நல்ல தோழிதான்/திடீர் ஹீரோ!



திடீர் ஹீரோ!



சுயம்புலிங்கத்துக்கு அந்தத் துணிச்சல் எப்படி வந்தது? அவரை அறிந்தவர்களுக்கு அது ஒரே ஆச்சரியமாயிருந்தது. ஏதோ ஒரு வேகத்தில் அவர் அவ்விதம் செயல் புரிந்துவிட்டாரே தவிர பிறகு அதைப்பற்றி எண்ணும்போது அவருக்கே அது பெரும் ஆச்சரியமாகத்தான் பட்டது!

இத்தனைக்கும் சுயம்புலிங்கம் ஒரு சாதாரணப் பேர்வழி, பார்ப்பதற்கு அப்பாவி மாதிரி இருப்பவர். பலரை அண்ணாந்து பார்க்க வைக்கும் உயரம், ஏறெடுத்து நோக்கச் செய்யும் எடுப்பு. திரும்பிக் கவனிக்கத் தூண்டும் மிடுக்கு, பிறரிடம் மரியாதை அல்லது பயம் போன்ற உணர்ச்சியை உண்டாக்கும் ஒரு தோரணை, அல்லது பெரிய மனுஷத் தோற்றம். இப்படி ஏதேனும் ஒன்று அவரிடம் ஒட்டிக் கொண்டிருக்குமோ என்று ஆராயப் போனால் ஒரு மண்ணும் கிடையாது. பிறவி முதலே நோஞ்சானாக இருந்து, நோஞ்சானாகவே வளர்ந்தவர் அவர்.

தெருவில் சிறு கூட்டம் தென்பட்டாலும் ‘நமக்கு ஏன் வீண் வம்பு?’ என்று ஒதுங்கிப் போய்விடுவார். கலாட்டா, காலித்தனம், ரகளை, சண்டை சச்சரவு ‘வகையரா’ அவருக்குப் பிடிக்காத விஷயங்கள். ஆனால் அவற்றின் வளர்ப்புப் பண்ணை என்று கருதப்பட்ட வட்டாரத்தில்தான் அவர் வசித்தார். அவர் போகிற, வருகிற பாதைகளில் அங்கங்கே திடீர் திடீரென்று கலாட்டா, கூச்சல், கும்பல் முதலியன தலையெடுக்கும்; வெறியாட்டம் போடும். காளிப்பேட்டை என்று சொன்னாலே, “ஓ, அந்த இடமா?” என்கிற எதிரொலியை எழுப்பக் கூடிய சிறப்புப் பெற்றிருந்தது அது.

முன்னொரு காலத்தில் கண்ட கண்ட இடத்திலெல்லாம் கள்ளுக்கடைகள் ஆட்சி புரிந்து கொண்டிருந்த போது காளிப்பேட்டை எவ்வளவு கோரமாக விளங்கியது தெரியுமா? ‘நிர்-1, மதுரமான தென்னங்கள்ளு இங்கே கிடைக்கும்’ என்று பளிச்சிடும் எழுத்துக் களோடு காளிப்பேட்டையில் மூலைக்கு மூலை கடைகள் இருக்கும். அவற்றின் முன்னே எப்போதும் ஒரு கூட்டம்; ஓயாத கூச்சல்; திடீர்ச் சண்டைகள். எந்தச் சமயத்திலும் அரிவால் ஓங்கப்படும். சதக்! பனங்காய் சீவுகிற மாதிரி ஆளையே வெட்டி விடுவார்கள்!...

இந்த விதமாக-இன்னும் தினுசு தினுசாக அந்த ஊர்ப் பெருமைகள் பேசப்படும். சில ஆசாமிகளின் பெயர்கள் பயம் கலந்த மரியாதையோடு உச்சரிக்கப்படும். “அவங்க எல்லாரும் போயிட்டாங்க, கள்ளு சாராயம் வகையராகவும் போயிட்டுது. இருந்தாலும் அவங்க வாரிசுக இல்லாமல் போகல்லே. அவங்களுக்குக் குடிக்கிறதுக்கும் கிடைக்கத்தான் செய்யுது. குடித்துப் போட்டு, ராத்திரி நேரங்களிலே தெருவில் அட்டகாசம் பண்றதுதான் அவங்க வேலை. போலீசு வருதுன்னு சொன்னா, அவங்களுக்கு முன்கூட்டியே தகவல் கிடைச்சிடும் ஆசாமிக எங்கே போவானுக, எப்படிப் பம்முவானுக என்றே தெரியாது. எல்லாரும் ஒரு நிமிஷத்திலே அவுட்! தெரு வெறிச்சோடிக் கிடக்கும்!” என்று சிலர் வியப்போடு அறிவிப்பார்கள்.

