நல்வழிச் சிறுகதைகள்-2/தம்பி மாணிக்கம்
அக்காலத்தில் பாண்டிய நாட்டைச் சேர்ந்த மீனவன்பட்டி என்ற ஊரில் சாத்தப்பர் என்று ஒருவர் இருந்தார். அவருக்கு முத்து வாணிபம் பரமபரைத் தொழிலாயிருந்தது. கொற்கையில் கிடைக்கும் முத்துக்களைப் பிற ஊர்களில் கொண்டு போய் விற்பது அவருடைய தொழில்.
மீனவன் பட்டியில் அவர்தான் பெரிய செல்வர். ஆகவே, அந்த ஊரில் அவர் தந்நிகரற்று விளங்கினார். சாத்தப்பர் செல்வர். ஆகவே, அவருடைய சுற்றத்தார் பலர் அவர் மாளிகையிலேயே வந்து தங்கியிருந்தனர். சிலர் அவருடைய வாணிகத்திற்குத் துணை புரிந்தனர் சிலர் அவருடைய வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர் ; சிலர் ஒன்றும் செய்யாமலே சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
சாத்தப்பருடைய வீடு ஒரு சத்திரம் போல் காட்சியளித்தது. நாள்தோறும் ஐம்பது பேருக்குக் குறையாமல் பந்தியில் உட்காருவார்கள். சாத்தப்பருக்கு இதனால் ஒன்றும் குறை ஏற்பட்டு விடவில்லை, வாணிகத்தில் நல்ல வருவாய் கிடைத்ததால், அவருக்கு இது ஒரு செலவாகவே தோன்றவில்லை.
தம் வீட்டில் இவ்வளவு பேர் இருந்து சாப்பிடுகிறார்களே, இதனால் அதிகச் செலவாகிறதே என்று அவர் நினைத்ததேயில்லை. சுற்றத்தார் சூழத் தாம் இருப்பதே இன்பம் என்று கருதினார். தாம் ஈட்டும் பொருள் இத்தனை பேருடைய வாழ்வுக்கும் பயன்படுகிறதே என்று மகிழ்ச்சியடைந்தார். தம்மைச் சார்ந்திருக்கும் அனைவரையும் .தொடர்ந்து காப்பாற்ற, மேலும் பணம் திரட்ட வேண்டும் என்ற ஊக்கத்தோடு வாணிகத்தில் அவர் முழு மூச்சாக ஈடுபட்டார்.
ஒரு நாள் ஒர் ஏழைச் சிறுவன் அவரைத் தேடி வந்தான். அவன் வந்து சேர்ந்தபோது, அவர் ஊரில் இல்லை. மறுநாள்தான் அவர் வெளியூரிலிருந்து வந்து சேர்ந்தார். அவர் இல்லாதபோது அவன் அவர் வீட்டில் நுழையவில்லை. வெளியிலேயே நின்றான். வீட்டில் இருந்தவர்கள் அவனைச் சாப்பிட்டாயா என்று கூடக் கேட்கவில்லை. வீட்டு வாசலிலேயே உட்கார்ந்து விட்ட அவனிடம் யாரும் இரக்கம் காட்டவில்லை. அவன் சாத்தப்பர் வரும் வரை பசிக்கும் வயிறோடு வாசலில் உட்கார்ந்திருந்தான்.
சாத்தப்பர் வெளியூரிலிருந்து வந்து, வீட்டு வாசலில் இறங்கினார். படியில் காலடி எடுத்து வைக்கப் போகும் போது, “ஐயா !” என்று ஓர் ஈனக் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தார். ஒரு புறத்தில் சுருண்டு படுத்திருந்த அந்த ஏழைச் சிறுவன் எழுந்து, அவரை நோக்கி வந்தான்.
“ஐயா, நான் ஓர் ஏழை. என்னை நீங்கள்தான் ஆதரிக்க வேண்டும் !” என்று கெஞ்சும் குரலில் அவன் பேசினான்.
சாத்தப்பர் அவனை ஏற இறங்கப் பார்த்தார்.
“ஐயா, நீங்கள் என்ன வேலை சொன்னாலும் செய்கிறேன். எனக்கு வயிற்றுக்குச் சோறு போட்டுக் காப்பாற்றினால் போதும் !” என்று மேலும் கெஞ்சினான் அந்தச் சிறுவன்.
