நல்வழிச் சிறுகதைகள்-2/வீரன் திருமாவலி
தென்பாண்டி நாட்டிலே திருமாவலி என்று ஒரு வீரன் இருந்தான். அவனுடைய வீரச் செயல்களைப் பற்றிக் கேள்விப்பட்ட பாண்டிய மன்னர் அவனை அழைத்துத் தன் தானைத் தளபதிகளிலே ஒருவனாக அமர்த்திக் கொண்டார்.
மன்னரின் படைத்தளபதிகளிலே ஒருவனாகி விட்ட திருமாவலி நல்ல உடற்கட்டுடையவன். பயில்வான் போன்ற பலமுடையவன். பாய்ந்து வரும் குதிரையை எதிரில் நின்று கையினால் பிடித்து அடக்கும் வல்லமை அவனிடம் இருந்தது. தன் முதுகினால் மூச்சைப் பிடித்து யானையின் விலாப்புறத்திலே உந்தித் தள்ளினால் யானை அப்படியே கீழே சாய்ந்துவிடும். வெறும் பலம் மட்டும் உடையவனல்லன் திருமாவலி; திறமையும் மிக்கவன். வாள் வீச்சிலும், வேல் விளையாட்டிலும் வில் வளைத்தலிலும் மிகத் தேர்ந்தவன்.
போர்க்களத்திலே அவன் ஒரு மதயானை போல் திரிந்து விளையாடுவான். அவன் தன் வீர விளையாட்டைத் துவங்கி விட்டால் பகைவர்கள் பதறியோடுவார்கள்.
திருமாவலி சிறந்த போர் வீரனாக இருந்த தோடு, இறைபக்தி மிக்கவனாகவும் இருந்தான். தொடுத்த போரிலெல்லாம் அவன் வெற்றி வாகையைப் பெற்று வர- அவனுடைய பலம் காரணமா ? பக்தி காரணமா ? என்று சொல்ல முடியாமல் இருந்தது.
ஒரு முறை தன் மனைவிக்கு நோய் வந்தபோது, இறைவனுடைய திருத்தலங்களுக்கு யாத்திரை செல்வதாக திருமாவலி நேர்ந்து கொண்டான். மனைவி பிழைத்தெழுந்து பல நாட்களான பின்னும், அந்நேர்த்திக் கடன் செலுத்தப்படாமலே இருந்து வந்தது.
ஒரு நாள் அவன் மன்னரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, தன் தல யாத்திரையைத் துவக்கினான்.
திருமாவலி தல யாத்திரை துவங்கிய செய்தியை ஒற்றர்கள் மூலம் சேர மன்னன் அறிந்தான். சேர மன்னன் திருமாவலியின் மேல் ஆத்திரங் கொண்டிருந்தான். ஏனெனில், திருமாவலியின் தலைமையில் வந்த படைதான், சேர நாட்டைப் பாண்டிய நாட்டுக்கு அடிமைப்படுத்தியது. பாண்டிய நாட்டை வெல்லக் கூடிய படைபலம் இல்லாததால், மீண்டும் போர் புரிந்து நாட்டை மீட்கக் கூடிய சக்தி சேரனுக்கு அப்போது இல்லை. ஆனால், தன் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள, திருமாவலியைப் பிடித்து வந்து அவமானப்படுத்த வேண்டும் என்று எண்ணினான்.
திருமாவலி, படைத் தளபதியாக இருக்கும்போது அவனைப் பிடிக்க இயலாது. ஆகவே, அவன் தல யாத்திரை போகும்போது பிடித்துவர ஏற்பாடு செய்தான் சேரன்.
சேரனிடம் அர்ச்சுனன் என்றொரு வீரன் இருந்தான். அவன் சூழ்ச்சியிலும் வாள் வீச்சிலும் வல்லவன். அவன் தலைமையில் பத்து வீரர்களை அனுப்பினான் சேர மன்னன். எப்படியும் திருமாவலியைக் கையோடு பிடித்து வரவேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளை பிறப்பித்தான்.
