நவகாளி யாத்திரை/கேள்வியும் பதிலும்

கேள்வியும் பதிலும்

அவதார புருஷரான காந்தி மகான் தமது அஹிம்சா யாத்திரையின் நோக்கம் என்னவென்பதைப் பற்றியும், தம்முடைய நோக்கம் வெற்றி பெறாவிட்டால் அதற்கு யார் பொறுப்பாளி என்பதைப் பற்றியும் நாலைந்து தினங்களுக்கு முன்னால், ஒரு கிராமத்தில் மிகவும் தெளிவாக, விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். அது வருமாறு:

“என்னுடைய லட்சியங்களுக்கு, கீழ் வங்காளத்தில் கடும் சோதனை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன் இத்தகைய ஒரு பெரிய சோதனையில் நான் ஈடுபட்டதில்லை. இந்தப் பரீட்சையில் நான் தேறாவிட்டால் அது நான் கடைப் பிடித்து வரும் அஹிம்சா தர்மத்துக்குத் தோல்வியாகாது. அஹிம்சைக் கொள்கையை ஸ்தாபிக்க நான் கடைப்பிடித்த முறைதான் தோல்வி அடைந்ததாகும். ஆகவே, நான் இப்போது தோல்வி அடைந்தாலும் பிற்காலத்தில் தோன்றப்போகும் உத்தமர்களும், மகான்களும் இந்த முயற்சியில் பெற்றி பெறுவார்கள் என்பது நிச்சயம்."

மேலும் மகாத்மா சிலர் மனத்திலுள்ள விகல்பமான சந்தேகம் ஒன்றுக்கும் பதில் கூறியிருக்கிறார்.

அதாவது, மகாத்மாவின் மாசு மறுவற்ற தூய வாழ்க்கையில் சந்தேகம் கொண்ட ஒரு துராத்மா கடிதத்தின் மூலம் ஒரு சந்தேகத்தைக் கிளப்பி இருந்தான்.

அந்தக் கடிதத்தை மகாத்மா பிரார்த்தனைக் கூட்டத்தில் எல்லோருடைய முன்னிலையிலும் வெளிப்படையாகப் படித்துவிட்டு அதற்குப் பதிலும் கூறினார். அது வருமாறு:

"என்னுடைய அந்தரங்க வாழ்க்கையில் சந்தேகம் கொண்ட ஒருவர் என்னுடைய பிரம்மசரிய வாழ்க்கையில் அவநம்பிக்கை தெரிவித்திருக்கிறார். நான் எப்போதும் ஸ்திரீகளுடன் நெருங்கிப் பழகுகிறேன் என்றும், அதனால் அவருக்குச் சந்தேகமாயிருக்கிறதென்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். இவரைப்போலவே இன்னும் சிலரும் என்மீது சந்தேகம் கொண்டிருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். எனக்கு அந்தரங்கம் என்பது எதுவும் கிடையாதாகையால், இந்தச் சந்தேகத்தைப் போக்க வேண்டியது என்னுடைய கடமை.

"கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக நான் பிரம்மசரியத்தைக் கடைபிடித்து வருகிறேன். ஐம்புலன்களையும் அடக்கி ஆண்டு வருகிறேன். நாவுக்கு ருசியான பண்டங்களைச் சாப்பிடுவது கிடையாது. உயிர். வாழ்வதற்கு எவ்வளவு ஆகாரம் அவசியமோ, அதைவிடக் குறைவாகவே சாப்பிட்டு வருகிறேன். என்னுடன் எந்த நேரமும் பெண்கள் இருந்து வருவது உண்மையே. பெண்களின் அருகிலேயே இருந்தும் பிரம்மசரியத்தைக் காப்பது தான் உண்மை யோகியின் லட்சணம்.

"காட்டிலேயே உள்ள ஒருவன் நான் ஜிலேபியே சாப்பிடுவது கிடையாது" என்றால் அதில் ஆச்சரியம் கிடையாது. ஏனெனில், காட்டிலே ஜிலேபி கிடைக்காது. ஆகையால், கிடைக்காத ஒரு பொருளைச் சாப்பிடுவதில்லை என்று சொல்லுவது ஆச்சரியமாகாது. அதைப் போலவே, பெண்களின் மத்தியில் இருந்து கொண்டு பிரம்மசரிய வாழ்க்கையில் வெற்றி பெறுவதுதான் உண்மையான வெற்றியாகும். இந்தப் பரீட்சையில் நான் பரிபூரண வெற்றி அடைந்திருக்கிறேன் என்று சத்தியமாகக் கூறுகிறேன்."