நவகாளி யாத்திரை/வாபஸ் ஆனார்!
போகும் வழியில் "மகாத்மாஜி ஏன் செருப்பு அணிவதில்லை?" என்று நண்பர் மாணிக்கவாசகம் அவர்களிடம் விசாரித்தேன்.
"மகாத்மாவிடம் பரமபக்தி கொண்ட பஞ்சாபி ஸோல்ஜர் ஒருவர் ஒரு முறை மகாத்மாஜியைத் தரிசிப்பதற்காக நவகாளிக்கு வந்திருந்தார். காந்திஜி வெறுங்காலுடன் யாத்திரை செய்கிறார் என்ற செய்தியைப் பத்திரிகைகளிலே படித்த அந்த நண்பர் மகாத்மாவின் உபயோகத்துக்கென்று கையோடு ஒரு ஜதை மிதியடிகளையும் வாங்கி வந்திருந்தார். அந்தப் பாதரட்சைகளை மகாத்மாவிடம் தந்து, "தாங்கள் இதை அணிந்துகொள்ள வேண்டும். இது தங்களுக்கு நான் இடும் அன்புக் கட்டளை" என்று கூறினார்.
காந்திஜி சிரித்துக்கொண்டே, "ஏன்?" என்று கேட்டார்.
"தாங்கள் இந்தத் தேசத்தின் நாற்பது கோடி மக்களுக்கும் பொதுச் சொத்து. தங்களுடைய வயோதிக தசையில் இப்படிச் செருப்பின்றி வெறுங்காலுடன் நடந்து செல்வதை நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். இது விஷயத்தில் தங்களுடைய இஷ்டப்படி விட நாங்கள் தயாராக இல்லை. ஆகையால், தாங்கள் இதை அணிந்து கொண்டுதான் ஆகவேண்டும்" என்று ஒரு போடு போட்டார். ஆனால், காந்திஜியோ, ”இந்தியாவில் நாற்பது கோடி மக்களும், ஒரு ஏழை எளியவர்கூடப் பாக்கி இல்லாமல் செருப்பு அணிந்துகொள்ளும் காலம் ஏற்படும்போது நானும் அணிந்து கொள்வேன்; அதுவரை வெறுங் காலுடனேதான் நடப்பேன்" என்று கண்டிப்பாக மறுதளித்துவிட்டார். எனவே அந்தப் பஞ்சாபி ஸோல்ஜர் அதற்கு மேல் பேச வழியின்றி மகாத்மாஜியிடமிருந்து வெற்றிகரமாக வாபஸாகிவிட்டார்" என்று மாணிக்க வாசகம் கதையை முடித்தார். இதற்குள் பொழுது போய்விட்டதால் நாங்களும் எங்கள் குடிசையை நோக்கி வெற்றிகரமாக வாபஸ் ஆனோம்.