நவகாளி யாத்திரை/'லூலு' கோஷம்!
மகாத்மாவைப் பின்பற்றிச் செல்லும் அந்த அதிசய நாயைப் பற்றின சுவாரஸ்யமான சரித்திரம் முடிவதற்கும் நாங்கள் பிரார்த்தனை மைதானத்தை நெருங்குவதற்கும் நேரம் சொல்லி வைத்தாற்போல் இருந்தது. பிரார்த்தனை ஸ்தலத்துக்குள் பிரவேசித்த போது எனக்கு ஒரே வியப்பும் திகைப்பும் ஏற்பட்டன.
ஏனெனில், பிரார்த்தனை மைதானத்தில் கூடியிருந்த அத்தனை பெண்மணிகளும் ஒன்று சேர்ந்து, அழுகிற குழந்தையைத் தொட்டிலிலே போட்டு விளையாட்டுக் காட்டுவதுபோல் "லூலூலூ" என்று விநோதமாகக் குரல் கொடுத்தார்கள் மேற்படி விசித்திர 'லூலூ' கோஷம் இரண்டு நிமிட நேரம் இடைவிடாமல் நடந்தது.
இந்த அதிசயத்தைப்பற்றி அருகிலிருந்தவர்களிடம் விசாரித்தேன். அதற்கு அவர்களில் ஒருவர், "சாதாரணமாக முஸ்லிம் ஸ்திரீகள் தங்களுடைய மத குருக்களைக் காணும் போதும், மகான்களைத் தரிசிக்கும்போதும் மட்டுமே இத்தகைய மரியாதைக் குரலை உண்டாக்குவார்கள். இதை இங்கே 'ஹஅலுத்வனி' என்று கூறுகிறார்கள். இவ்வாறு அவர்கள் சத்தப்படுத்துவது முஸ்லிம் மாதர்களுக்கு மகாத்மாஜியிடம் உள்ள அன்பையும், பக்தியையும், மரியாதையையும் காட்டுகிறது. இதிலிருந்து காந்தி மகாத்மா இங்குள்ள முஸ்லிம்களுடைய உள்ளத்தை எவ்வளவு தூரம் கவர்ந்திருக்கிறார் என்பதைத் தாங்கள் யூகித்துக் கொள்ளலாம்" என்று கூறினார்.