நல்வழிச் சிறுகதைகள்-2/மலை நாட்டுவீரன்


மலை நாட்டு வீரன்

வளநாட்டை ஒர் அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு இரண்டு மக்கள் இருந்தார்கள். மூத்தவன் பெயர் அரியநாதன். இளையவன் பெயர் வடுகநாதன்.

அரியநாதனும் வடுகநாதனும் கூடப்பிறந்தவர்களே தவிர, ஒருவருக்கொருவர் பெரும் பகையாயிருந்தனர். சிறு வயது முதலே எதையெடுத்தாலும் இருவருக்கும் போராட்டம்தான்.

இருவருக்கும் சண்டை வரக்கூடாதென்பதற்காக அரசர் எந்தப் பொருளை வாங்கினாலும் இருவருக்கும் சமமாகவே வாங்குவார். அப்படியிருந்தும் அவர்கள் சண்டையிட்டுக் கொள்வார்கள்.

ஒரு நாள் அரசர் அவையில் இருக்கும்போது, அயல் நாட்டிலிருந்து வந்த தூதுவன் ஒருவன்,சுவை மிகுந்த மூன்று மாங்கனிகளைக் கொண்டு வந்தான். அரசர் தமக்கு என்று ஒன்றை வைத்துவிட்டு, அரியநாதனுக்கும் வடுகநாதனுக்கும் ஆளுக்கொரு கனியைக் கொடுத்தார்

இரண்டு மாம்பழங்களும் ஒரே மாதிரியிருந்தன. அவற்றை முன்னிட்டுச் சண்டை வரவே காரணமில்லை. ஆனால், அரியநாதனும் வடுகநாதனும் சண்டையிடாமல் இருக்கவில்லை. அரசரிடமிருந்து மூன்றாவது கனியைக் கேட்டுப் போராடினர்.

பெற்ற பிள்ளைகள் கேட்கும்போது அதைக் கொடுக்க மாட்டேனென்று மறுக்க அரசருக்கு மனம் வரவில்லை. ஆனால், யாருக்குக் கொடுப்பதென்று அவரால் எளிதில் தீர்மானிக்கவும் முடியவில்லை.

ஆனால், யாருக்குக் கொடுப்பது என்பதை அந்தப் பிள்ளைகளே எளிதாக முடிவு கட்டி விட்டார்கள்.

இருவரும் வாட்போர் புரிவதென்றும், வெற்றி பெறுகிறவன் மாங்கனியைப் பெற்றுக் கொள்வ தென்றும் முடிவு கட்டினார்கள். எப்படியாவது பிரச்சினை தீர்ந்தால் போதும் என்று எண்ணிய அரசர், அவர்கள் முடிவிற்கு ஒப்புக் கொண்டார். அதுவே பெருங்கெடுதலாக முடிந்தது.

மாங்கணிக்காக வாட்போர்ப் போட்டியில் இறங்கிய இளவரசர்கள், அது வெறும் போட்டியென்பதை மறந்து, ஒருவரையொருவர் கொன்று ஒழிப்பது என்ற நோக்கத்தோடு வாள் சுழற்றத் தொடங்கி விட்டனர்.

போர் தொடங்கிய பிறகு அரசரால் அதைத்தடுத்து நிறுத்த முடியவில்லை. கடைசியில் அரியநாதன் படுகாயப்பட்டுப் போரில் தோற்றுக் கீழே விழுந்தான். அவனைப் பிழைக்க வைக்க அரசர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

இப்படி இருவருக்கும் எந்நேரம் பார்த்தாலும் சண்டையும் சச்சரவுமாகவேயிருந்தது.

இவர்களில் அரியநாதன் சிறந்த குணமுடையவன். வடுகநாதன் நல்ல குணம் சிறிது மற்றவன். பல சமயங்களில் அரசர் அரியநாதனைத் தாழ்ந்து போகும்படி கூறி விடுவார். அரியநாதன் நல்ல குணமுடையவனாயினும், தான் வடுகநாதனுக்கு இளைத்தவனல்ல என்று காட்டிக்கொள்ளும் வீராப்பு அவனிடம் இருந்தது. அரசர் வேண்டுகோளுக்காகவே அவன் பல சமயங்களில் விட்டுக் கொடுத்திருக்கிறான்.

