நவகாளி யாத்திரை/பாதரட்சை விஷயம்

பாதரட்சை விஷயம்

தினமும் பிரார்த்தனை முடிந்த பிறகு காந்திஜி சிறிது நேரம் வயல் வெளிகளில் உலாவிவிட்டுத் தமது குடிலுக்குத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அன்று ஸ்ரீநகரில் பிரார்த்தனை முடிந்ததும் மகாத்மாஜியுடன் உலாவுவதற்கு இன்னும் சிலரும் சென்றார்கள். நானும் கும்பலோடு சேர்ந்து கொண்டேன். உலாவும் போது காந்திஜியின் பாதங்களைக் கவனித்தேன். அப்போதுதான் காந்திஜியின் பாதங்களில் புண் என்கிற விஷயம் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. இருந்தாலும் மகாத்மாஜி அதைச் சற்றும் பொருட் படுத்தாமல் காடு மேடுகளிலெல்லாம் காலில் செருப்பு அணியாமலே நடந்து கொண்டிருந்தார். காந்தி மகாத்மா வெறுங்காலுடன் நடந்து போகும் காட்சியைக் கண்ட என் மனம் சொல்லொணாத வேதனைக்குள்ளாயிற்று.

"ஆகா! உலகம் போற்றும் உத்தமரான மகாத்மாஜி, கல்லிலும் முள்ளிலும் பனித்துளிகள் நிறைந்த சில்லென்ற களிமண் தரையிலும் கால் கடுக்க நடந்து செல்லும்போது நாம் மட்டும் செருப்புடன் நடந்து செல்வதா? என்று ஒர் எண்ணம் உண்டாயிற்று. தட்சணமே என்னுடைய காலிலிருந்த செருப்புக்களைக் கழற்றிக் கையிலிருந்த கித்தான் பைக்குள் போட்டுக் கொண்டேன். (என்னுடைய செருப்புக்களில் ஒன்று அந்தச் சமயம் அறுந்து போயிருந்ததென்பதையும், அது என்னுடன் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியிருந்தது என்பதையும் நேயர்களுக்குக் காதோடு சொல்லி வைக்கிறேன்!)