நல்வழிச் சிறுகதைகள்-2/மாமரம்
கந்தன் வீட்டுத் தோட்டத்திலே ஒரு மாமரம் நின்றது. அந்த மாமரம் ஆண்டு தோறும் சித்திரை மாதத்திலே காய் காய்க்கும். சித்திரை மாத இறுதியில் அல்லது வைகாசி மாதத் துவக்கத்தில் அக்காய்கள் பழுக்கும்.
பழங்கள் மிகச் சுவையானவை. அந்தப் பழங்களைத் தேடி வந்து விலை கொடுத்து வாங்குவோர் பலர். அதனால், மாமரம் பழுத்தவுடன் கந்தனுக்கு நிறையப் பணம் கிடைக்கும்.
இருப்பது ஒரு மாமரம்தான். அதில் கிடைக்கும் பழங்களும் ஓரளவுதான். அதுவும் ஆண்டுக்கு ஒரு முறைதான் கிடைத்து வந்தது.
கந்தனுக்கு ஒருநாள் திடீர் என்று ஓர் எண்ணம் தோன்றியது. இந்த மாமரம் ஆண்டுக்கிரண்டு முறை பலன் தந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ! இந்த எண்ணம் தோன்றியது முதல் கந்தனுக்குத் தூக்கமே இல்லை.
மாமரத்தை ஆண்டில் இரு முறை பழுக்க வைப்பதற்கு என்ன செய்யலாம் என்று அவன் சிந்தித்தான். மாமரத்திற்கு வளம் தரக்கூடிய உரங்களைக் கொண்டு வந்து போட்டான். மாமரத்திற்கு நாள்தோறும் நீர் பாய்ச்சி வந்தான். அந்த நீர் தேங்கி தூர் அழுகி விடாதபடி பார்த்துக் கொண்டான்.
புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் மாமரம் காய் காய்க்கும் என்று எதிர்பார்த்தான். ஆனால், பூக் கூடப் பூக்கவில்லை. அடுத்த மாதங்களிலாவது பலன் கிடைக்குமா என்று எதிர்பார்த்தான். ஏமாற்றமேயடைந்தான்.
வழக்கம்போல் மாமரம் சித்திரை மாதத்தில் தான் காய் காய்த்தது.
ஆனால், அந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமான பழங்கள் கிடைத்தன. அவை மிகுந்த சுவையாகவும், பெரியனவாகவும் இருந்தன. முடிவில் கந்தன் ஓர் உண்மையை அறிந்து கொண்டான். மாமரம் ஆண்டுக்கு ஒரு முறைதான் பலன் தரும். உரமிட்டால் அதிகப் பலன் தரும் என்பதுதான் அந்த உண்மை.
கருத்துரை :- எவ்வளவு முயற்சி செய்தாலும் பலன் கிடைக்கும் காலத்தில்தான் கிடைக்கும். ஆனால், முயற்சிக்குத் தக்க பலன் உறுதியாகக் கிடைக்கும்.
★★★