நாடினார். நீங்களும் உதவினீர்கள். அவ்வளவுதான் விஷயம்!’ என்றாள்.

“ஓகோ, இதுதான் சொந்த விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் தொழில் அதிபரின் பிசினஸ் ரீதியான ஏற்பாடோ? ஆதியிலேயே இது எனக்குப் புரியாமல் போய்விட்டதே! நான் என்னவோ இது தனிப்பட்ட காதல் வெற்றி என்று எண்ணி ஏமாந்திருந்தேனே!” சான்று அவன் தன் நெஞ்சோடு புலம்பிக் கொண்டான்.

அதற்காக அவன் ரொம்ப நேரம் வருத்தப்படவும் இல்லை. இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது? பிசின்ஸ் என்றால் பிசின்ஸ்தானே!

தொழில் அதிபர் செல்வநாயகம் அன்று மாலை ராஜனை தனியாகச் சந்தித்தார். “மிஸ்டர் ராஜன், நம்ம பிசினஸ் டீல் திருப்திகரமாக நிறைவேறிவிட்டது. இனியும் உங்களுடைய சொந்த பிசினஸ் முயற்சிகளுக்கு நான் தடையாக இருக்க விரும்பவில்லை. நான் திடீர்னு உங்களை அனுப்பிவிடுவதாக நீங்கள் எண்ணக் கூடாது. மூன்று மாத அலவன் சாக ஆயிரத்தைந்நூறு ரூபாய், போனஸாக ஒரு ஐநூறு ஆக இரண்டாயிரம் இந்தாருங்கள். உங்கள் எதிர்காலம் வளமுடையதாக அமையட்டும்” என்று வாழ்த்துரையும் பணமும் அளித்து, கைகுலுக்கி, விடைகொடுத்து அனுப்பினார்.

“இனிமேல் இவன் இங்கே இருப்பானேன்? அவள் உள்ளத்திலும், அப்புறம் பிள்ளை பிறந்த பிறகும், வீணான உணர்ச்சிக் குழப்பங்களுக்கு வகை செய்வதற்கா? பிசினஸ் ஏற்பாட்டில் சென்டிமெண்டல் நான் சென்சுக்கெல்லாம் இடமே கிடையாது” என்று பணநாதர் மனத்திருப்தியுடன் எண்ணிக் கொண்டார்.

ராஜன் வசந்தாவிடம் தனிமையில் விடை பெற்றுக் கொண்டான். ‘உன் நினைவு என்றும் இருக்கும்!’ என்றான்.

“எனக்கும்தான் என முணுமுணுத்தாள் அவள். இருந்தாலும், என் நினைவாக இது எப்பவும் உங்களிடமே இருக்கட்டும்” என்று கூறி, தன் கழுத்தில் கிடந்த மெல்லிய தங்கச் சங்கிலி ஒன்றை எடுத்து, அன்பளிப்பாக அவனுக்குத் தந்தாள். தாயாகப் போகும் திருப்தி அவள் முகத்திலும், உடலிலும் தனி ஒளியோடு மினுமினுத்துக் கொண்டிருந்தது.

அந்த அழகைக் கடைசி முறையாகக் கண்டு களித்து விட்டு வெளியேறிய ராஜனின் மனம் “எல்லாருக்கும் திருப்தி தரும் ஏற்பாடாக இது முடிந்திருக்கிறது. சந்தோஷமான விஷயம் இல்லையா அது? எனக்கு என்ன! வாழ்க்கையே ஒரு பிசினஸ், அதற்கு வெற்றி தரும் பெரிய சந்தை இந்த மனித சமூகம்” என்று நிறைவோடு முடிவுகட்டியது.