திருமாவலி ஒவ்வொரு தலமாகச் சென்று சிவ பெருமானை வழிபட்டுக் கொண்டு வந்தான். திருப்பெருந்துறை என்ற சிவத் தலத்திற்கு அவன் வந்தபோது, அர்ச்சுனனும் பத்து வீரர்களும் அவ்வூருக்கு வந்து சேர்ந்தனர்.
திருமாவலி, திருப்பெருந்துறை இறைவனை வணங்கி விட்டு வெளியில் வந்தான். அவனுடன் கூடவே இரு சிவனடியார்களும் வந்தனர். மூவரும் மற்றொரு திருத்தலத்தை நோக்கிக் காட்டுப் பாதையில் சென்றனர்.
காட்டின் நடுவே திடீரென்று அர்ச்சுனனும் பத்து வீரர்களும் சிவனடியார்களைச் சூழ்ந்து கொண்டனர். திருமாவலியின் தலையிலும் மார்பிலும் கவசமில்லை. உருத்திராக்க மாலையும் திருநீறும்தான் இருந்தன. கையில் வாள் இல்லை; திருநீற்றுப் பைதான் இருந்தது.
வீரர்களோ வாளை உருவிக் கொண்டு சூழ்ந்து நின்றனர். மற்ற சிவனடியார்கள் இருவரும் மிரண்டு நின்றனர்.
“பேசாமல் எங்கள் பின்னே வாருங்கள். தப்ப முயன்றால் உயிர் பறிபோகும்!”என்று எச்சரித்தான், அர்ச்சுனன். அவன் குரலைக் கேட்டவுடனே, அவன் போர்க்களத்திலே தன்னை எதிர்த்து நின்ற சேர நாட்டு வீரரிலே ஒருவன் என்று திருமாவலி கண்டு கொண்டான்.
அவனுக்குக் கோபம் கொப்பளித்தது. ஆனால், வாள் பிடித்த வீர பதினொருவர் முன், வாளைக் கண்டால் நடுங்கும் சிவனடியார் இருவருடன் நிற்கும் தான், என்ன செய்ய முடியும் என்று சிந்தித்தான். பகைவன் கட்டளைக்குப் பணிந்து போவதா என்று அவன் வீர உள்ளம் கேள்வி போட்டது.
“வீரனே, நான் உன்னுடன் வர முடியாது. உங்களில் யாராவது ஒருவன் என்னுடன் மற்போரோ, வாட்போரோ செய்து தோற்கடித்து விட்டால், அதன்பின் வருகிறேன்!” என்று கூறினான் திருமாவலி.
“உன்னோடு இப்போது நாங்கள் போராட வரவில்லை; பிடித்துப் போகத்தான் வந்திருக்கிறோம். மேற்கொண்டு பேசாதே, நட!’ என்று ஆணையிட்டான் அர்ச்சுனன்.
போராடும் நெஞ்சுறுதியற்ற உங்களுக்கு வாள் ஒரு கேடா ?’ என்று சொல்லிக் கொண்டே திருமாவலி அர்ச்சுனன் மேல் பாய்ந்தான். சிவனடியார் இருவரும் திகிலுடன் ஒதுங்கி நின்றனர். அர்ச்சுனன் கூட வந்த பத்து வீரர்களும் திருமா வலியின் மீது பாய்ந்தனர். ஆயுதமற்ற ஒருவன் மீது வாள் பிடித்த பதினோரு வீரர் பாய்கிறோமே, இது சரிதானா ? வீரத்திற்கழகா ?’ என்று அவர்கள் சிந்தித்துப் பார்க்கவேயில்லை. கோழையான தங்கள் மன்னன் ஆணையை நிறைவேற்ற அவர்கள் பெருங்கோழைகளாக நின்று செயலாற்றினார்கள்.