எவ்வளவு அறிவுரைகள் கூறியும் அண்ணனுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வடுகநாதன் கருதவே இல்லை.

அரசர் உடல் தளர்ந்து இறப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, இவர்களைப் பற்றிய கவலையாகவேயிருந்தார்.

தாம் எவ்வளவோ பாடுபட்டு உருவாக்கிய அரசு, இப்பிள்ளைகளின் ஒற்றுமையின்மையால் சின்னா பின்னப்பட்டுப் போய்விடுமோ என்று அவருக்கு ஒரே கவலையாயிருந்தது.

தாம் இறக்கு முன் தம் அரசை இருவருக்கும் பிரித்துக் கொடுத்து, இரு வேறு நாடுகளாகச் செய்ய வேண்டும் என்றுதான் எண்ணியிருந்தார். ஆனால், பிள்ளைகளின் போக்கை நன்குணர்ந்த மதியமைச்சர் இந்நோக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் நாடு சீர் குலைந்து விடும் என்றே கருதினார்.

அரியநாதன் கையில் முழுப் பொறுப்பையும் ஒப்படைத்து, வடுகநாதனை அவன் கீழ் பணி புரியும்படி செய்ய வேண்டும் என்று மதியமைச்சர் ஆலோசனை கூறினார். இந்த ஆலோசனையை அரசர் ஏற்றுக் கொண்டார். மூத்தவனாகிய அரியநாதனுக்கு முடி சூட்டுவது பொருத்தம் என்று தான் அவர் எண்ணினார்.

சமமாகப் பிரித்துக் கொடுத்தாலே சண்டைக்கு வரக்கூடிய வடுகநாதன், இந்த முடிவையறிந்த போது மிகுந்த ஆத்திரம் கொண்டான். அன்றே அரியநாதனைக் கொன்று விடுவதாகக் கூறி ஆர்ப்பரித்தான்.

அரியநாதன் தன் நண்பர்கள் சிலருடன் வேட்டைக்குச் சென்றிருந்தான். வடுகநாதன் நூறு ஆயுதம் தாங்கிய வீரருடன் வேட்டைக் காட்டை வளைத்துக் கொண்டான். இச்செய்தியைக் கேள்விப் பட்ட அரசர், அன்றே மனமுடைந்து இறந்து போனார். அரியநாதன் தன் நண்பர்களின் உதவியால் வேட்டைக் காட்டிலிருந்து தப்பி விட்டான்.

அரண்மனைக்கு வந்த அவன், அரச பதவி ஏற்றான். தம்பி வடுகநாதனை நாடு கடத்தி விட அப்போதே ஆணையிட்டான். அரச ஆணையை மீறி நாட்டில் இருக்க முடியாது. ஆகையால் வடுகநாதன் வளநாட்டை விட்டு வெளியேறினான். பகையரசர் சிலர் உதவியைப் பெற்று அவன் வளநாட்டின் மீது படையெடுத்து வந்தான்.

கூடப்பிறந்த இவன் சிறிது கூட அன்பில்லாமல் நடந்து கொண்டு வருகிறானே என்று அரியநாதன் வருந்தினான். படையெடுப்பை எதிர்த்து நிற்க அவன் தன் போர் வீரர்களை ஆயத்தப்படுத்தினான்.

மலை நாட்டிலிருந்து ஒரு வீரன் வந்தான். அவன் அரசன் அரியநாதனைப் பேட்டி கண்டான். படையில் தன்னை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டினான்.

அவன் எப்படிப்பட்ட வீரனென்று அரிய நாதன் சோதித்துப் பார்த்தான். விற் போட்டியிலும் வாள் போட்டியிலும் அந்த மலை நாட்டு வீரன் வெற்றியுற்றான். அதனால் மனம் மகிழ்ந்த அரிய நாதன் அவனைத் தன் படைத் தளபதிகளில் ஒருவனாக அமர்த்தினான். அந்த மலை நாட்டு வீரன் பழகப் பழக இனியவனாக இருந்தான். விரைவில் அவன் அரியநாதனின் அன்புத் தோழனாகி விட்டான்.