சுயம்புலிங்கம் அவற்றையெல்லாம் சட்டை செய்வது கிடையாது. நமது அலுவல்கள், குறிப்பிட்ட நேரங்களில் வெளியே போவது, வருவது, ஓட்டலில் சாப்பாடு, பொழுது போக்காகப் புத்தகங்கள் படிப்பது. இப்படி அவருடைய உலகம் இயங்கிக் கொண்டே இருந்தது.

இரவு மணி பத்து, பத்தேகால் இருக்கும். சுயம்புவும் அவர் நண்பர் பாஸ்கரும் சிகரெட்பிடித்து, வம்பளந்து, உற்சாகம் பெற்றுக்கொண்டு இருந்தார்கள்.

பாஸ்கரன் பெரிய இடத்துப் பிள்ளை. பொறுப்பான உத்தியோகம் பார்த்து வந்தார். அதிகாரம், பணம், குலக் கெளரவம், ஆள் மதிப்பு முதலிய அந்தஸ்துகள் காரணமாக அவருக்கு அந்த வட்டாரத்தில் சிறிது செல்வாக்கும் ஏற்பட்டிருந்தது. அதைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆசையோடு பொன்னுசாமி என்கிற நபர் அங்கே வந்து, “ஐயா, என்னை நீங்கதான் காப்பாத்தனும். காளிப்பேட்டை ஆசாமிங்க என்னை மிரட்டுறானுக. ராவா என் தலை வேறே உடல் வேறே ஆகப் போகுதுன்னு சொல்றானுக. நீங்க வந்து ரெண்டு அதட்டல் போட்டால் போதும். பொன்னுப்பய வெறும் பயல் இல்லே, தட்டிக் கேட்கச் சரியான ஆள் பலம் இருக்குதுன்னு அவங்களுக்குப்படும்” என்று புலம்பினான்.

“நீ ஏதாவது வாலாட்டியிருப்பே; உன் வாலை ஒட்ட நறுக்குவதற்கு மற்றவனுக கத்தி தீட்டுவானுக!” என்றார் பாஸ்கர்.

“இல்லே. நான் தப்புத்தண்டா எதுவும் பண்னவே இல்லே!” என்று பொன்னு சாதித்தான்.

இந்த விவகாரத்தில் தலையிட பாஸ்கருக்கு மனமும் இல்லை; உற்சாகமும் இல்லை. “இப்போ என்னாலே வர முடியாது. இன்னிக்கு எனக்கு வேலை அதிகம்; ஒரே களைப்பாக இருக்கு. நீ வேணுமின்னா நம்ப ஸாரை அழைத்துப் போ!” என்று சுயம்புலிங்கம் பக்கம் கையைக் காட்டினார் அவர்.

சுயம்புவை அவருக்குத் தெரியாதா? சும்மா தமாஷூக்குத்தான் சொன்னார்.

அவர் கொஞ்சமும் எதிர்பாராத விதமாகச் சுயம்பு லிங்கம் அங்கு வந்து நின்றவனை ஒரு தினுசாகக் கவனித்தார். “சரி, நீ முன்னாடி போ, இதோ நான் வாறேன்” என்றார்.

பொன்னுசாமி பெரிசாக ஒரு கும்பிடு போட்டு விட்டு வெளியேறினான்.

அவன் போனதும் சுயம்பு வேகமாக எழுந்தார். ஒரு துண்டை எடுத்து உடம்பை மூடியிருந்த பனியனுக்கு மேலாகப் போர்த்துக் கொண்டார். மேஜைமீது கிடந்த சிறு கைப்பிரம்பு ஒன்றை எடுத்துக்கொண்டு வேகமாகக் கிளம்பிவிட்டார்.

அவரை வேடிக்கை பார்த்தவாறு சோம்பிக் கிடந்த பாஸ்கர், “என்ன மிஸ்டர், அங்கேயா போகப் போநீங்க?” என்று கேட்டார்.

