நவகாளி யாத்திரை/பிரார்த்தனை வேளையில்...
காந்திஜி பிரார்த்தனை மேடையில் ஏறியதும், கண்களை மூடி மூன்று நிமிஷ நேரம் தியானத்திலே ஈடுபட்டிருந்தார். தியானம் முடிந்ததும் வழக்கப்படி குரான், கீதை இவற்றிலிருந்து சில சுலோகங்கள் படிக்கப்பட்டன. அப்புறம் காந்திஜி தமது பிரார்த்தனைப் பிரசங்கத்தை அரை மணி நேரம் ஹிந்தி பாஷையிலே
மொழிபெயர்ப்பு நடைபெறும் முக்கால் மணி நேரத்தை வீணாக்காமல் மகாத்மாஜி தம் கையோடு கொண்டுவந்திருந்த ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். என்ன எழுதுகிறார் என்று எட்டிப் பார்த்தேன். ஏதோ ஆங்கிலத்தில் கிறுக்கிக் கொண்டிருந்தார். மகாத்மாஜியின் எழுத்து சாட்சாத் பிரம்ம தேவனுடைய எழுத்தையே ஒத்திருந்தது! காந்திஜிக்குத் தினமும் பல இடங்களிலிருந்து பல பேர் பல பிரச்சினைகளைப் பற்றிக் கேள்விகள் கேட்டு கடிதம் எழுதுகிறார்கள் அல்லவா? அவற்றுக்கெல்லாம் அவர் மறுதினம் பிரார்த்தனை வேளையின்போது பதில் எழுதி வைத்துவிடுகிறார். இந்தக் கேள்விகளையும் பதில்களையும் இரவு பத்திரிகை நிருபர்கள் தங்கியுள்ள முகாமுக்கு அனுப்பி வைக்கிறார். நிருபர்கள் இரவோடு இரவாக அவற்றைப் படித்து, 'டைப்' செய்து, செய்தி ஸ்தாபனங்களுக்கு அனுப்பி விடுகிறார்கள். அந்தச் செய்தி பொழுது விடிவதற்குள் உலகத்தின் பல பாகங்களுக்கும் வாயு வேகத்தில் பரவி விடுகிறது.