மலை நாட்டு வீரனும் அரியநாதனும் எப்போதும் ஒன்றாகவே இருந்தார்கள். அரசாங்க நடவடிக்கைளை இருவரும் கலந்தாலோசித்தே முடிவெடுத்தார்கள். சாப்பிடும் போதும் வேட்டைக்குப் போகும் போதும் இருவரும் ஒன்றாகவே சென்றார்கள். அவர்கள் பழகிய விதத்தைக் கண்ட மக்கள், ‘இவர்கள் அண்ணன் தம்பிகளைப் போல் பழகுகிறார்கள்’ என்று பேசிக் கொண்டார்கள்.

மக்கள் தங்களைப் பற்றிப் பேசிக் கொள்ளும் செய்தி ஒரு நாள் அவர்கள் காதுக்கே எட்டியது. இந்தச் செய்தியைக் கேட்டது முதல் அரியநாதன் ஒரு மாதிரியாக இருந்தான். அவன் மனம் எதையோ நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தது.

மலை நாட்டு வீரன், அரியநாதன் திடீரென்று கவலைப்படுவதன் காரணத்தைக் கேட்டான்.

“நானும் நீயும் அண்ணன் தம்பி போல் பழகு வதாக மக்கள் பேசிக் கொள்ளுகிறார்கள். ஆனால், எனக்கு உண்மையிலேயே ஒரு தம்பி இருக்கிறான். அவன் உன் மாதிரி என்னுடன் அன்பாகப் பழக வில்லை. பகைவனாகக் கருதிப் பழகுகிறான். இதை எண்ணிப் பார்த்தபோது என் மனம் துன்பமும் கவலையும் அடைகிறது” என்று அரசன் அரிய நாதன் கூறினான்.

“அரசே, கவலைப்படாதீர்கள். எனக்கு ஒர் ஆண்டு காலம் தவணை கொடுங்கள். உங்கள் தம்பியை உங்களிடம் அன்புறவு கொள்ளும்படி செய்கிறேன் !” என்றான் மலை நாட்டு வீரன்.

‘உண்மையாகவா ? உன்னால் முடியுமா ?” என்று ஆர்வத்தோடு கேட்டான் அரியநாதன்.

"முடியும் !” என்று உறுதியாகக் கூறினான் மலை நாட்டு வீரன்.

“உன்னால் முடியுமென்றால் முதலில் அதைச் செய். நானும் என் தம்பியும் பிறந்தது முதல் ஒருவரையொருவர் பகைத்தே வாழ்ந்தோம். எந்தச் செயலிலும் நாங்கள் ஒன்றுபட்டு நின்றதேயில்லை. ஒருவரையொருவர் கொன்று விடக் கூடச் சில சமயங்களில் முயன்றிருக்கிறோம். வீரா, உன்னோடு பழகியதிலிருந்து நான் உடன் பிறந்தவர்களிடையே எப்படிப்பட்ட உறவு நிலைக்க வேண்டுமென்பதை உணர்ந்து வருகிறேன்.

“எனக்கு ஏதோ ஒர் ஏக்கம் இப்போது மனத்திலே தோன்றி விட்டது. அண்ணன் தம்பியாகப் பழக வேண்டிய நாங்கள் இப்போது ஒருவர் மீதொருவர் போர் தொடுத்துக் கொண்டு நிற்கிறோம். உடன் பிறந்தவர்களாயிருந்தும் சுற்றத்தார்களாக இல்லாமல் பகைவர்களாக நிற்கிறோம். எங்கள் வாழ்நாளெல்லாம் இப்படியே பகைமையில் கழிந்து விடுமோ என்று கூடப் பயப்பட வேண்டியிருக்கிறது. வீரா, நீ எவ்வாறேனும் என் தம்பியை என்னுடன் உறவு கொள்ளச் செய்து விட்டால், உன்னை என் சின்னத் தம்பியாகவே பாவித்து அன்பு பாராட்டுவேன்!” என்றான் அரசன் அரியநாதன்.

