நவகாளி யாத்திரை/தர்மாபூர் மார்க்கம்
மறுநாள் கீழ்வானத்தில் சூரியன் உதயமாகித் தனது பிரயாணத்தைத் தொடங்கியதுதான் தாமதம், மகாத்மாஜியும் தமது குடிசையிலிருந்து உதயமாகித் தம்முடைய யாத்திரையைத் தொடங்கிவிட்டார். அன்று ஸ்ரீநகரிலிருந்து போகும் தர்மாபூர் யாத்திரையில் காந்திஜியுடன் சுமார் நூறு பேருக்கு மேல் நடந்து வந்தார்கள். மநுகாந்தியும் மற்றவர்களும் வழிநடைப் பிரயாணத்தின் அலுப்புத் தெரியாமலிருப்பதற்காக மகாகவி தாகூரின் கவிதைகளை நடைக்கு ஏற்ற மெட்டுப் போட்டுப் பாடிக் கொண்டே வந்தார்கள்.
மகாத்மாஜி, கவிதைகளை ரசித்துக்கொண்டே கைக் கோலை ஊன்றி வேகமாக நடந்து சென்றார். உடன் வந்தவர்கள் மகாத்மாவின் வேகத்துக்குச் சரியாகத்
மகாத்மாஜி நடந்து செல்லும் மார்க்கத்திலுள்ள வரப்புக்களையெல்லாம் நன்றாகச் செப்பனிட்டு அகலப்படுத்தி வைத்திருந்தனர். அங்கங்கே மூங்கில் பாலங்கள் உள்ள இடங்களில் தலைக்கு மேல் உயரமான வளைவுகள் கட்டி அவற்றை இளங்கொடிகளைக் கொண்டு ஜோடித்து வைத்திருந்தார்கள். சில வளைவுகளில், 'ஸ்வாகதம்', 'வெல்கம்', 'பாபுஜி! ஆயியே!' போன்ற வரவேற்பு வாசகங்களும் வேறு சில மணிமொழிகளும் எழுதி வைக்கப்பட்டிருந்தன.
நவகாளி ஜில்லாவின் இயற்கை அமைப்பு மகாத்மாவின் கிராம யாத்திரைக்கு மிகவும் ஒத்ததாயிருக்கிறது. தென்னை, மா, கமுகு முதலிய ஓங்கி வளர்ந்த விருட்சங்களடர்ந்த தோப்புகள் வழி நெடுக மண்டிக் கிடக்கின்றன. இதனால் எப்போதும், எந்த இடத்திலும் குளுமையான நிழல் மகாத்மாவைக் குதூகலத்துடன் வரவேற்கிறது. அந்தத் தோப்புக்குள்ளே ஒரு நீர்த்தேக்கமும், அதைச் சுற்றிச் சில வீடுகளும் காட்சி அளிக்கின்றன. நீர்த் தேக்கத்திலே நீந்தி விளையாடும் அன்னப் பட்சிகளும், தோப்புக்களிலே இனம் தெரியாத பற்பல பட்சி ஜாலங்களின் இன்னிசை கானமும் அப்படியே யாவரையும் வசீகரித்து விடுகின்றன.