சாத்தப்பர் அவனை எதுவும் கேட்கவில்லை. வீட்டினுள் அழைத்துச் சென்று சாப்பாடு போடுமாறு தன் ஆட்களுக்குக் கட்டளையிட்டார்.
அந்தச் சிறுவன் பெயர் மாணிக்கம். அவன் சாத்தப்பர் அனுமதியுடன் வீட்டினுள் புகுந்து விட்டான். அங்கேயே சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். அவனுக்கு எந்த வேலையும் கொடுக்கப்படவில்லை. சாத்தப்பர் வீட்டில் தேவைக்கு மேல் ஆட்கள் நிறைந்திருந்தார்கள். வேலை எதுவும் பாராமலே சாப்பிட்டுக் கொண்டு பல பேர் இருந்தார்கள். அவரோ தம் வாணிகத்தை நாடி வெளியூர்களில் சுற்ற வேண்டியிருந்தது. வீட்டைக் கவனிக்க ஆள் இல்லை. இந்நிலையில் அங்கு வந்து சேர்ந்த மாணிக்கம் சில நாட்கள் வரை மற்ற சிலரைப் போல் சாப்பிட்டுக் கொண்டு, வேலை செய்யாமல் இருந்தான்.
ஆனால், வேலை செய்யாமல் இருக்க முடியவில்லை. ஆகவே, தானாக ஒரு வேலையை மேற்கொண்டான். அந்த வீட்டில் அதிகமாக உழைத்தவன் சமையல்காரன்தான். அவனுக்குக் கூட வேலை பார்க்க ஒரே ஒரு வேலைக்காரன்தான் இருந்தான். அத்தனை பேருக்கும் சாப்பாடு தயாரிப் பதில், அவன் நாள்தோறும் மூச்சு வாங்க வேலை செய்ய வேண்டியிருந்தது. மாணிக்கம் சமையல்காரனுக்கு ஒத்தாசையாக வேலை பார்த்தான். சமையல்காரனுக்கும் மாணிக்கத்தை மிகவும் பிடித்திருந்தது.
சாத்தப்பர் வீட்டில் தங்கும் நாட்களில் மாணிக்கம் அவருக்குச் சாப்பாடு பரிமாறுவான். மேலும் அவர் சொல்லுகிற சிறு வேலைகளைக் கவனிப்பான். மற்றநாட்களில் சமையல்காரனுக்குத் துணையாக வேலைபார்த்துக்கொண்டு இருப்பான்.
சாத்தப்பர் ஒரு நாள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, அவன் ஊர் பேர் முதலியவற்றை விசாரித்தார். மாணிக்கம் தன் குடும்பத்தைப் பற்றிய விவரங்களைக் கூறினான். எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்ட சாத்தப்பர், அவன் தனக்கு உறவு முறையுள்ளவனாக இருப்பதைத் தெரிந்து கொண்டார். அவன் தன்னிடம் வந்து சேர்ந்தது பற்றி மனத்திற்குள் மகிழ்ச்சியடைந்தார்.
மாணிக்கம் தன் தூரத்து உறவினன் என்பதை அவர் அவனுக்குத் தெரிவிக்கவில்லை.
மாணிக்கம் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டு, அவர் மாளிகையிலேயே காலம் கழித்து வந்தான்.
ஒரு நாள் சாத்தப்பர் வெளியூருக்குச் சென்றிருந்தார். அன்று இரவு திடீரென்று எதிர்பாராத விதமாக ஆயுதந் தாங்கிய கொள்ளைக்காரர்கள் நூறு பேர் அவருடைய வீட்டை வளைத்துக் கொண்டார்கள். இருந்தவர்களை யெல்லாம் கட்டிப் போட்டார்கள். எதிர்த்தவர்களையெல்லாம் வெட்டிப்போட்டார்கள். வீட்டில் இருந்த பொருள்களையெல்லாம் கொள்ளையடித்துச் சென்றார்கள்.
சாத்தப்பர் வெளியூரிலிருந்து திரும்பி வந்த போது, வீடு வெறிச்சென்று இருந்தது.
அவருடைய மனைவியும், மகளும், சமையற்காரனும், மாணிக்கமும் மட்டும்தான் வீட்டில் இருந்தார்கள். மற்ற உறவினர்கள் எல்லோரும் போய் விட்டார்கள்.