“அரசே, கவலைப்படாதீர்கள். இப்போது கூட நீங்கள் என்னைத் தம்பி போல்தான் நடத்துகிறீர்கள். உங்களுக்கு உங்கள் தம்பியின் மீது அன்பு சுரந்தது ஒன்றே போதும். உங்கள் தம்பியை உங்களிடம் சேர்க்க, அந்த அன்பே துணை புரியும். நாளையே நான் புறப்படுகிறேன். விரைவில் உங்கள் தம்பியை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறேன்” என்றான் அந்த மலை நாட்டு வீரன்.

அவன் கூறியபடி மறுநாளே அங்கிருந்து புறப்பட்டான். வடுகநாதனுடைய போர்க் கூடாரத்தில் அவனைப் போய்ச் சந்தித்தான். தன் திறமைகளைக் காட்டி அவனிடம் ஒரு போர்ப் படைத் தலைவனாக வேலையில் சேர்ந்து கொண்டான். பழகப் பழக வடுகநாதனுக்கு அந்த மலைநாட்டு வீரனை மிகவும் பிடித்திருந்தது.

ஒரு நாள் வடுகநாதன் போர் வீரர்களின் கூடாரங்களின் ஊடே பொழுது போக்க நடந்து சென்று கொண்டிருந்தான். ஒரு கூடாரத்தின் அருகே வந்த போது, அங்கு சில வீரர்கள் கூடி யிருந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்களின் பேச்சு வடுகநாதன் கவனத்தை ஈர்த்தது.

“அந்த மலை நாட்டு வீரன் வந்து இரண்டு வாரங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் நம் தலைவர் அவனிடம் உறவு கொள்ள ஆரம்பித்து விட்டாரே !” என்றான் ஒரு வீரன்.

“வேலைக்கு வந்தவனைப் போலவா நடத்துகிறார் ! தன் தம்பி போலல்லவா நடத்துகிறார் !” என்றான் மற்றொரு வீரன்.

“தம்பி போல நடத்துகிறார்!” என்ற சொற்கள் வடுகநாதன் மனத்தில் ஆழப் பதிந்தன.

அவன் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டான். “நான் அந்தப் புது வீரனை நடத்துவது தம்பி போல் இருக்கிறதா? என் அண்ணன் என்னை நடத்துவது எப்படியிருக்கிறது? அண்ணன் தம்பிகளாகப் பிறந்த நாங்கள் அண்ணன் தம்பி போல நடந்து கொள்ளவில்லை. ஆனால், எங்கிருந்தோ வந்த இந்த மலைநாட்டு வீரனுடன் நான் பழகுவது அண்ணன் தம்பி போல இருக்கிறது என்கிறார்கள். ஏன் இந்த வேறுபாடு?- இப்படிப்பட்ட சிந்தனைகள் அவன் மனத்தில் இடம் பெற்றன. இந்தச் சிந்தனைகள் நாளுக்கு நாள் அவன் உள்ளத்திலே வளர்ச்சி பெற்றன.

அந்த மலைநாட்டு வீரன் அவனிடம் மிக அன்பாகப் பழகினான். பண்பாக நடந்து கொண்டான். அவன் ஒரு வேலையை, சொல்லி முடித்த சிறிது நேரத்திற்குள் செய்து முடித்தான். அவன் செய்கை, பேச்சு, புன்சிரிப்பு ஒவ்வொன்றும் வடுகநாதனின் உள்ளத்தில் அன்புணர்ச்சியைத் தூண்டுவனவாகவே இருந்தன.

இந்த அன்புணர்ச்சி வளர வளர, அண்ணனுடன் போயிருந்து தம்பியாக வாழ வேண்டுமென்ற ஒருவிதமான ஆவலும் அவன் உள்ளத்தே தோன்றி வளர்ந்தது. ஆனால் அந்த ஆவலுக்குப் பணி வதற்கு அவனுடைய கர்வ உணர்ச்சி இடங் கொடுக்கவில்லை.

மலைநாட்டு வீரன் ஒருநாள் வடுகநாதனுடன் தனித்திருந்து பேசிக் கொண்டிருந்தான். அப்போது பேச்சுவாக்கில், தன் அண்ணனுடன் பகைமை ஏற்பட்ட, கதையைக் கூறினான் வடுகநாதன். தன்னை, அண்ணன் நாட்டை விட்டு விரட்டி விட்டதாகக் கூறினான். தன் குறைகளை மறைத்து அவன் தன் அண்ணன் மீது குற்றஞ்சாட்டிப் பேசினான்.