திருமாவலி ஆள் எண்ணிக்கையைப் பற்றிக் கவலைப்படவில்லை. அர்ச்சுனன் மீது பாய்ந்து அவனோடு போராடும் போது மற்ற பத்து வீரர்களும், தங்கள் வாள்களால் அவன் முதுகிலும் விலாவிலும் தாக்கிக் காயப்படுத்தினார்கள். அர்ச்சுனனை மடக்கி அவன் கைவாளைப் பறித்த பின் திருமாவலியை அந்தப் பதினோரு பேராலும் எதிர்த்து நிற்க முடியவில்லை! அவன் கைக்கு வந்த வாள், காற்றினும் வேகமாகச் சுழன்றது. எதிர்த்து நின்ற பகை வீரர்களை ஒவ்வொருவராகக் கொன்று தீர்த்தது.
பத்து வீரர்களும் செத்து மடிந்தார்கள். கடைசியில் அர்ச்சுனன்தான் மீந்திருந்தான். “அற்பனே, நான் உன்னை வாள் கேட்டேன். தர மறுத்தாய்! இப்போது நான் உனக்கு வாள் தருகிறேன். வா போராட!” என்று இறந்த வீரர்களின் வாளில் ஒன்றைத் துாக்கி அவனை நோக்கி வீசினான் திருமாவலி.
அர்ச்சுனனால் அவனை எதிர்த்து நிற்க முடியவில்லை. விரைவில் அவனும் திருமாவலியின் வாள் வீச்சுக்குப் பலியானான்.
எதிரிகள் பதினொருவரும் இறந்து போயினர். ஆனால், திருமாவலியாலும் நிற்க முடியவில்லை. எதிர்பாராத விதமாகத் தாக்கப்பட்டதால் அவன் பலவிடங்களில் படுகாயப்பட்டிருந்தான். அதனால் அவன் சோர்ந்து விழுந்தான்.
ஒதுங்கி நின்ற சிவனடியார் இருவரும் அவனருகில் ஓடிவந்தனர். இறக்கும் நிலையில் அவன் இருப்பதைக் கண்டு மனம் பதைத்தனர்.
அவர்களில் ஒருவர் அவனை நோக்கி, “திருமாவலி! பகைவர் எண்ணிக்கையைப் பார்த்த பிறகாவது ஒதுங்கியிருக்க வேண்டாமா ? இப்போது உன் உயிர் போகப் போகிறதே ! என்ன செய்வோம் ?” என்று துடித்தார்.
“உயிரைப் பற்றிக் கவலைப்படுபவன் வீரனாயிருக்க முடியாது. பகைவர்க்குப் பணிந்து மானத்தையிழப்பதை விட, பதினொருவரைக் கொன்றேன் என்ற புகழோடு இறப்பது சிறந்தது. அதுதான் வீரம்! இந்த வீரம் உங்களுக்கு இல்லாவிட்டாலும் உங்கள் பிள்ளைகளுக்காவது இருக்கும்படி வளருங்கள் ! பாண்டிய நாடு வாழ்க!” என்று கூறிக் கொண்டே திருமாவலி கண்ணை மூடினான். அவனுடைய கடைசி மூச்சு அந்தப் பேச்சோடு நின்று விட்டது.
இந்த நிகழ்ச்சியைப் பாண்டிய மன்னன் கேள்விப்பட்டான்.
பகைவர்கள் யார் என்று தெரியாததால், எதுவும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ஆனால், திருமாவலியின் குடும்பத்துக்கு வீர மானியங்களும், அவன் பிள்ளைகளுக்கு வீர விருதுகளும் வழங்கிச் சிறப்பித்தான்.
கருத்துரை:- மானத்தைப் பெரிதாக மதிக்கும் வீரர்கள்எக்காலத்திலும் பகைவருக்குப் பணிய மாட்டார்கள்.
★★★