“ஊம்” என்று உறுமினார் சுயம்பு.

“அவங்களுக்கு வேறே வேலை கிடையாது. சோதாப் பசங்கள் மத்தியிலே நீங்க போயி என்ன பண்ணப் போறீங்க?”

“அவனுக எப்படி இருப்பாங்க என்றாவது பார்க்கலாமே!” என்று சொன்ன சுயம்புலிங்கம் தமது சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

“போகட்டும் போகட்டும். ஐயாவுக்குச் சரியான பாடம் கற்பித்து அனுப்புவாங்க. செம்தியா உதை தின்னுட்டு வருவாரு!” என்று சிரித்தது பாஸ்கரின் மனம்.

பேசின்னுசாமி குறிப்பிட்ட தெருவை அடைந்ததும் சுயம்புலிங்கம் சைக்கிளை விட்டிறங்கி நின்று நெடுகிலும் தமது பார்வையை எறிந்தார். ஓர் இடத்தில் நாலைந்துபேர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

சுயம்பு விறைப்பாக நின்று, “ஏய், இங்கே என்ன கும்பல்? நீங்கதான் கலாட்டா பண்ற ஆளுகளா? தலையைச் சீவிடுவேன். ஆளைக் குளோஸ் பண்ணிடுவேன்னு சொல்ற அளவுக்கு வந்துட்டுதா? எல்லோரையும் ஸ்டேஷனுக்குத் தள்ளிட்டுப் போயி பாடம் கத்துக் கொடுக்கிறேன். நான் யாரு தெரியுமில்லே? உங்களை யெல்லாம் தொலைச்சுப் போடுவேன், தொலைச்சு!” என்று இரைந்தார்.

அவ்வளவுதான்; அங்குமிங்கும் உட்கார்ந்திருந்த வர்களும், ஒய்ந்து கிடந்தவர்களும் ஒவ்வொருவராக வந்து ஒதுங்கி நின்றார்கள். பீடி பிடித்துக் கொண்டிருந்த ஒருவன், அதை அவசரம் அவசரமாக மண்ணில் போட்டுக் கால் பெருவிரலால் தேய்த்து நசுக்கினான், ஒன்றிரண்டு பேர் தோளில் கிடந்த துண்டை இறக்கி, கையில் தொங்கவிட்டு மரியாதை காட்டினார்கள்.

“அப்படி ஒண்னும் இல்லிங்களே எசமான்!” என்ற சொற்களை மென்று மென்று வெளிப்படுத்தினான் ஒருவன்.

“பின்னே பொன்னுச்சாமி வந்து ரிப்போர்ட் கொடுத்தானே? அது விளையாட்டா? ஒரு மனுசன் உசிரு என்ன கிள்ளுக் கீரையா? அவன் கத்திரிக்காயா இல்லே கோழிக் குஞ்சா? நீங்க நினைச்ச உடனே அரிந்து தள்ளவும், நறுக்கிக் கொல்லவும்?” என்று கத்தினார் சுயம்பு.

“எசமானுக்கு யாரோ தப்பாத் தகவல் கொடுத்திருக்காங்க!”

“பொன்னுசாமி எங்கே?” என்று அதட்டிக் கேட்டார் அவர்.

“பய எங்கே போனான்?” என்று பலரக முனு முனுப்புகளும், அநேக விதமான பார்வைகளும் சுற்றுப் புறத்தைத் துழாவின.

“இதோ இருக்கேன், எசமான்” என்று பதறி அடித்து முன்னே வந்தான் பொன்னு,

"இங்கே யாரு உன்னை மிரட்டியது”?

பொன்னுசாமி திருதிருவென்று விழித்தான்.

“சொல்லேன்டா, வாயிலே என்ன கொழுக் கட்டையா திணிச்சிருக்கு? அங்கே வந்து ரிப்போர்ட் பண்ணினியே?” என்று எரிந்து விழுந்தார் சுயம்பு.

“முத்துமாலை, காத்தலிங்கம், ஒண்டிப்புலி” என்று முனகினான் போன்னு.

"ஒண்டிப்புலியா யாரு?" என்றார் அவர்.

“நான்தான் எசமான்!” என்று முன்னால் வந்து நின்றது வஞ்சனை இல்லாமல் வளர்ந்த உருவம் ஒன்று.