மலைநாட்டு வீரனுக்கு அவர்கள் கதை முழுவதும் நன்றாகத் தெரியும். இருந்தாலும் தெரியாதவன் போலவே பேசினான்.

“அரசே, தங்கள் அண்ணன் தங்களை விரட்டியடித்தது தங்களுக்கு மட்டுமல்ல, அவருக்குமே பேரிழப்புதான். தங்களைத் தன் படைத் தலைவராக வைத்துக் கொண்டு நாட்டை ஆண்டிருந்தால், தங்கள் போர்த் திறமையால், எத்தனை நாடுகளையோ வசப்படுத்தியிருக்கலாம். நீங்கள் இருவரும் ஒரு பேரரசின் தலைவர்களாக வளர்ந்திருக்கலாம். தங்கள் அண்ணன் தங்களை விரட்டியடித்ததன் மூலம் இந்த வாய்ப்பை இழந்து விட்டார்” என்று மலைநாட்டு வீரன் கூறினான்.

மலை நாட்டு வீரன் வடுகநாதனுடன் சேர்ந்து அரியநாதனைக் குறை கூறிப் பேசினாலும், அது வடுகநாதன் உள்ளத்தைச் சுட்டது .

“அண்ணன் என்னை விரட்டவில்லை; அவன் விரட்டும்படியாக நான்தான் நடந்துகொண்டேன் !” என்று அவன் தன்னைத் தானே நொந்து கொண்டான். மலை நாட்டு வீரன் கூறிய கருத்து அவன் மனதில் ஆழப் பதிந்து பெரிதாக வளர்ந்தது.

"தானும் தன் அண்ணனும் ஒற்றுமையாக இல்லாததால், மற்ற அரசர்களின் துணையை நாட வேண்டிய நிலையில் இருக்கிறோம் ; இருவரும் ஒற்றுமையாக இருந்தால் மாபெரும் வெற்றிச் சிறப்பையடையலாம்,’ என்ற எண்ணம் வலுத்தது.

பேசிப் பேசி அந்த மலை நாட்டு வீரன் பாச உணர்ச்சியை வடுகநாதன் உள்ளத்திலே வளரச் செய்தான். கடைசியில் கூடப்பிறந்தவனிடம் சரணடைவதில் அவமானம் எதுவும் இல்லை என்று கருதுகிற அளவுக்கு வடுகநாதன் மனத்தைக் கரைத்து விட்டான் மலைநாட்டு வீரன்.

வடுகநாதன் அண்ணனுக்கு ஒரு சமாதானக் கடிதம் எழுதியிருந்தான். அரியநாதன் தன் அன்பையெல்லாம் கொட்டி வைத்து, தம்பியை ஆவலோடு வரவேற்கக் காத்திருப்பதாகப் பதில் ஒலை அனுப்பினான்.

போர்க்களத்தில் சந்திக்கவிருந்த அண்ணனும் தம்பியும் அரண்மனையில் சந்தித்தார்கள். மலை நாட்டு வீரனும் கூட இருந்தான்.

அப்போது அரியநாதன் அந்த மலைநாட்டு வீரனை நோக்கிக் கூறினான்:

“உடன் பிறந்த நாங்கள் பகைவராக வாழ்ந் தோம். எங்கள் உடன் பிறந்த பகைமை என்னும் நோய் எங்களைக் கொன்றொழிக்கத் தக்க அளவு வளர்ந்து விட்டது. ஆனால், மலையில் விளையும் மூலிகை, நோயைக் குணப்படுத்துவது போல், எங்கோ மலைநாட்டிலிருந்து வந்த நீ, எங்கள் பகையைத் தீர்க்கும் மருந்து போல் பயன்பட்டாய்!” என்றான். இந்த வாசகங்கள் அவர்கள் மூவர் மனத்திலும் மகிழ்ச்சியை உண்டாக்கின.

கருத்துரை:-உடன் பிறந்தார் யாவரும் சுற்றத்தார் ஆகார் உடன் பிறந்தவர்களால் ஏற்படும் தீமைகளை, உடன் பிறவாத பிறர் வந்து நீக்குவதும் உண்டு.