வீடு கொள்ளை போன செய்தியைக் கேட்டுச் சாத்தப்பர் இடிந்து போனார். போதாக் குறைக்குக் கடன்காரர்கள் வேறு வந்து விரட்டத் தொடங்கினார்கள். அவர், தம் கையிலிருந்த முத்துக்களை விற்றுக் கடன்களை அடைத்தார். பின் அவர் மிக எளிய வாழ்க்கை நடத்த நேர்ந்தது. அவர் மனைவி தன் தாய் வீட்டுக்குச் செல்வதாகச் சொல்லி மகளை அழைத்துக் கொண்டு போய் விட்டாள். சமையல்காரனும் வெளியேறிச் சென்று விட்டான்.
கடைசியில் மாணிக்கம் ஒருவன்தான் அவருக்குத் துணையாக அந்த வீட்டில் மிஞ்சினான். அவர் ஏதாவது கொண்டு வந்தால், அதை வைத்துச் சமையல் செய்வான். அவருக்குச் சப்பாடு போட்டுத் தானும் சாப்பிடுவான். அவர் ஏதும் கொண்டு வரவில்லையானாலும், வீட்டில் சாப்பாடு தயாராக இருக்கும். மாணிக்கம் மற்ற வீடுகளில் சென்று வேலை செய்வான். அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, அரிசியும் காய்கறிகளும் வாங்கி வருவான். அவற்றைச் சமைத்து வைப்பான்.
சாத்தப்பருக்கு எத்தனையோ கவலைகள் இருந்தன. ஆனால், சாப்பாட்டுக் கவலை மட்டும் இல்லை. அந்தக் கவலை ஏற்படாதபடி மாணிக்கம் பார்த்துக் கொண்டான்.
ஒரு நாள் சாத்தப்பர் மாணிக்கத்தைப் பார்த்து, “தம்பீ, என்னிடம் கையில் எதுவுமே இல்லை. பிச்சை எடுக்க வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டேன். எல்லோரும் போய் விட்டார்கள். நீ மட்டும் ஏன் இருக்கிறாய்?” என்று கேட்டார்.
“ஐயா, எல்லோரும் போய்விட்டால் என்ன ஆவது ? நான் துன்பப்பட்ட காலத்தில் நீங்கள் அன்போடு வரவேற்று ஆதரித்தீர்கள். உங்கள் துன்பத்தில் நான் உதவ வேண்டியது என் கடமை அவர் மீண்டும் பழைய நிலைவந்து விட்டார். நாணயமும் நேர்மையும் அவருடைய வேகமான முன்னேற்றத்துக்குக் காரணமாயிருந்தன. அல்லவா ! என்னால் முடிந்தவரை உங்களுக்கு உதவியாயிருக்க வேண்டும் என்பதற்காகவே இங்கு இருக்கிறேன்!” என்றான் மாணிக்கம்.
அதைக் கேட்ட சாத்தப்பருக்குக் கண்களில் நீர் தளும்பியது.
“தம்பி மாணிக்கம், நீதான் என் உண்மையான உறவினன். துன்பத்திலும் துணையாக நிற்கும். நீதான் என் அன்புக்குரிய உறவினன்!” என்று உணர்ச்சியோடு கூறினார்.
பிறகு தம் மாளிகையை விற்றுக் கிடைத்த பணத்தைக் கொண்டு மீண்டும் முத்து வாணிபம் செய்தார். மிக விரைவில் அவர் மீண்டும் பழைய நிலைவந்து விட்டார். நாணயமும் நேர்மையும் அவருடைய வேகமான முன்னேற்றத்துக்குக் காரணமாயிருந்தன.
மாணிக்கம் கடைசிவரை அவரை விட்டு நீங்கவில்லை. அவரும் கடைசிவரை மாணிக்கத்தைத் தம் கூடவே வைத்துக்கொண்டார். சமையல் வேலையில் மட்டுமல்லாமல், முத்து வாணிகத்திலும் அவருக்குத் துணையாயிருந்தான் மாணிக்கம்.
புதிய செல்வத்தைக் கொண்டு, சாத்தப்பர் இரண்டு மாளிகைகள் கட்டினார். ஒன்று, அவருக்கு: மற்றொன்று, மாணிக்கத்துக்கு.
கருத்துரை:- ஒருவன் துன்பமுற்ற காலத்தில் அவனை விட்டு ஓடிப் போவோர் உண்மையான உறவினர் ஆகார். எக்காலத்திலும் கூட இருப்பவர்களே உண்மை உறவினராவர்.
★★★