“உன் தொழில் என்ன?” என்று விசாரித்தார் சுயம்பு,

“சுக ஜீவனம்!”

"சாப்பாட்டுக்கு வழி?”

“அம்மா கவனிச்சுக்குறாங்க. அவங்க கடை நடத்துறாங்க! நல்ல வியாபாரம்” என்று விடை கிடைத்தது.

சுயம்புலிங்கம் பிறகு விசாரித்து அறிந்து கொண்ட விவரம் இது.

ஒண்டிப் புலியின் வேலை சூதாடுவது, ரேசுக்குப் போவது, குடிப்பது, ஏமாந்தவர்களிடம் பணம் பிடுங்கி ஜாலியாகச் செலவு பண்ணுவது; அவனுக்கு இரண்டு மனைவிகள். ஆசைநாயகி ஒருத்தியும் உண்டு.

அப்போது பொன்னுசாமி பேரிலும் அப்படி ஒரு குற்றச்சாட்டைக் கூறினான் ஒண்டிப் புலி. “நான் இல்லாத சமயத்திலே இந்தப் பொன்னுப் பய வீட்டிலே போயி, பொம்பளை கிட்டே கேலி பேசியிருக்கிறான். அவகிட்டே தகாத முறையிலே நடந்திருக்கிறான். அதனாலே நான் எச்சரிச்சி வச்சேன்” என்றான்.

சுயம்பு, பொன்னுசாமியை முறைத்தார். “ஏமி லேய், திமிரா? நீ ஏண்டா அப்படிச் செய்தே? உன்னையும் ஸ்டேஷன்லே தள்ளி சரியா கவனிக்க வேண்டியதுதான் போலிருக்கு!” என்று கர்ஜித்தார்.

“இல்லை எசமான் நான் வந்து...”

“வந்தாவது, போயாவது? ஜாக்கிரதை! உன் மேலேயும் ஏதாவது ரிப்போர்ட் வந்தால், அவ்வளவுதான். முதுகுத்தோலை உரிச்சுப் போடுவேன், ஆமா!” என்று சுயம்பு. “எல்லாருக்கும் இதே வார்த்தைதான். இனி மேல் ரிப்போர்ட் வந்ததோ தொலைச்சுடுவேன் தொலைச்சு எச்சரிக்கையா நடந்துக்குங்க!” என்று ஒரு போடு போட்டார்!

அங்கே நின்றவர்கள் கலக்கத்துடன் தலையை ஆட்டினார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

சுயம்புலிங்கம் விறைப்பாக சைக்கிளில் ஏறி அழுத்தி மிதித்தார். திரும்பிப் பாராமலே வேகமாக முன்னேறினார்.

“சண்டியன், கில்லாடி, ரவுடி! ஹே, சோதாப் பசங்க என்னை போலீஸ் இன்ஸ்பெக்டர்ன்னு நெனச்சி மிரண்டு போனாங்க. துணிஞ்சு அடிக்கிறவனைக் கண்ட பயப்படறவங்கதான் உலகத்திலே ஜாஸ்தி! அவங்க பிழைப்பும் அப்படித்தான் நடக்குது!”

சுயம்புலிங்கத்தின் சிந்தனையில் ஞான மின்னல் கிறுக்கிச் சிரித்தது.

சிரித்தபடி திரும்பி வந்த சுயம்புவைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார் பாஸ்கர், அவர் பேச்சைக் கேட்டுத் திகைத்துத் திணறினார்.

“கில்லாடிகளாம்! தண்டச் சோத்துத் தடியன்கள்! அவங்க உடலையும் உரத்த குரலையும் முரட்டுய் போக்கையும் கண்டு பயப்படுகிறவங்க இருக்கிறவரை, அவங்க பிசினசும் வெற்றிகரமா நடக்கும். கொஞ்சம் துணிஞ்சி, தடலடித்தனமாப் பேசி மிரட்டினால் யாரும் சண்டியன் ஆகிவிடலாம்னு தெரியுது. மனுஷங்க உள்ளத்திலே அவ்வளவு துரத்துக்கு பயம் குடியிருக்குது!” என்று சுயம்பு அளந்தார்.

அவருடைய துணிச்சலையும், புதிய போக்கையும் பற்றி என்ன சொல்வது அல்லது என்ன நினைப்பது என்றே புரியவில்லை நண்பருக்கு.


★ “தினமணிகதிர்” – 7.7.67